தொலைபேசி…

தொலைபேசி…
------------
மேலத்தெரு துரைச்சாமி வீட்டில் டெலிபோன் வைத்திருந்த செய்தி, கீழத்தெருச் சனங்களுக்குத் தேனாய் இனித்தது. இனி ஆத்திர அவசரத்திற்கு அவன் வீட்டுக்குப் போய் போன் பண்ணிக் கொள்ளலாம். கிழக்கே தூரம் தொலவெட்டில் இருக்கும் போஸ்ட் ஆபிசுக்கு அரக்கப்பரக்க ஓடிப்போய் போன் பண்ணிக் கொள்ள வேண்டியதில்லை. அதுவும் மழை பெய்து வெள்ளம் வரும் காலங்களில் ஓடையைத் தாண்டி போஸ்ட் ஆபிசுக்குப் போவதென்பது சிரமம் பிடித்தக் காரியமாக இருந்தது. கீழத்தெருவுக்கும் போஸ்ட் ஆபீசுக்கும் நடுவில் அகழி மாதிரி ஓடைக் கிடந்தது. “சீத்’தென்று மழை பெய்வதற்குள்ளே மணிமுத்தாறு அணையிலிருந்துத் திறந்து விடப்பட்ட நீர் வலை போட்டு அமுக்கியது போல ஓடையை நிறைத்தது.

போஸ்ட் ஆபீஸ் பக்கம் பெரிய பெரிய பணக்காரர்களின் வீடுகள் இருந்தன. ஊரிலிருந்த அநேக விளைநிலங்கள் அவர்களுக்குப் பாத்தியப்பட்டிருந்தன. கீழத்தெருச் சனங்களின் வயித்துப்பாட்டுக்கு அவைதான் வரும்படி தந்து கொண்டிருந்தன. மேலத் தெருக்காரர்களில் அநேக ஏழைகளும் கீழத் தெருச் சனங்களுடன் சேர்ந்து வயக்காட்டுச் சோலிகளைப் பங்குப் போட்டுக் கொண்டதுண்டு.

துரைச்சாமியின் வாழ்க்கைச் சக்கரம் வயல் தடங்களில் ஓடிக் கொண்டிருக்கவில்லை. மூதாதையர் சேமிப்பில் தளிர் விட்டிருந்த பணக்கிளைகளில் வட்டியைப் பூக்க வைத்துக் கொண்டிருந்தான் அவன். உள்ளூர் தெருக்களில் வாசம் பரப்பிய பூக்கள் அயலூர்கள் வரைக்கும் காற்றடித்து மணத்தன. பரிமாற்றங்களை உறுதிப்படுத்திக் கொள்ள அவன் வீட்டில் டெலிபோன் வைத்துக் கொண்டான்.

“”என்னடே முத்தையா… வூடு தேடி வந்திருக்க?”

“”அவசரம்.. அய்யாவப் பாக்கத்தான் வந்தென்..”

“”என்ன விஷயம்? வட்டிக்குப் பணம் வேணுமா?”

“”அதெல்லாம் வேண்டாங்க… வட்டிக்கு வாங்கனா என்னியால சமாளிக்க முடியாதுய்யா. நாகர்கோவில்ல இருக்கற எம் பொண்ணுக்கு ஒரு போன் பண்ணிக்கினும்யா..”

“”அவ வூட்லப் போன் வச்சிருக்காளா?”

“”இல்லய்யா. அவ மாப்ள செல் வச்சிருக்காரு…”

“”முன் ரூம்லலாடே போன் இருக்கு..”

“”நீங்க மனசு வச்சா முடியும்ய்யா…”

“”இப்படி அடுத்தவங்க வந்துப் போன் பண்ணா போன் பில்லு அதிகமால்ல வரும்?”

“”நாப் பேசறதுக்குத் தக்கன ரூவாத் தந்திரமுங்க..”

“”இப்பக் கையில எவ்ளவ் வச்சிருக்க?”

“”அஞ்சு ரூவா இருக்குய்யா..”

“”ஆங்… அப்படிச் சொல்றியோ. சரி. கொஞ்ச நேரந்தான் பேசணும். வளவளன்னுப் பேசி கழுத்த அறுக்கக் கூடாது. நம்பர் தெரியுமா?”

“”எம்மொவா பேப்பர்ல எழுதிக் குடுத்திட்டுப் போயிருக்காய்யா. ஒவ்வொண்ணா அதப் பாத்துப் பாத்து அடிச்சிக்குவேன்..”

“”கொண்டா… காச இப்பிடிக் குடு..”

“”அஞ்சு ரூவாயையுமாய்யா?”

“”பின்ன? ஒரு ரூவாய்க்குப் பேசிரலாமின்னுப் பாத்தியா? போன் வைக்க எவ்ளவ் செலவாயிருக்கு, போன் பில்லு எவ்ளவ் கொடுக்க வேண்டியிருக்கு தெரியுமா?”

“”சரிய்யா..”

முற்றத்தைத் தாண்டி முன்னறைக்குப் போனார் முத்தையா. சற்று அரிச்சலாக இருந்தது அவருக்கு. இதுவரை முற்றம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் கீழத்தெருக்காரர்கள். காசுக்காகவே அவரை முன்னறைக்கு அனுமதித்திருந்தான் துரைச்சாமி.

முத்தையாதான் துரைச்சாமி வீட்டுப் போனில் முதன் முதலாகக் காசு தந்து போன் பேசிக்கொள்ளும் காரியத்தை ஆரம்பித்து வைத்தார். நாளாவட்டத்தில் கீழத்தெருக்காரர்கள் சன்னஞ்சன்னமாய் வருகைத் தரத் துவங்கினர். ஐந்து ரூபாயை துரைச்சாமியிடம் தந்துவிட்டு அயலூர்களிலிருந்த தன் உறவினர்களுடன் அவசரத்தைப் பகிர்ந்துக் கொண்டனர்.
துரைச்சாமிக்குப் பணம் முக்கியம். அழுக்கைப் பொருட்படுத்தினால் பெட்டி நிறையுமா? அவர்கள் பேசிவிட்டுப் போனபிறகு ரிசீவரைத் துடைத்துக் கொண்டால் சுத்தமாகி விடுகிறது.

“”என்ன முத்தையா பம்மிக்கிட்டு நிக்கற? போன் பண்ணணுமா?”

“”ஆமாய்யா”

“”யாருக்கு?”

“”மெட்ராசுல இருக்கற எம்மொவனுக்குய்யா”

“”எவ்வளவு வச்சிருக்க?”

“”அஞ்சு ரூவா கரெக்ட்டா வச்சிருக்கன்யா..”

“”அஞ்சு ரூவாய்க்கெல்லாம் இப்ப போன் பண்ண முடியாதுடே. போன் பில்ல எல்லாம் ஏத்திப்புட்டானுங்க..”

“”அப்படின்னா எம்புட்டுய்யா தரணும்?”

“”பத்து ரூவா கொண்டா”

“”செத்த நேரந்தானேய்யா பேசுவேன். பசார்ல இருக்கற போன்ல பேசினாக்கூட மூணு ரூவாய்க்கு மேல வராதேய்யா… கொஞ்சம் கொறச்சிக்கங்க..”

“”அப்போ இங்க வந்துப் பேசாத. பசார்ல இருக்கப் போன்ளப் போயி பேசிக்க…”

“”என்னய்யா இப்பிடிச் சொல்லிப்புட்டிய? முன்னப்பின்னப் பழகாத ஆளுவகிட்ட சொல்லுத மாதிரி. பசாருக்கு இங்கயிருந்து மெனக்கெட்டு பஸ்ஸேரில்ல போவணும். ரொம்ப அவசரம்ய்யா இப்ப. நாவர்கோயில்லக் கெட்டிக் குடுத்திருக்க எம்மொவலோடப் புருசனுக்கு ரொம்ப சொவமில்லையாம். அவசரமா பணம் கேட்டு எம்பேத்திய அனுப்பியிருக்கா. அத எம்மொவன்கிட்ட சொல்லணும். அவந்தான் பணம் அனுப்பி வைக்கணும்யா. நாள மக்கிய நாள்லருந்து பத்து ரூவா வாங்கிக்கங்க. இன்னிக்கு எங்கிட்ட அஞ்சு ரூவாத்தாய்யா இருக்கு…”
அவரின் பீடிச் செலவுக்காக வைத்திருந்தக் காசுகள் அவை. இன்று வயக்காட்டுச் சோலிக்குக் கிடைத்த கூலியில் வீட்டுக்கு அரிசியும் குழம்புச் சாமான்களும் வாங்கிப் போட்ட பிறகு மீந்திருந்தக் காசுகள். பீடி வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் இடுப்பு வேட்டியில் சுருட்டிச் செருகியிருந்தார். சாயந்தரம் வீட்டுக்கு வந்தப் பேத்தியைப் பார்த்ததும் அவரின் திட்டம் திசை மாறிப் போனது.
“”அஞ்சு ரூவாய்க்கெல்லாம் பேச முடியாது. வீட்ல இருந்தா போயி எடுத்துட்டு வா. வீடு என்ன ரொம்பத் தொலைவிலயா இருக்கு?”
குறுக்காகக் கிடந்த மண் சாலையைக் கடந்தால் கீழத்தெருக் குடிசைகள். மூச்சைப் பிடித்துக் கொண்டு நடந்தால் மூணு நிமிச நடைத் தூரம்.
“”வூட்ல இல்லய்யா. உங்களுக்குத் தெரியாதா, நா ஒருத்தன் வேலப் பாத்துத்தான் எங்க ரெண்டுப் பேரோட வயித்துப் பாட்டக் கழிக்கோம். அவளுக்குத்தான் பக்கவாதம் வந்து ஒரு சோலிக்கும் போவமுடியாம கெடப்பிலே கெடக்குதாளே. அவளுக்கு மருந்து மாயம் கூட எஞ் சம்பாத்தியத்தில இருந்துதான் வாங்கிக் குடுக்கணும். மெட்ராசுல எம்மொவன்காரன் ஆட்டோ ஓட்டுரான்னுதான் பேரு. அவன் உண்டு, அவன் பொஞ்சாதிப் புள்ளைங்க உண்டுன்னு மொடங்கிக் கெடக்கான். எப்பமாவது சிலுப்பிக்கிட்டு வந்திட்டுப் போறான். கையில இருக்கக் காசையெல்லாம் தாறுமாறா செலவுப் பண்ணிட்டுக் கடேசில கடன் வாங்கிட்டுத்தான் ஊருக்குப் போறான். இந்தக் கொள்ளையில எங்கையில எப்படிய்யா காசு மிஞ்சும்?”
“”ஒஞ் சொந்தக் கதைய எல்லாம் கேக்க எனக்கு நேரமில்லடே. பத்து ரூவா இருந்தா வந்துப் பேசு. இல்லன்னா நடையைக் கட்டு. என் நேரத்தக் கெடுக்காத எரிச்சலாயிருக்கு..”
கருக்கல் கூடியிருந்தது. முற்றத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருந்த குழல்விளக்கு வெளிச்சத்தில் முத்தையாவின் வதங்கல் முகம் இருளடித்துப் போயிருந்தது. அறுபது வயசுக்கு மேலிருக்கும் அவருக்கு. காய்ந்த வாழைத் தழையைப் போல சதை மெலிந்தத் தேகம். இலைகளை உருவிவிட்டப் புளியம் விளார் மாதிரி ஒடிசலானக் கை, கால்கள். பாதி நரையும் பாதி கருப்பும் கலந்த கதம்ப முடிக்கற்றைகள். இடுப்பில் நாலு முழ வேட்டியும் மேலுக்குக் கறைப் படிந்த முண்டாப் பனியனும் அணிந்திருந்தார். அந்தக் காலத்து ரெண்டாங் கிளாஸ் படிப்பில் எழுத்துக்களை நியாபகப்படுத்தி வாசித்துக் கொள்ளும் திறமை மட்டும் குறைந்து விடாமலிருந்தது.
அவரைப் பார்த்துக் கொண்டிருந்த பத்து வயசுப் பேத்திக்கு ஆதங்கமாகத் தோன்றியிருக்க வேண்டும். “”வாங்க தாத்தா.. வூட்டுக்குப் போவொம்..” என்று அவரின் கையைப் பிடித்து இழுக்கத் துவங்கினாள். காம்பவுண்ட் சுவர் தாண்டி உள்ளே வந்து வீசியக் காற்றின் குளிர்ச்சியில் அவளின் இளந்தேகம் அதிர்வடைந்துக் கொண்டிருந்ததை அவர் உணர்ந்தார்.
வாசல் முகப்பில் கதவுச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு மிதப்பாக நின்றிருந்தான் துரைச்சாமி. தாட்டியமான உடல்வாகு, தடித்த முகத்தில் கத்தியைச் செருகி வைத்திருந்ததைப் போல விறைப்பான மீசை. அவன் உடுத்தியிருந்த வெள்ளைச் சட்டையிலும் வெள்ளை வேட்டியிலும் குழல் விளக்கின் வெளிச்சம் பதிந்து மின்னல்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
சம்பாஷணையின் அரவம் கேட்டு அவ்வப்போது அவனின் மனைவியும், டவுன் சட்டை அணிந்திருந்த மகனும் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போயினர். தன்னைக் கூர்ந்து முறைத்துவிட்டு அவர்கள் போயிருந்ததை அப்பட்டமாகத் தெரிந்து கொண்டார் அவர்.
முத்தையாவுக்கு அந்த இடத்தை விட்டு நகல மனசில்லாமல் இருந்தது. சுகவீனப்பட்டுக் கிடக்கும் மருமகனின் வேதனையான முகம் அவரின் நினைவை அலைகழித்தது. மருமகனுக்கு ஒன்று நிகழ்ந்து போனால் மகளின் குடும்பம் தெருவுக்கு வந்துவிடும். ரொம்பவும் சிக்கலான நோய் என்றால் பெரிதாகச் செலவு செய்துப் பார்க்கிற வசதியில்லை அவளுக்கு. மகன்தான் உதவிப் பண்ணியாக வேண்டும்.
“”அய்யா…”
“”ஒழுங்கா போறியா, இல்ல என்கிட்ட ஒதவாங்கப் போறியா?”
பேத்தியின் வேகம் அதிகமானது. தாத்தாயின் கையைப் பற்றி பலமாக இழுத்தாள். இனியும் அவர் செல்லவில்லை என்றால் அவள் அழுது கூப்பாடு போட்டு விடுவாள் என்பது உறுத்தியது.
தெருவுக்கு வந்தபோது நாய் ஒன்று அவர்களை எதிர்நோக்கி நின்று குரைத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து அவர் உக்கிரமாய் முறைத்ததில், சட்டென்று குரைப்பை நிறுத்திவிட்டு முனகலோடு விலகிப் போனது.
வீட்டுக்கு வந்தார். அடுப்பில் உலை ஏறி இருந்தது. சக்கைப் பிள்ளையார் மாதிரி அடுப்புக்கு முன் உட்கார்ந்திருந்தாள் அஞ்சலை. பக்கத்தில் கிடந்த சுள்ளி விறகுகளை ஒவ்வொன்றாய் எடுத்து முறித்து அடுப்புக்குள் திணித்துக் கொண்டிருந்தாள். தீ வெளிச்சத்தில் அவளின் முகவாட்டம் துல்லியமாய்த் தெரிந்தது. வாத நோவில் தேகத்தை முன்னும் பின்னும் அசைத்துக் கொடுத்தவள், அவர்களைக் கண்டதும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு “என்ன?’ என்பதுபோல் அனிச்சையாய் ஏறிட்டாள்.

“”முந்திச் சேலையில துட்டு ஏதாச்சும் போட்டுருக்கியா..?”
“”ஒமக்குத் தெரியாம எங்கிட்ட ஏதுய்யா துட்டு?”
“”அவம்பாவம் பிடிச்ச தொரச்சாமிப் பய, அஞ்சு ரூபாய்க்குப் போன் பண்ணக் கூடாதின்னுட்டான்..”
“”பின்னே எம்புட்டாம்?”

“”பத்து ரூவா குடுக்கணுமாம்..”
“”ஒம்மகிட்ட எவ்ளவ் இருக்கு?”
“”அஞ்சு ரூவா. பீடி வாங்கணுமின்னு வச்சிட்டிருந்தேன். வேற துட்டுக்கு எங்கனப் போவேன்?”
“”பக்கத்து வூட்ல யாராச்சும் தரமாட்டாவளா..?”
“”அவிங்ளும் நம்மளக கெனக்காதான..?”
“”இப்ப என்னச் செய்யறது? மொவனுக்குப் போன் பண்ணாத்தான் ஏதாச்சும் பணம் அனுப்பி வைப்பான். மகா என்னப் பாடு படுதாளோ தெரியலியே..”

“”சரி அதுக்கு ஏன் அழுத? அரிசியை ஒலயிலப் போட்டுட்டியா?”
“”இல்ல, ஒல இன்னும் கொதிக்கல..”
“”சரி அதுல ஒரு கிலோ இருக்குலா? பாதிய எடு. வாங்கனக் கடையிலேயே குடுத்துட்டுக் காசு வாங்கிட்டு வாரேன்..”
“”பொங்கற அரிசியவா? காலையில சோத்துக்கு?”
“”நாளைக்குப் பட்டினி கெடந்தா என்ன, செத்தாப் போயிருவம்? அத எடு மொதல்ல..”
உள்ளூர்க் கடை என்பதால் கொடுத்து வங்குவதில் குழப்பமில்லாமல் போயிற்று.

இருள் இறுகிக் கிடந்தது. தெருவின் மேற்கு அற்றத்தில் அடர்த்தியாக நின்றிருந்த உடைமரங்களின் கிளைகளில் கொத்தாகத் தொங்கிய சாட்டைச் சாட்டையானக் காய்கள் சலசலத்துக் கொண்டிருந்தன. மண் சாலையை நெருங்கியதும்தான் அவருக்குள் தெளிச்சல் வந்தது. மேற்குத் தெரு வீடுகளிலிருந்து சன்னமாம் ஒளிச்சிதறிக் கொண்டிந்த வெளிவிளக்குகளின் உபயத்தால் துரைச்சாமியின் வீட்டை நெருங்கியிருந்தார் முத்தையா.

முற்றத்துக் குழல் விளக்கு முன்னை மாதிரியே பகட்டு குறையாமல் எரிந்துக் கொண்டிருந்தது. முன்னறையில் சேர் போட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் ஆழ்ந்திருந்தான் துரைச்சாமி. சந்தடிக் கேட்டதும் அதிர்வுடன் கவனத்தைத் திருப்பிக் கொண்டே முற்றத்தை வெறித்துப் பார்த்தான்.

முத்தையாவின் அறிபறியான நடை, துரைச்சாமியின் ரத்தத்தை உறைய வைத்திருந்தது. நாளங்களில் சூடேறத் துவங்கியது. சடக்கென்று எழுந்து நின்று அவரை எதிர்கொள்ளும் முனைப்பில் வாசலுக்கு வந்தான். அருகில் நெருங்க நெருங்க அவரின் கால்கள் கொடியாய் குழையத் துவங்கியதும்தான் அவனுக்குள் நிதானம் படர்ந்தது.
இதம்பதமாய் வார்த்தையாடினார் அவர். “”பத்து ரூவாத்தானய்யா கேட்டிய? கொண்டு வந்திருக்கேன். போன் பேசிக்கிறட்டுமாய்யா?”

“”அத அப்பமே கொண்டு வந்திருக்கலாமில்ல? எதுக்கு அப்பிடித் திமிர்த்தனம் பண்ண? அதிகமா கேக்கறனோ? ஒன் வூட்ல போன் வச்சிருந்தா அதோடக் கஷ்டம் ஒனக்குத் தெரியும்..”

“”கையில காசு இல்லாமத்தான்யா அப்படிச் சொல்லிப்புட்டேன். அவசரமா போன் பண்ணனும்யா..”
அவர் தந்த சில்லரைகளை வாங்கி எண்ணிப் பார்த்தான். வியர்வைத் துளிகளைப் போல வெள்ளியாய் பரிணமித்தன காசுகள். பத்து ரூபாய் சரியாக இருந்தது. வாசலை விட்டு நகன்று அவருக்கு இடம் விட்டு நின்றான்.
கதவின் அடைப்புப் பகுதியின் பக்கத்துச் சுவரில் இறுக்கமாய் பொருத்திக் கிடந்தது டெலிபோன். கையலகப் பலகையின் மேல் ஓர் ஆமையைப் போல கவிழ்ந்துக் கொண்டிருந்தது.
கையில் சுருட்டி வைத்திருந்த தாளை விரித்து எண்களைப் பார்த்தார். பலகையின் விளிம்பில் தாலை மலர்த்தி வைத்து, இடது கையில் ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டார். ஒவ்வொரு எண்ணாய் பார்த்துப் பார்த்து அடித்ததில் சற்று சிரமப்படவேண்டியதிருந்தது. அது “செல்’லின் எண். இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஊருக்கு வந்திருந்த அவரின் மகன்காரன் தந்துவிட்டுப் போயிருந்த எண் அது. அரசாங்கத்தில் ஆட்டோ லோன் வாங்குவதற்காக சாதிச் சான்றிதழ் தேவையாயிருந்தது. சாதிச் சான்றிதழ் எடுப்பதற்கு அவசர அவசரமாக ஊருக்கு வந்துவிட்டுப் போயிருந்தான் அவன்.
மறுமுனையில் “”ஹலோ..” கேட்டது.
அவர் பதற்றமானார்.
“”புஷ்பராஜு. நாந்தா அய்யா பேசுதென். ஆங் நல்லாயிருக்கோம். நாவர்கோயில்ல அக்கா மாப்பிள்ளைக்கு சொசக்கேடா இருக்குதாம். பணம் கேட்டு மகளை அனுப்பி வச்சிருக்கா. கொஞ்சம் பணத்தோட ஊருக்கு வந்துட்டுப் போடா. அவளுக்கு ஒத்தாசைக்கு ஒறவுல யாரும் இல்லப்பா. ஆமாம்ப்பா…”
“”…..”
“”நீ மட்டும் வந்துட்டுப் போ. …. திரும்பிப் போயிரலாம். ஆமாம்பா.. ஆமாம். வரும்போது அய்யாவுக்கு “செல்லு’ ஒண்ணு வாங்கிட்டு வாப்பா, அங்கதான் சவுரியமா கெடைக்குமாமே. ஆமாப்பா, அடுத்த வூட்ல வந்துதான் பேச வேண்டியிருக்கு. அதுவும் ஒரு தடக்கப் பேசறதுக்குப் பத்து ரூவா அநியாயமா கேட்குதாவ. ஆமாப்பா. இப்பப் பேசுறதுக்குக் கூட பணம் பத்தாம, சோத்துக்கு வாங்கி வச்சிருந்த அரிசியக் கடையிலக் கொண்டுக் குடுத்திட்டு அவிகக்கிட்ட காசு வாங்கிப் பேசுதேன். சரிப்பா.. வாங்கிட்டு வா… என்ன… வச்சிரட்டுமா?”

பிசிறலோடு வார்த்தைகளை முடித்திருந்தார். ரிசீவரை பழையபடியே வைத்துவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டார். பதற்றம் குறைந்திருந்தது அவருக்கு. முகத்தில் மகிழ்ச்சியின் இழையோடியது. கால்களை அவசரமில்லாமல் எடுத்து வைத்து வாசலை அடைந்தார். துரைச்சாமியின் முகத்தைப் பார்ப்பதற்குத்தான் அவருக்கு வேதனையாக இருந்தது. அவன் முகத்தில் அறைந்தது போல அவர் போனில் பேசியிருந்த வார்த்தைகளே அவனின் கோபத்துக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டார். அதைத்தானே தானும் விரும்பியது என்று மனசுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு வாசலைக் கடந்து வெளியேறிப் போனார்.

+

வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (3-Nov-15, 10:00 pm)
பார்வை : 79

மேலே