அம்மாவின் அரிவாள்மனை

மயிலின் தோற்றத்தில்
முதுகில் எதை வைத்து அழுத்தினாலும்
நறுக்கி தள்ளும்
அம்மாவின் அரிவாள்மனை!

அம்மாவிற்கு சீதனமாக தரப்பட்ட
எத்தனையோ பண்ட பாத்திரங்கள்
துருப்பிடித்து பழசாகி
பழைய இரும்புக்கும்
பொங்கல் முந்திய நாள் கருகியும்
போன போதும்
அரிவாள்மனை மட்டும்
பக்குவமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது!
அவள் அப்பாவின் பட்டறையில்
அவளுக்காகவே அவராள்
அடிக்கப்பட்டு உருப்பெற்ற
அரிவாள்மனையாதலால்
அதற்கு எப்போதுமே தனி சிறப்பு

பக்கத்து வீட்டுக்காரி அவசரத்திற்கு
அரிவாள்மனையை வாங்கி சென்று
திரும்பித்தர
அதிலிருந்த சிறு நெழிசலினால்
ஒரு வாரமாய் வசவு வாங்கினாள்
அன்றிலிருந்து அரிவாள்மனையை மட்டும்
யார் கேட்டாலும் இரவலாய் கொடுப்பதில்லை!

உறவு வீடுகளுக்கு சென்றாலும்
தன்னுடைய அரிவாள்மனையைப்போல
அவர்களுடையது இல்லையென்று
தம்பட்டம் அடிப்பதற்காகவே
காய்கறி நறுக்கும் வேலையில் இறங்கிவிடுவாள்

கத்தியும் அரிவாளும்
கொலை செய்வதற்கான ஆயுதங்கள்
என்பதே அம்மாவின் நினைப்பு
அவைகளுக்கு வீட்டில் என்றுமே இடமில்லை!

மீன்கள் நறுக்கையில்
தவறுதலாய் விரலில்பட
ரத்தம் சொட்டியபோதும்
திட்டு வாங்கிக்கொண்டது
வழுக்கிசென்ற மீன் தானேயன்றி
அரிவாள்மனையல்ல!

கடந்த வாரம் தவறி விழுந்துடைந்த
அரிவாள்மனையுடன் சேர்ந்து
அம்மாவின் மனமும் உடைந்து போயிற்று
தேங்காய் திருவியுடன் சேர்ந்த
புது அரிவாள்மனை வாங்கியும்கூட
அவளுக்கு திருப்தியேயில்லை

அம்மாவுக்கும் அரிவாள்மனைக்குமான
அன்பை இதுவரை யாருமே அறிந்ததில்லை
ஒவ்வொரு அம்மாக்களுக்குமே
இதுபோல அடுக்களைக்குள்ளேயே
எதாவதொரு பிணைப்பு இருக்கிறது!

எழுதியவர் : தங்கராஜா பழனி (3-Nov-15, 8:53 pm)
பார்வை : 255

மேலே