சீதை திருமணம்
சீதை திருமணம்
( நண்பர் கவிஞர் ஐயாறப்பன்
மணப்பொன் விழாக் கவியரங்கம்
-பாரதி கலைக் கழகம்--14-09-03 )
மிதிலைநகர் வீதியிலே துறவு செல்ல,
வீரத்தோ டிளமையுமே தொடர, ஆங்கே
மதுவுண்ட கிறக்கத்தைப் பெண்கள் பெற்றார்;
மனமயக்கம் ஆங்குவந்த மற்றோர் பெற்றார்;
இதுவன்றோ அழகிற்காம் எல்லை யென்றே
இதயங்கள் கழன்றோடத் தவித்தார் பல்லோர்;
மிதிலைநகர் வீதியெலாம் மதும யக்கம்;
விழுந்தவர்கள் விழுந்தவரே எழுந்தா ரில்லை.
முனிவரவர் முன்செல்லப் பின்னே ஏகும்
முதிரழகின் நிமிர்ந்தநடை கண்ட மாந்தர்
கனிசுவைத்துத் திளைத்திட்டார்; நடந்து சென்ற
காளைநிமிர்ந் துயர்ந்துபார்க்க, மாடத் தின்கண்
தனியழகின் கொள்முதலைக் கண்டான்; பாய்ந்து
தைத்திட்ட கண்ணெடுக்க மறந்தான்; கன்னி
கனியானாள்; கண்ணாலே சுவைத்தான்; காளை
கண்போன போக்கிற்குத் தடமே இல்லை.
அவன்பார்த்தான்; திரண்டதோளை அவளும் பார்த்தாள்;
ஆங்கிரண்டு கண்ணிணைகள் இணையக் கண்டார்;
அவன்கண்ணின் வழிபுகுந்தாள் சீதை; அந்த
அழகுமலர்க் கண்வழியே புகுந்தான் ராமன்;
எவர்கண்கள் எப்போது தைத்த வென்றே
எவர்காணக் கூடுமந்த இருவர் நெஞ்சும்
இவரவரென் றிலையென்றே ஒன்றா யானார்;
இதயத்தில் தீப்பற்றப் பிரிந்து சென்றார்.
சனகனவன் நெஞ்சமுலைக் களமா யாச்சு;
தனயனுக்குச் சீதையென நெஞ்சம் சொல்லும்;
மனமயக்கம் சிவதனுசு முழுதா யீயும்;
வளைத்தவனுக் கல்லவோயிச் சீதை; இந்த
வனக்களிறு வில்வளைக்க வேண்டு மென்று
மனசுக்குள் யாகமொன்று செய்தான்; மாந்தர்
சனகனவன் அறிவையெடை போட்டார்; இங்கே
தடையாக வில்லைவைத்தான் மடைய னென்றார்
உருவத்தால் அச்சுறுத்தும் வில்லை வீரர்
ஓரறுப தினாயிரம்பேர் இழுத்து வந்தார்;
பெருமன்னர் பலர்வில்லை வளைக்க எண்ணிப்
பலமிழந்து முதுகெலும்பு வளைந்து சென்றார்;
புருவத்தை வளைத்துவில்லை இராமன் பார்த்தான்;
'படக்'கென்ற ஒலியினையே மற்றோர் கேட்டார்
புருவத்தின் வளைப்பாலே போதை யீந்த
பெண்ணழகின் வெறிமுன்னே வில்லா நிற்கும்?
வில்வளைத்தா னொருவீரன் என்ற செய்தி
மிதிலைநகர் மோதியது; புருவ மென்னும்
வில்வளைத்த சீதையங்கே நடுங்கி விட்டாள்.
வேறொருவன் வளைத்திருந்தால் வாழே னென்றாள்.
எல்லாமவ் விதிக்கணக்கே யென்றால் இங்கே
இக்கணக்கு மாறிடுமா? பிரிந்த வர்கள்
வில்வளைப்பால் இணைகின்றார்; அவர்கட் குள்ளே
வேறெந்தப் பேச்சுரையும் தேவை தானா?
மலர்பூத்து மகிழ்ந்தனவாம் மரங்க ளெல்லாம்;
மனம்பூத்து மகிழ்ந்தனராம் மிதிலை மக்கள்;
அலைபூத்து மகிழ்ந்தனவாம் நுரைகள்; தூய
அகம்பூத்து மகிழ்ந்தனராம் சான்றோர்; பொங்கும்
அலைபூத்த கமலத்தாள் நல்லோர் நெஞ்சின்
அடிபூத்த பெரியவனை மிதிலை மண்ணில்
நிலைபூத்து மணங்கொண்டு மகிழ்ந்த கோலம்
நெஞ்சுபூத்து நினைவாக்கிக் கொண்டார் மாந்தர்.
கண்டவர்கள் விண்டுரைக்க மாட்டா ராகிக்
கைச்சாடை முகச்சாடை காட்டி னார்கள்;
கொண்டார்கள் மணக்கோலம்; தாமே பேசிக்
கொள்ளைபோன நெஞ்சத்தைத் தேடி னார்கள்;
விண்டார்கள்; வாயுரைத்த சொற்க ளெல்லாம்
வெறுஞ்சொற்க ளாகிடவே மயங்கி னார்கள்;
கண்டார்கள் விண்ணுலக மணக்கோ லத்தைக்;
கமலமகள் மாயவனை இணையக் கண்டார்.
கண்ணிரண்டு போதாமல் அள்ளிக் கொண்டு
கருத்துக்குள் குவித்தார்கள்; மணக்கோ லத்தை
எண்ணிமனம் நிறையாமல் ஏங்கி யேங்கி
எங்கெங்கோ திரிந்தார்கள்; இருண்ட மேக
வண்ணனவன் பொன்மேனி இணையக் கண்டு
வாழ்க்கையது நிறைந்ததென்றே ஆர்த்து நின்றார்.
எண்ணமெலாம் நிறைந்திட்ட இருவர் தம்முள்
இணைந்தகோலங் கண்டுமனம் மகிழ்ந்தார் மக்கள்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
