ஊழிநூல் சுவடி-மருத்துவ முறைகள்

‘ஊழிநூல்’ சுவடி – மருத்துவ முறைகள்
முன்னுரை
நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற அழியாச் சொத்து சுவடிகள். தமிழில் கிடைத்த சுவடிகளில் பெரும்பாலானவை மருத்துவச் சுவடிகளாகும். மருத்துவ முறைகளுள் முன்னோடியாக விளங்குவது சித்தமருத்துவமாகும். சித்தர்களால் உருவாக்கப்பட்டுள்ளதால் சித்த மருத்துவம் எனப் பெயர் பெற்றுள்ளது. இம்மருத்துவத்தை மக்கள் அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் சுவடியில் எழுதி வைத்தனர். இச்சுவடிகளுள் ‘ஊழிநூல்’ என்ற சுவடியும் ஒன்று. இச்சுவடி காலரா நோயைப் பற்றியும் அந்நோயைத் தீர்க்கும் மருத்துவ முறைகளைப் பற்றியும் கூறுகின்றது.
‘ஊழிநூல்’- பெயர்காரணம்
தமிழகராதியில் ‘ஊழி’ என்பதன் பொருள் யுகமுடிவு, ஊழிக்காற்று, ஊழிக்காலம், உலகம் முடிவுகாலம், உறைகாலம், ஒருபேய், மடங்கல், நெடுங்காலம், நிலம், வாழ்நாள், ஒரு காலக்கணிப்பு, சிவனின் ஊழித்தாண்டவம் எனப் பல்வேறு பொருள்களில் ஆளப்பட்டுள்ளது. சுவடியில் கூறப்பட்டுள்ள ஊழிநோய் என்பதன் விளக்கம் பற்றிச் சுவடி கொடுத்த திரு. மோகன்ராஜ் அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார். “ஊழி என்பது ஒன்றின் முடிவு என்பதாகும்”. அதாவது ஊரில் ஒருவருக்கு ஊழி நோய் வந்தால் தொடர்ச்சியாக மரணம் நடைபெறும். இவ்வாறு இக்கொடிய நோயினால் ஊரிலுள்ள மக்கள் அனைவரும் இறந்து போவதால் ஊழிக்காலம், ஊழியின் முடிவு என்றெல்லாம் அழைப்பதாக அவர் கூறினார். பின்பு ஊழிநோயின் வேறு பெயர்களாக வாந்திபேதி, வயிற்றுப்போக்கு, போதிநோய், சாமளாதேவி நோய் போன்றவற்றைக் கூறியுள்ளார்.
‘ஊழிநூல்’- அறிமுகம்
‘ஊழிநூல்’ என்ற சுவடி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த திரு. மோகன்ராஜ் என்பவரிடம் இருந்து பெறப்பட்டது. இச்சுவடி 27 செ.மீ. நீளமும், 2.7 செ.மீ. அகலமும் உடையது. ஓவ்வொரு ஏடுகளிலும் 6 வரிகள் உள்ளன. மொத்தம் 41 ஏடுகள் உள்ளன. அதில் 61 செய்யுள்கள் இடம்பெற்றுள்ளது.
இச்சுவடி பேச்சுவழக்குச் சொற்களுடன் மலையாள வழக்குச் சொற்கள் கலந்து வந்துள்ளதால் இதன் ஆசிரியர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்கலாம். ஆனால் ஆசிரியர் பெயர் இடம்பெறவில்;;லை. பாடல்களின் இடையில்,
“உகந்த பரதாபம் ஓடுமென்று முனிசெப்பினாரே” (ப.எண்-15)
“பதமாக சளியிறங்கல தீருமென்று
செப்பினார் முனிவர் தானே” (ப.எண்-18)
“செவியடைப்பு தீருமென முனி செப்பினாரே” (ப.எண்-28)
“வயிற்றில் கறும்பல் சளியிறங்கல்
தீருமென்று முனிதானும் செப்பினாரே” (ப.எண்-31)
என்று முனிவர் கூறியதாக செய்யுள் அடிகளில் கூறுகின்றார் ஆசிரியர். பொதுவாக, அகத்திய முனிவர் பெயரில் பல மருத்துவச் சுவடிகள் காணப்படுகின்றன. ஆகவே முனிவர் என்ற சொல் அகத்தியரைக் குறிப்பதாக இருக்கலாம். அகத்தியர் எழுதிய சுவடிகளில் இருந்து செய்திகளை வேறு யாரோ ஒருவர் தேவைக்கேற்ப பெயர்த்தெழுதி இச்சுவடியை உருவாக்கி இருக்கலாம் என்று கருத இடமுண்டு.
‘ஊழிநூல்’ என்ற சுவடியில் 25 உட்தலைப்புகளில் மொத்தம் 70 நோயைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயின் பெயர்கள், மருத்துவ முறைகள், மருத்துவப்பொருட்களின் அளவுகள் போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன.
 ஊழி நோய்க்குச் சாராய வாற்று, சாராய வறுப்பு
 ஊழி நோய்க்குக் குளிகை (மாத்திரை)
 ஊழி நோய்க்குக் கசாயம்
 ஊழி நோய்க்குப் பொடி (சூரணம்)
 ஊழி நோய்க்குப் பற்பம்
 ஊழி நோய்க்குத் தைலம்
என்ற 6 மருந்து கொடுக்கும் முறைகளைப் பற்றி குறிப்புகள் சுவடியில் காணப்படுகின்றன.

சுவடியின் அமைப்பு
‘ஊழிநூல்’ என்ற சுவடியில் முதல் பாடலாக இறைவணக்கம் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பாடலில் முறியன், கொம்பன், குடல்படுவன் என்ற மூன்று அரக்கர்களைக் காலரா நோயின் குறியீடாக ஆசிரியர் கூறுகின்றார். இம்மூன்று அரக்கர்களும் மனிதர்களைத் தாக்கினால் உண்டாகும் விளைவுகளாக இரத்தபேதி, சர்த்தல் (வாந்தி), கண்மங்குதல், உடல் குளிருதல், காதடைப்பு, பல்கறுக்கல், சன்னி, சீதமுடன் வியர்வை, உடல் சுருங்குதல், தரிப்பு ஆகியவற்றைக் குறித்தும்: இந்நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருத்துவ முறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.
மருந்து செய்யும் முறைகள்
‘ஊழி நூல்’ என்ற சுவடியில் 23 மருந்து செய்யும் முறைகளாக ஆசிரியர் கூறுகின்றார். கதைத்தல், ஆட்டுதல், பிரட்டுதல், இடித்தல், அரைத்தல், வற்றக்காய்ச்சுதல், மேலே தூவுதல், வெதுப்பேற்றல், அரித்தல், வடிகட்டுதல், வறுப்பு, கருமையாக வறுத்தல், சிவந்த நிற வறுப்பு, மைபோல ஆட்டுதல், இளவறுப்பு, கருக்குதல், தூளாக்குதல், மணல் பருவம் வரை வறுத்தல் ஆகிய முறைகள் சுவடியில் காணப்படுகின்றன.
ஊழி நோய் - தொடக்கத்தில் கொடுக்க வேண்டிய மருந்து
ஊழி நோய் தொடங்கியவுடன் கொடுக்க வேண்டிய மருந்துக்களைப் பின்வருமாறு ஆசிரியர் கூறுகின்றார்.
சூடத்தையும், மிளகையும் சமஅளவு எடுத்து அதை தேனுடன் அரைத்துச் சாப்பிட்டால் நோய் வராது என்கின்றார்.
மலையரசன் காயம், அபின், கஸ்தூரி மஞ்சள், கொடிக்கள்ளி ஆகியவற்றை நன்கு அரைத்து மாத்திரைபோல் உருட்டி சாப்பிட்டால் நோய் குணமாகும்.
சுக்கு 8, ஓமம் 4, ஏலம் 2, சீனி மிளகு 4, கிராம்பு 2, சாதிக்காய் 2, கிரிசாத்து 4, காயம் 2, வெள்ளாம்காயம் 8, கருவாய்ப்பட்டை 4 ஆகியவற்றை நன்கு அரைத்து அதில் சாராயத்தை ஊற்றி ஏழு நாட்கள் ஊறவைத்துக் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் ஊழி நோய் குணமாகும் என்கின்றார்.
பிரண்டை கொழுந்து 10, கொடிக்கள்ளி கொழுந்து 10, காந்தாரி மிளகு 5, முருங்கை வேர் 2, உப்பு ஆகியவற்றை நன்கு அரைத்து அதைத் தீயிலிட்டு கரியும் மட்டும் வறுத்து அதனுடன் ஓமத்தையும், வெள்ளைப்பூண்டையும் போட்டு சிவந்த நிறம் வரும்வரை வறுக்க வேண்டும். பின்பு அதை சாராயத்திலிட்டு ஊறவைத்து ஊழிநோய் அறிகுறிகள் தென்பட்டால் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோய் வராது.
ஊழி நோய்க்கு சாராய வாற்று, சாராய வறுப்பு
ஊழி நோய் வந்தவுடன் கொடுக்க வேண்டிய மருந்துக்களில் ஒன்று சாராய வாற்று. இந்தச் செய்முறைகளைப் பற்றியும் அதை எவ்வாறு அருந்தவேண்டும் என்பது பற்றியும் ஆசிரியர் பின்வருமாறு விளக்குகின்றார்.
கஸ்தூரி மிளகு, திப்பிலி, சாதிக்காய், விளாம்பிசின், சூடம், காயம், தாளிச்சை, அபின், கிராம்பு, கருவேலின் பிசின், மதுரம், மாயக்காய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து அதை பழச்சாறு விட்டு நன்கு அரைத்து நிழலில் உலர்த்தி சாராயத்தில் கலந்துச்சாப்பிட்டால் நோய் குணமாகும்.
சுக்கு 8, ஏலம் 2, சீனிமிளகு 4, கிராம்பு 2, ஓமம் 4, சாதிக்காய் 2, கிரிசாத்து 4, காயம் 2, வெள்ளாங்காயம் 8, கருவாய்ப்பட்டை 4, ஆகியவற்றை நன்கு அரைத்து சாராயத்தில் போட்டு ஊறவைத்துக் குடித்தால் ஊழிநோய் குணமாகும்.
பிரண்டைத்தண்டு 10, வேலிபருத்திஇலை 10, சீனிமிளகு 5 ஆகியவற்றை நன்கு அரைத்து அதனுடன் இஞ்சியை நறுக்கிப்போட்டு தீயிலிட்டு சிவந்த நிறம் வரும்வரை வறுத்து சாராயத்துடன் கலந்து குடிக்க வேண்டும் என்ற இன்னொரு முறையைக் குறித்த செய்தியும் சுவடியில் காணப்படுகிறது.
பிரண்டைத்தண்டு, முருங்கைப்பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து தீயிலிட்டு நன்கு வறுத்து அதனுடன் ஓமம், வெள்ளைப்பூண்டு, சதகுப்பை ஆகியவற்றை சமஅளவு போட்டு சாராயத்துடன் காய்ச்சி குடித்தாலும் நோய் குணமாகும்.
மிளகு 4, சூடம் 4 கருவாய்ப்பட்டை 4, அபின் 2 ஆகியவற்றுடன் சாராயத்தை கலந்து நன்கு அரைத்துச் சாப்பிட்டால் ஊழி நோய் குணமாகும்.
ஊழி நோய்க்கு குளிகை (மாத்திரை)
சுவடியில் ஆசிரியர் ஆறுவகையான மருத்துவ முறைகளைப் பற்றிக் கூறுகின்றார். அதில் ஒன்று குளிகை, குளிகையின் செய்முறை பற்றியும், அருந்தும் முறை பற்றியும் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
மலையரசன் காயம், அபின், கஸ்தூரி, கொடிக்கள்ளி ஆகியவற்றை அரைத்து மாத்திரை போல உருட்டி சாப்பிட்டால் நோய் குணமாகும்.
கற்பூரம் 1, மிளகுவற்றல் 2, அபின், கூகைநீறு ஆகியவற்றை தேன்விட்டு அரைத்து மாத்திரை செய்து சாப்பிட்டால் நோய் குணமாகும்.
காயத்தையும், கடுகையும் சமஅளவு எடுத்து அதை பிரண்டைச் சாற்றுடன் அரைத்து மாத்திரையாக்கி சாப்பிட்டால் நோய் குணமாகும்.
வால்மிளகு, விடையம், காவிக்கட்டி, கஞ்சா, ஆகியவற்றை சமஅளவு எடுத்து பன்னீர் விட்டு அரைத்து மாத்திரையாக்கி சாப்பிட்டால் நோய் குணமாகும்.
கோழியின் குடல், நிணம், கரல், வெண்சவுக்காரம், கஞ்சாச்சாறு, நல்லமிளகு, கொடிமூலம், சுக்கு, ஓமம் ஆகியவற்றுடன் சாராயத்தை விட்டு நன்கு அரைத்து உருளையாக்கி சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் நோய் குணமாகும்.
கந்தவர்க்கம், பத்திரி, கிராம்பு, வசம்பு, அபின்சாறு, கற்பூரம், சாம்பிராணி, சாதிக்காய், பூண்டு, அதிவிடையம், சுக்கு, திப்பிலி, சோம்பு, ஓமம், கோராக்கமூலி, வெண்காரம் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மாத்திரை செய்து சாப்பிட்டால் நோய் குணமாகும். இவ்வாறு ‘ஊழிநூல்’ சுவடியில் கூறுகின்ற குளிகையின் செய்முறைகளைப் பின்பற்றினால் பேதிநோய், வயிற்றுவலி, சர்த்தல், வியர்வை, வயிற்றுப்போக்கு பித்தம், வாய்க்குமுறல், வறட்சி, தாகம், காதடைப்பு, வயித்தெரிச்சல் ஆகிய நோய்கள் தீருமென்று அகத்திய முனிவர் கூறியதாக சுவடி எழுதிய ஆசிரியர் கூறியுள்ளார்.
ஊழிநோய்க்கு கசாயம்
ஊழி நோய் மருத்துவ முறைகளில் கசாயமும் ஒன்று. இந்தக் கசாய செய்முறை பற்றியும், உட்கொள்ளும் முறை பற்றியும் ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்.
வறுத்தரிசி 2, கழஞ்சி (ஓர் எடுத்தளவை), கிராம்பு 1, உப்பு, நாறிப்புல்வேர் 1, ஏலம் 1, சுக்கு 1 ஆகியவற்றை அரைத்து வற்றக் காய்ச்சிக் குடித்தால் நோய் குணமாகும்.
முத்தங்காய், குன்றிவேர், சுக்கு, நிலப்பனை, நன்றிவேர், சாதிக்காய், முந்தி;ரிப்பழம் ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து கசாயம் காய்ச்சி அதில் வருத்தரிசி, நல்லமிளகு ஆகியவற்றை பொடியாக்கி கசாயத்தில் போட்டுக் குடித்தால் நோய் குணமாகும்.
கிராம்பு, மல்லி, நெல்பொரி, சுக்கு, நாறிப்புல்வேர், நிலவிளாத்தி, சமூலம், முந்திரிப்பழம் ஆகியவற்றை சமஅளவு எடுத்து அதனுடன் 2 லிட்டர் தண்ணீர்; ஊற்றி வற்றக் காய்ச்சிக் குடித்தால் நோய் குணமாகும்.
சுவடியில் கூறுகின்ற கசாயத்தை செய்து குடித்தால் இரைச்சலோடு சர்த்தல், விக்கல், செவியடைப்பு ஆகிய நோய்கள் குணமாகும் என்கின்றார் ஆசிரியர்.
ஊழி நோய்க்குப் பொடி (சூரணம்)
சுவடி எழுதிய ஆசிரியர் அகத்திய முனிவர் கூறியதாக ஊழிநோய்க்கு மருந்துப் பொடியின் செய்முறை பற்றியும், அருந்தும் முறை பற்றியும் பின்வருமாறு விளக்கம் தந்துள்ளார்.
காயம், ஓமம், குறோசாணி, ஆகியவற்றை இடித்து பொடியாக்கி சாப்பிட்டால் நோய் குணமாகும்.
அதிமதுரம், சுக்கு, மாஞ்சி, நிலவாகை இலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து பொடியாக்கி பழங்கள் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் நோய் குணமாகும்.
சுவடியில் கூறுகின்ற ஊழி நோய்க்கு சூரணத்தை இம்முறைப்படி செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கடி, வயிற்றுப்போக்கு, பொல்லாத இரைச்சல், வியர்வை, மந்தமுடங்கல் ஆகிய நோய்கள் குணமாகும் என்கின்றார் ஆசிரியர்.
ஊழி நோய்க்கு பர்ப்பம்
சுவடியில் கூறப்பட்டுள்ள மருத்துவ முறைகளில் பர்ப்பமும் ஒன்று. இதன் செய்முறை பற்றியும் உட்கொள்ளும் முறைபற்றியும், குணமாகும் நோய்களைப் பற்றியும் ஆசிரியர் பின்வருமாறு விளக்கம் கூறுகின்றார்.
வசம்பு, இந்துப்பு, வெள்ளைப்பூண்;டு, கஞ்சா, சிங்கி, ஓமம், சிவனார்வேம்பு, மிளகு, விடையம், சுக்கு ஆகியவற்றுடன் அருகம்புல் சாறுவிட்டு நன்கு அரைத்து வெயிலில் காயவைத்து தேனுடன் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் வாந்தி, கொடிய தரிப்பு, அணவாய்காந்தல், அதர்ந்த வியர்வை, உகந்த பரதாபம் ஆகிய நோய்கள் குணமாகும் என்கின்றார் ஆசிரியர்.
ஊழி நோய்க்கு தைலம்
ஊழி நோயைக் குணப்படுத்தும் மருத்துவ முறைகளில் ஒன்று தைலம். மற்ற மருந்துக்கள் அனைத்தும் உட்கொள்ளும் மருந்தாகும். ஆனால் தைலம் வெளிப்பூச்சி மருந்தாகும். இந்தத் தைலத்தின் செய்முறைப் பற்றியும், தேய்க்கும் முறை பற்றியும் ஆசிரியர் பின்வருமாறு விளக்குகின்றார்.
எரிக்கிலை, நொச்சி ஆகியவற்றை சாறெடுத்து அதனுடன் எண்ணெய், கடுகு, உள்ளி, சூடம், முருங்கைப்பட்டை ஆகியவற்றை இட்டு முதிர்பருவம் வரை சூடாக்கி உடம்பில் தேய்க் வேண்டும். இவ்வாறு தேய்த்து, அதில் அரைக்கரண்டி சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் ஐயம், மயக்கம், சன்னி, சீதம், வியர்வை குளிர்ச்சி, கபம் ஆகிய நோய்கள் தீரும் என்கின்றார் ஆசிரியர்.
முடிவுரை
நாட்டுப்புறங்களில் கிடைக்கக் கூடிய மூலிகைகளைக் கொண்டு மக்கள் தங்கள் நோய்களைப் போக்கிக் கொள்கின்றனர். ‘ஊழி நூல்’ என்ற சுவடியும் நாட்டுப்புறங்களில் கிடைக்கக் கூடிய மூலிகைகள் (அதாவது இயற்கையாக) கிடைப்பதையே மருந்தாகக் கூறுகின்றது. இம்மருத்துவ முறையினால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. ஆகவே அனைவரும் இத்தகைய மருத்துவ முறைகளை அறிந்துகொண்டு நோயற்ற வாழ்வு வாழலாம்

எழுதியவர் : பெ. பால்முருகன் (30-Oct-15, 11:34 am)
சேர்த்தது : கவி பாலு
பார்வை : 514

மேலே