மூன்று பரிசுகள்

நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’

‘அதனால?’

’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’

‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’

என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.

தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.

மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.

என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.

புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.

அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>

இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.

சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.

பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’

‘இல்லை அங்கிள்.’

‘ஏன்? என்னாச்சு?’

’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.

’இப்ப லீவ்தானேடா?’

’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’

அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.

அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’

இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.

ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’

இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’

‘அப்ப நான் எதை எடுக்கறது?’

‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’

உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.

இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.

ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.

‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.

சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.

ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?

நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’

’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:

நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்

கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.

ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.

என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.

ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.

’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’

‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’

போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’

கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.

அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.

இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.

எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.

’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’

‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’

நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.

ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!

அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.

இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’

’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.

நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.

‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’

‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’

நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.

***

என். சொக்கன் …

06 05 2012

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி மூலம்:என (4-Nov-15, 12:04 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : moondru parisukal
பார்வை : 207

மேலே