பூவும் கதவும்
முன்னெச்சரிக்கை: செம நீளமான மொக்கைக் கட்டுரை. பத்தாங்கிளாஸ் இலக்கண வகுப்பை நினைவுபடுத்தும். Enter at your own risk.
இன்று மதியச் சாப்பாட்டுக்காக வீடு வரும் நேரம், ஃபோனில் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
பலமுறை கேட்ட பாட்டுதான். இந்த ப்ளாகிலேயே அதைச் சிலாகித்து ஒரு நீண்ட வியாசம்கூட எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அந்தப் பாட்டின் முதல் வார்த்தையிலேயே ஒரு சந்தேகம்.
பூ + கதவு = பூக்கதவு என்றல்லவா வரவேண்டும்? அந்த ‘ங்’ எங்கிருந்து நுழைந்தது?
கொஞ்சம் யோசித்தபோது வேறு பல சினிமாப் பாடல்கள் நினைவுக்கு வந்தன: ‘பூந்தேனில் கலந்து’தான், ‘பூத்தேனில் கலந்து’ அல்ல, ‘பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்’தான், ‘பூப்பாவாய் ஆம்பல் ஆம்பல்தான்’, ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’தான், ‘பூ முடிப்பாள் இந்தப் பூக்குழலி’ அல்ல.
ஆனாலும், சந்தேகம் தீரவில்லை. ட்விட்டரில் இப்படி எழுதிவைத்தேன்:
பூங்கதவே? பூக்கதவே? என்ன வித்யாஸம்?
அடுத்த சில நிமிடங்களுக்குள், பல நண்பர்கள் பதில் எழுதியிருந்தார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை:
பூங்காவிற்கும் பூக்காவிற்கும் உள்ள வித்யாஸம்தான், ஆனால் அது என்னவென்று மறந்து போயிற்று ;)
பூவிலான கதவு பூங்கதவு! கதவில் பூ இருந்தால் பூக்கதவு… (எதாவது சொல்லி வைப்போம்)
பூங்கதவு – ‘பூ’ போன்ற கதவு?, பூக்கதவு – பூவினால் ஆன கதவு? உறுதியா தெரியல.
பூங்கா என்ற சொல் பூ மற்றும் கா விலிரிந்து வந்ததாகப் படித்திருக்கிறேன். அந்த இலக்கணப்படிதான் பூங்கதவாய் இருக்கும்.
made by flower. another one was make with flower.
பூவைப் போன்ற கதவு பூங்கதவு. பூவில் செய்த கதவு பூக்கதவு!
இந்த பதில்களில் பெரும்பாலானவை சரியாகத் தோன்றினாலும், அதற்குப் பொருத்தமான இலக்கண விளக்கத்தை இவர்கள் சொல்லவில்லை. அதைச் செய்தவர் நண்பர் . அவர் சுட்டிக்காட்டிய இணைப்பு
இந்த இணைப்பில் ஒரு நன்னூல் சூத்திரம் (புணர்ச்சி விதி) உள்ளது. இப்படி:
பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்
சுருக்கமான இந்தச் சூத்திரத்தைக் கொஞ்சம் நீட்டினால் இப்படி மாறும்:
‘பூ’ என்ற வார்த்தையுடன் இன்னொரு சொல் சேர்ந்தால், அந்தச் சொல்லின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தால், அதன் இனமாகிய மெல்லின எழுத்து அங்கே ஒற்று வடிவத்தில் தோன்றும்.
உதாரணமாக,
1. பூ + கதவு
இங்கே ‘பூ’வுடன் சேரும் வல்லின எழுத்து ‘க’, அதன் இனமாகிய மெல்லின எழுத்து ‘ங’, அதன் ஒற்று ‘ங்’, ஆக, பூ + ங் + கதவு = பூங்கதவு.
2. பூ + சிரிப்பு
இங்கே ‘பூ’வுடன் சேரும் வல்லின எழுத்து ‘ச’, அதன் இனமாகிய மெல்லின எழுத்து ‘ஞ’, அதன் ஒற்று ‘ஞ்’, ஆக, பூ + ஞ் + சிரிப்பு = பூஞ்சிரிப்பு.
அவ்ளோதான். பிரச்னை தீர்ந்தது. எல்லாரும் காபி சாப்பிடப் போகலாம்!
ஆனால் எனக்கு இந்தச் சூத்திரத்தில் முழுத் திருப்தி இல்லை. ’பூங்கதவு’ சரி என்று புரிகிறது, ஆனால் ‘பூக்கதவு’ எப்படித் தப்பாகும்? ‘பூக்கடை’ என்று சகஜமாகச் சொல்கிறோமே, அது என்ன கணக்கு?
கூகுளில் கொஞ்சம் நோண்டினேன். நண்பர்கள் @sramanaa மற்றும் @BalaramanL நல்ல உதாரணங்களைச் சேர்த்து உதவினார்கள்.
சிறிது நேரத்துக்குப்பின், ஒரு மேட்டர் சிக்கியது.
பொதுவாக, ‘பூ’ என்ற சொல் இரண்டு அர்த்தங்களில் வரலாம்:
1. பூ மாதிரி (மென்மையான) கதவு
2. பூவினால் செய்யப்பட்ட கதவு
இதை முன்வைத்து யோசிக்கும்போது, ‘ங்’, ‘க்’ குழப்பத்துக்கும் ஒருமாதிரி குத்துமதிப்பான பதில் கிடைத்தது:
எடுத்துக்காட்டாக, பூ + குழலி (குழல் = கூந்தல், குழலி = கூந்தலைக் கொண்டவள்) என்பதைப் பார்ப்போம். இதற்கு இரண்டு அர்த்தங்கள் சொல்லமுடியும்:
1. மலர் போன்ற மென்மையான கூந்தலைக் கொண்ட பெண்
2. மலரைக் கூந்தலில் சூடிய பெண்
முதல் உதாரணத்தில் அந்தப் பெண் தலையில் பூவைச் சூடியிருக்கவேண்டிய அவசியமே இல்லை, அந்த தலை முடி பூப்போல மென்மையானது என்பதுதான் மேட்டர்.
இங்கே பூ + குழலி = ’பூங்குழலி’ என்பது கச்சிதமாகப் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.
இரண்டாவது உதாரணத்தில் வரும் பெண், தலையில் பூவைச் சூடியுள்ளாள். இவளுடைய முடி கரடுமுரடாக இருந்தாலும், அவள் பூ வைத்திருப்பதால், இவளும் பூ + குழலிதான், ஆனால் ‘பூங்குழலி’ அல்ல, ‘பூக்குழலி’.
இதேபோல்,
பூ + கடை = பூக்கடை = (நிஜ) பூக்களை விற்கும் கடை
ஆனால்
பூ + கவிதை = பூங்கவிதை = பூப்போல மென்மையான கவிதை, நிஜமான பூக்களைக் கசக்கிப் பிழிந்து மை தயாரித்து எழுதியது அல்ல Smile
ஆக, the rule is:
1. பூவுடன் வல்லினம் சேரும்போது
1a. அந்தப் பூ நிஜமான பூவாக இருந்தால், அந்த வல்லின எழுத்தின் ஒற்று அங்கே வரும் (பூ + க் + கதவு)
1b. அந்தப் பூ நிஜமாக இல்லாமல், ‘பூப்போன்ற மென்மை’யைக் குறித்தால், அங்கே அந்த வல்லின எழுத்தின் இனமாகிய மெல்லின எழுத்து ஒற்று வரும் (பூ + ங் + கதவு), பூவின் மென்மையைக் குறிக்க எக்ஸ்ட்ராவாக ஒரு மெல்லின எழுத்து Smile
என்ன? ஒருமாதிரி கோவையாக வருகிறதா?
இந்த விளக்கம் எனக்குத் திருப்தி. நண்பர்கள் @sramanaa மற்றும் @BalaramanL இதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒரே பிரச்னை, இது சரியா தவறா என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த விளக்கத்தை Explicit ஆகச் சொல்லும் சூத்திரங்கள் எவையும் எங்களுக்கு அகப்படவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து உறுதிப்படுத்துங்கள்.
அது நிற்க. இந்தக் கட்டுரையை எழுதியபின்னர், கூடுதல் உதாரணங்கள் ஏதேனும் கிடைக்குமா என்று நெட்டில் தேடினேன். அருமையான ஒரு பாட்டு கிடைத்தது.
சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் ஒரு கதாபாத்திரம். அவளுக்குப் ‘பூம்பாவை’ என்று பெயர் சூட்டுகிறார்கள். ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்:
பூவினாள் என வருதலின் பூம்பாவை என்றே
மேவு நாமமும் விளம்பினர்
அதாவது, அவள் பூவைப் போன்ற பாவை, ஆகவே அவளுக்குப் ‘பூம்பாவை’ என்று பெயர் சூட்டினார்கள்.
இதற்கு விளக்கம் எழுதிய திரு சி. கே. சுப்பிரமணிய முதலியார் கூடுதலாக ஒரு வரியைச் சேர்க்கிறார்:
’பூப்பாவை’ என்று வல்லொற்று வரின் இவளின் மெல்லிய பண்புக்கு மேவாது
அடடே!
***
என். சொக்கன் …
09 05 2012
UPDATE:
மேற்சொன்ன இந்த விதி(?)க்குப் பொருந்தாத வார்த்தைகள் சிலவற்றை இங்கேயும் ட்விட்டரிலும் பேசினோம், அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். சரியான இலக்கண சூத்திரம் கிடைத்தால் இந்த மர்மம் விலகிவிடும்:
1. பூஞ்சோலை : (நிஜப்) பூக்கள் உள்ள சோலை, அப்போ ‘பூச்சோலை’ என்று வரணுமோ?
2. பூந்தேன்: இங்கேயும் நிஜப் பூவின் தேன்தானே? அப்போ அது ‘பூத்தேன்’ என்று வரணுமா? (அதன் அர்த்தம் வேறாச்சே :) )
3. பூந்தோட்டம்: Same question, பூத்தோட்டம் என்று எழுதணுமா?
இந்த சினிமாப் பாட்டு வரியைக் கவனியுங்கள்: ‘பூந்தோட்டக் காவல் காரா, பூப்பறிக்க இத்தனை நாளா?’
இதில் பூ + தோட்டம் என்பதும் பூ + பறிக்க என்பவை இரண்டும் ஒன்றுதான், நிஜப் பூ + வல்லினம், ஆனால் முதல் வார்த்தையில் மெல்லின ஒற்று (ந்) வருகிறது (பூந்தோட்டம், not பூத்தோட்டம்), ஆனால் இரண்டாவது வார்த்தையில் வல்லின ஒற்று (ப்) வருகிறது (பூப்பறிக்க, not பூம்பறிக்க) … குழப்பம் continues
அப்புறம் இன்னொரு விஷயம், இந்தப் பதிவின் பின்னூட்டத்திலும் ட்விட்டரிலும் பல நண்பர்கள் இந்தக் கட்டுரையை ‘ஆராய்ச்சி’ என்றார்கள். அது தப்பான வார்த்தை. இது ஆராய்ச்சி என்றால் உண்மையாகவே உழைத்துச் செய்கிற நிஜ ஆராய்ச்சிக்கு மரியாதை போய்விடும், வேண்டுமென்றால் இதை ‘ஆர்வாய்ச்சி’ என்று அழைப்போம் :)