காலைச் சாரல் 18 - படம் தரும் பாடம்

30-10-2015

காலைச் சாரல் 18 - படம் தரும் பாடம்

அதிகாலை எண்ணங்கள்....

நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வந்த பேத்தி, சார்ட் பேப்பர், பெவிகால், பெயிண்ட் வேண்டும் என்றாள் ... அதனுடன் வேர்கடலையின் ஓடுகள் வேண்டும் என்றாள்... 'வேர்கடலையின் ஓடு' எது என்பதை எனக்கு அவள் விளக்கிச் சொன்னதில் நான் சொக்கிப் போனேன்.... (இவைகளை வைத்து ஒரு படம் வரைந்து வண்ணம் அடிக்க வேண்டும் என்பது தமிழ் மிஸ் கொடுத்த கிராப்ட் வேலை.... ). மாலை வாங்கித் தருகிறேன் என்றேன்....

மாலை என்னுடன் பல வருடங்கள் முன் வேலை செய்த நண்பர் தான் சென்னை வந்துள்ளதாகவும்... இரவு விமானம் பிடிப்பதற்குள்..... சிறிது நேரம் சந்திக்கலாம் என்று எதிர்பாராமல் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.. அவர் வருவதற்குள் கடைக்குச் சென்று பேத்தி கேட்டதை வாங்கலாம் என்று கிளம்ப, தானும் வருவதாக ஒட்டிக் கொண்டாள்..

முதலில் ஓடுடன் வேர்கடலை வாங்கத் தேடிக் கொண்டே செல்ல எங்கும் கிடைக்கவில்லை... தெருவில் பார்த்த புல்லாங்குழல் வேண்டும் என்றாள். கையில் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்ததால் தோளில் சாய்த்து வைத்திருந்த கொம்பில் குத்தியிருந்த புள்ளங்குழல்களுடன் நின்றிருந்த இள வயதுக் காரரிடம் சில்லறை இருக்குமா என்று சந்தேகமாகக் கேட்டேன்... முதலில் இல்லை என்று தயங்கியவர், பிறகு வியாபரத்தை விட்டுவிடக் கூடாது என்று இருக்கிறது என்றார் ... 475/- ரூ திருப்பிக் கொடுத்து என்னிடம் 500/- ரூ பெற்றுக்கொண்டார்... கையில் வாங்கிப் பார்த்தவர் ரூபாய் நோட்டின் ஓரத்தில் கருப்பாக சில கோட்டுத் தீற்றல்கள் இருப்பதைப் பார்த்து என்னிடம் வேறு நோட்டு இருக்கிறதா என்றார்.... நான் அதற்கு முன் தினம் தான் 5000 ரூ ATM -லிருந்து எடுத்திருந்தேன்... எல்லா நோட்டுகளிலும் அந்த கருப்பு கோட்டுத் தீற்றல்கள் இருந்தது.... எனக்குப் புரியவில்லை... ஏதாவது பிரிண்டிங் தவறோ....? எதோ சொல்லி அவரை அந்த 500 ரூபாவை வாங்க வைத்து விட்டேன்.... (பிறகு தெரிந்து கொண்டேன் அந்தக் கோட்டுத் தீற்றல்கள் கண் தெரியாதவர்கள் தொடுதல் மூலம் உணர அமைந்த ஐந்து வரிகள் என்று ...)

ஆனால் நாங்கள் தேடிச் சென்ற ஓடுடன் கூடிய வேர்கடலை கிடைக்கவில்லை... மற்றப் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும்போதே நண்பரிடமிருந்து அழைப்பு வந்தது அருகில் வந்தாகி விட்டது... தொடர்ந்து வர வழி கேட்டு... நான் இருக்கும் கடைக்கு வர வழிகூறி காத்திருந்தேன்... அவர் வந்தவுடன் பேத்தியை அவருடன் சிறிது நேரம் இருக்கச் சொல்லி ஒரு printout எடுத்து வருகிறேன் என்று சென்றேன்... (இது EVS மிஸ் கொடுத்த வேலை.... மரம் படத்திற்கு வண்ணம் அடித்து அதில் வாழும் சில விலங்குகளின் படங்களை ஒட்டுக )

ஓடி ஓடி வர அங்கே மழையில் நனைந்து நின்று கொண்டிருந்தார்கள் நண்பரும், பேத்தியும் ...

"ஏன் நண்பரின் காரில் அமர்ந்திருகலாமே " என்றதற்கு...
"பேத்தி மாட்டேன் என்றாள் " என்கிறார் நண்பர்...
"தத்தா நண்பர்தானே" என்றதற்கு
"I don't know that uncle" என்கிறாள்...
"நான் ஸ்கூட்டியில் போகிறேன் நீ அங்க்ளுடன் காரில் வா " என்பதற்கும் மறுத்து விட்டாள்.... (ஆனால் சார்ட் பேப்பர் மட்டும் பத்திரமாக காரில் )

சொட்டச் சொட்ட மழையில் நனைந்து கொண்டே என்னிடம்

"முன்னப் பின்ன தெரியாதவர்களுடன் என்ன கார்ல போகச் சொல்ற... நான் parents, தத்தா பாட்டி கூடத்தான் போவேன்... வேற யார் கூப்பிட்டாலும் போக மாட்டேன்.... " என்று கூறிவிட்டு சந்தோஷமாக மழையில் நனையத் துவங்கினாள்...

தாத்தா வழிவதும் மழையில் கரைந்தது .....

---- முரளி

எழுதியவர் : முரளி (30-Oct-15, 11:36 am)
பார்வை : 131

மேலே