மேகாவும் சில எலிக் குஞ்சுகளும்
மேகாவும் சில எலிக் குஞ்சுகளும்!
-------------
மேகாவுக்கு திடீரென ஒரு கெட்டப் பழக்கம் ஒரு வாரமாக தொற்றிக் கொண்டிருக்கிறது. பள்ளிச் சீருடை அணிந்து, ஷூ போட்டுக் கொண்டு, டை அணிந்து, புத்தகப் பையை முதுகில் ஏற்றி கையில் உணவுக் கூடையையும் எடுத்துக் கொண்டு குடு குடு வென தன் வீட்டின் பக்கவாட்டிற்குச் சென்று விட்டு பத்து நிமிடங்கள் கழித்துதான் திரும்ப வருவாள்.
“”மேகா நேரமாச்சி… சீக்கிரம் வாம்மா. ஸ்கூல் பஸ் வந்திரும். அங்க என்ன பண்ணிட்டு இருக்க” என்று அம்மா புஷ்பா கூற அவள் சிறிதும் காது கொடுக்க மாட்டாள். காரணம் அப்பா செல்லம்.
பொதுவாக, மேகா இருந்தால் வீடு அமர்க்களப்படும். சதா பேசிக் கொண்டே இருப்பாள். வீட்டில் இருப்பவர்கள் அதைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவள் கேட்கும் அதிரடி கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்காகவே, அவள் என்னப் பேசினாலும் அனைவரும் கேட்பது போலவாவது பாவலா காட்டிக் கொண்டிருப்பார்கள்.
ஸ்கூல் மிஸ் கூட சொல்வார்கள். யு.கே.ஜி., வகுப்பு மாணவிகளிலேயே மேகாதான் சிறந்த பேச்சாளினி என்று.
ஆனால், இந்த ஒருவார காலமாக அவளது செயல் முற்றிலும் மாறிவிட்டது. அவளது பேச்சும், அதிரடி கேள்விகளும் இல்லை. அவளின் கவனம் வேறு எங்கோ திரும்பி விட்டது.
திடீர் திடீரென வீட்டின் பக்கவாட்டு பக்கத்திற்கு சென்று விடுகிறாள். பள்ளி விட்டு வந்ததும் முதல் வேலையாக அங்கு சென்று வந்த பிறகுதான் மற்ற வேலை. அதுவும் யாராவது கூப்பிட வேண்டும். அப்போதுதான் அவள் அங்கிருந்து வருவாள்.
வீட்டின் பக்கவாட்டில் என்னதான் இருக்கிறது என்று புஷ்பாவும் ஒரு முறை அல்ல, பலமுறை சுற்றிப் பார்த்து ஆராய்ந்து விட்டாள். அவளால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியே விட்டு விடமுடியுமா? நாளைக்கு எப்படியும் கண்டுபிடித்தே தீருவது என்று முடிவு செய்து கொண்டாள் புஷ்பா.
வழக்கம் போல பள்ளிக்குக் கிளம்பிய மேகா, தன் புத்தக மூட்டையை தூக்கிக் கொண்டு கையில் உணவுக் கூடையையும் எடுத்துக் கொண்டு, தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இல்லை என்று உறுதியான பின்பு வீட்டின் பக்கவாட்டிற்கு மெதுவாய் நழுவினாள்.
கண்டும் காணாமல் இருந்த புஷ்பா மெதுவாய் மேகாவை பின் தொடர்ந்தாள்.
குலை தள்ளி நின்ற வாழை மரத்தின் அருகில் ஒரு பொந்தின் மேல் இருந்த சில கற்களை நகர்த்தினாள் மேகா.
“கீச்… கீச்…’ என்று கத்தியவாறே சில எலிக் குட்டிகள் ஓடி வந்தன. மெதுவாய் தான் வைத்திருந்த டிபன் பாக்ஸிலிருந்து சிறிது உணவை எடுத்து அருகில் கிடந்த கொட்டாங்கச்சியில் வைத்து அதை எலிக் குட்டிகளின் அருகில் நகர்த்தி வைத்தாள்.
அவைகள் முண்டியடித்துக் கொண்டு தின்றன. அவைகளின் முதுகில் தன் பிஞ்சுக் கைகளால் வாஞ்சையுடன் தடவி ரசித்துக் கொண்டிருந்தாள். ஒரு பிஞ்சுவின் மனது இன்னொரு பிஞ்சுவுக்குத்தான் தெரியுமோ?
புஷ்பாவின் கைகள் மேகாவின் முதுகை தடவவில்லை. மாறாக, படீரென விழுந்தது அடியாய்.
துள்ளிக் குதித்து எழுந்த மேகாவின் கண்களில் கண்ணீர் கொட்டியது.
“”தினமும் இதுதான் வேலையா? ஸ்கூல் போற நேரத்தில் கை காலெல்லாம் அழுக்காக்கி கிட்டு நிக்கற” என்றவாறே இன்னொரு அடியும் கொடுத்தாள் புஷ்பா.
மேகாவின் முகத்தில் அழுகை கோபமாக மாறியது. “”இந்த எலிக் குட்டிகளோட அம்மாதான் அன்னைக்கு அப்பா, எலிப் பொறியில புடிச்சி கொன்னுட்டாரே. அப்ப, இந்தக் குட்டிகளுக்கு யாரு சோறு போடுவா?” என்று அதிரடியாய் மேகா கேட்ட கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் நின்றாள் புஷ்பா.
+
வாணிஸ்ரீ சிவகுமார் -