உயிருக்குள் ஒளிந்த நீ

நாட்களின் எண்ணிக்கைக்குள்
உன் உயிர் ஊர்ஜிதம் செய்கையில்
நானித்து தலை கவிழ்கிறேன்
உன் செய்தி பகிர்கையில்
ஆன்மா மௌனித்து அடங்குகிறது

அவருடன் இதுவரை
நின்று கொண்ட என்
ஓவியம் - உன் தூரிகைகளால்
வர்ணமாகிறது

உனக்கான சுவாசத்தை - என்
நாசிகளுக்குள்
புகுத்துகையில் மூச்சிரைக்கிறது

என் உயிருக்குள் நீ
ஒளிந்து கொள்கையில்
உடல் பருத்துப் போகிறேன்

அடிகடி வேதனைகள்
அருவருப்பான இயல்புகள்
வெறுத்துப் போகையிலும்
உன் பற்றிய எதிர்பார்ப்பில்
அங்கங்கள் பொறுத்துக் கொள்கின்றன

வெறுமனே இருந்த
பெண்மையின் -நிறையென ஆன
பூரணம் நீ

அடி வயிற்றின்
கணம் பற்றி -அவ்வப் போது
அச்சம் கொள்கையில்
உரசும் உன் பாதங்களால்
உயிர் தடவுகிறாய்

பத்துத் திங்கள் - உன்
பத்திரம் வேண்டி - நான்
பத்தியம் காக்கையில்
சுமையல்ல நீ ..?
என் சுகமான பாரம் ..!!

அசைவுகளில் சிலிர்க்கிறேன்
ஆனந்தம் காண்கிறேன் ...!
பிஞ்சு உடல் புரள்கையில்
நெஞ்சு நிறைகிறேன்

முட்டி மோதி - நீ
வெளியேறும் தருணம்
மரணித்து மறுமுறை ஜனனிக்கும்
நாள் பார்த்து நானிருக்கிறேன்
வலியுடனான அறிமுகத்தில்
உன்னை ஆரத் தழுவ

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (14-Nov-15, 9:05 am)
பார்வை : 127

மேலே