காலைச் சாரல் 19 - தீபாவளி
11-11-2015
அதிகாலை எண்ணங்கள்....."தீபாவளி"
தீபாவளியைச் சிறக்கச் செய்வது 'பட்டாசு'தான்... வயதானபின் ஆர அமர ஆராய்ந்து அது நன்மை - தீமை, வேண்டும் - வேண்டாம், புகை - மாசு, அசுத்தம் - உயிரினங்களுக்குத் தீங்கு என்று கருத்துப்போட்டு கவிதை புனைந்தாலும், அதைப் பற்றி நிறைய படித்தாலும், குறிப்பிட்ட வயதினருக்கு தீபாவளி என்றால் பட்டாசு என்பது இன்றியமையாதது(இந்த வார்த்தையைப் போட்டாத்தான் கட்டுரைபோல் இருக்கு..)
ஒரு காலகட்டத்தில் யார் வீட்டுமுன் அதிக பட்டாசுக் குப்பை இருந்தது என்று இறுமாத்தல் கொண்டதும் உண்டு...
பட்டாசைப் பற்றி மிகப் பழமையான நினைவு ஏழு வயது இருக்கும்போது, கேரளாவில், என்னையும் அருகில் ஆறு வயது தம்பியையும் உட்கார வைத்து வேடிக்கை பார்க்கச் சொல்லி, அப்பாவும் அவர் நண்பரும் நூறு ரூபாய்க்கு(1958) பட்டாசை சரமாரியாக வெடித்துத் தள்ளியது..... (சிவகாசியிலிருந்து வாங்கி வந்தாராம்!)
அதன் அடுத்த வருடம், வெடிக்காத ஒரு உதிரிப் பட்டாசை வெடிக்கும்வரை விளக்கில் வைத்து கையைச் சுட்டுக்கொண்டது.... நமத்துப் போன பட்டாசுகளை வானலியில் வைத்து அடுப்பில் காய்ச்சி சமயலறையில் வேடிக்கவைத்தது, இவைகள் பட்டாசு வெடிப்பதில் அடங்குமா என்று தெரியவில்லை....
கொஞ்சம் பெரியவன் ஆனபின் அடுத்த வீட்டு அண்ணாவுடம் பந்தர் தெரு சென்று 25 ரூபாய்க்கு(1965) தூக்க முடியாமல் தூக்கி வந்த அனுபவம் இன்னும் நினைவில்.... மூத்தவனான எனக்கு பட்டாசுகளை தம்பிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது.......
***
அம்மா 3:30 மணியிலிருந்தே எழுப்ப ஆரம்பித்து விடுவாள்.... முதல் பட்டாசு (குளிப்பதற்கு முன் ) எல்லோரையும் எழுப்ப வைக்கும் சரம் என்னுடையதாகத் தான் இருக்கும்.... அம்மா காலில் நலங்கிடும்போது குறுகுறுப்பு, தலையில் வழியும் (மிளகு, மிளகாய், மஞ்சள் கலந்து காச்சிய) எண்ணெய், வென்னீர் அடுப்புப் புகை, கண் எரிச்சல், அவசரக் குளியல், சாமிப் படம் முன் வைத்துள்ள புதுத்துணியை எடுத்து அணிவது, பட்டாசு, பட்சணம் - தீபவாளி மருந்து. இது தான் நான் அன்று குழந்தையாய் இருந்தபோது அறிந்த தீபாவளி.. இத்துடன் அருகில் இருப்பவர்கள், உறவினர் எல்லோருக்கும் பட்சணம் விநியோகம்.... (அம்மா ஆசையாய் ஒரு வாரமாகச் செய்தது...) வீடு வீடாக சென்று வினியோகிக்கும் உரிமையும் எனதே..!
***
கொஞ்சம் என்ன, நிறைய மாறிவிட்டது.... நான் பட்டாசு வாங்குவது 15 வருடங்களாக முற்றிலும் நின்று விட்டது....
எங்கள் வீட்டில் யாரும் வெடிப்பதில்லை...
தீபாவளிக்கு எனக்கு நானே புதுத்துணி வாங்குவதும் நின்று ஐந்து வருடங்கள் ஆகிறது.... (என் பெண்கள் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள்....)
பேரன், பேத்தி, மாப்பிள்ளைக்கு மட்டும் நான் புதுத்துணி எடுப்பது தொடர்கிறது... பெண்களுக்குத் தங்கக் காசு....
வீட்டில் பலகாரம் செய்வது மனைவியின் உடல் நிலை பொறுத்தது.... வீண் சிரமம் வேண்டாம் என்றால் பிரபல இனிப்புக் கடையில் வாங்கி விடுவோம்...
எங்கள் வளாக பாதுகாவலர்கள், வேலை செய்பவர்கள், அவர்களுக்கும் கடையில் வாங்கிய இனிப்பு-காரம், பணம்.... விநியோகம்.. (அம்மா வழி...)
***
இந்த வருடம் சிறப்பு....
தொலைக்காட்ச்சியில் எந்த சிறப்பு நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை..... (மழையின் இடையே கொஞ்சம் கொஞ்சம் தெரிந்தும்....)
---- முரளி