முள் மரம்

முள் மரம்
-----
M.Jagadeesan

" என்ன முனியா? கையெல்லாம் இரத்தம்? " என்று கேட்டார் தணிகாசலம்.

" ஐயா! வாசலின் அருகே வளர்ந்திருந்த முள் மரத்தை வெட்டும்போது கையைக் கிழித்துவிட்டது." என்று சொன்னான் முனியன்.

' இதுக்குத்தான் அது செடியாக இருக்கும்போதே வெட்டிவிடு என்று சொன்னேன்; நீதான் கேட்கவில்லை. நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய செடியைக் கோடரி கொண்டு வெட்டும்படி செய்துவிட்டாய்! அதனால்தான் அது உன் கையைக் கிழித்துவிட்டது. எப்போதும் ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும். தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்; ஞாபகத்தில் வைத்துக்கொள்." என்று முனியனுக்கு அறிவுரை வழங்கினார்.

பேசிக்கொண்டே இருந்த தணிகாசலம் திடீரென்று இருமத் தொடங்கினார். நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு இருமிக் கொண்டே வாஷ்பேஸின் அருகில் சென்றார். வாஷ்பேஸினில் எச்சிலைத் துப்பினார். அவர் துப்பிய எச்சிலில் இரத்தம் கலந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்பாவின் இருமல் சத்தம் கேட்டு அங்கு வந்த கீதா , அப்பா துப்பிய எச்சிலில் இரத்தம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

" என்ன அப்பா இது? குடிக்கவேண்டாம் என்று டாக்டர் பலமுறை சொல்லியும் கேட்காமல் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்; வியாதியை முற்ற விட்டுவிட்டீர்கள். இப்போது பார்த்தீர்களா?நீங்கள் இருமும்போது இரத்தம் வருகிறது. முனியனுக்கு நீங்கள் கூறிய அறிவுரை உங்களுக்கும் பொருந்தும்.எப்போதும் ஒரு தீமையை, அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்;தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்." என்றால் கீதா.

கீதா சொல்லி முடிக்கும் முன்பாக , அவளுடைய அம்மா அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள். " பாவி மகளே! +2 தேர்வில் நீ எல்லாப் பாடத்திலும் பெயிலாகி விட்டாய் ; இப்பதான் இன்டர்நெட்டில் உன்னுடைய ரிசல்டைப் பார்த்தேன்; எதிர் வீட்டுப் பையனுடன் காதல், கத்திரிக்காய் என்று அலையாதேன்னு தலபாடாய் அடிச்சுகிட்டேனே! கேட்டாயா நீ! இந்த லட்சணத்துல அப்பாவுக்கு அறிவுரை சொல்ல வந்துட்டா! அப்பாவுக்கு நீ சொன்ன அறிவுரை உனக்கும் பொருந்தும். ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்; தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக்கொள். " என்று கீதாவின் அம்மா பொரிந்து தள்ளினாள்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. ( பகைத் திறந் தெரிதல் -879 )

முட்செடியை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்;அது முற்றி வயிரம் பாய்ந்துவிட்டால், வெட்டுபவனின் கையைத் தைத்துத் துன்பப்படுத்தும்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (5-Nov-15, 9:02 pm)
Tanglish : mul maram
பார்வை : 90

மேலே