ஒரு அரும்பின் மடல் போட்டி கவிதை

-முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்.

கோடி கோடி உயிரணுவில்
உன் மடியைத் தேடி வந்தேன்
உள்ளிருந்த பத்து மாதம்
உன் முகம் காண வேண்டி

கண்மூடி தவம் இருந்தும்
ஏமாற்றிச் சென்று விட்டாய்
உன் ரத்தம் என்ற பின்னும்
உன் முகம் மறைத்து விட்டாய்

உன்னைப் புதைத்திடவோ
என்னைப் பொதிந்திருந்தாய்
உன் மேல் பூ பூத்திடவோ
என்னை விதைத்திருந்தாய்

பிறந்த பிள்ளை அழுதிருக்கும்
பின்பு அது சிரித்திருக்கும்
பிறவி முழுதும் அழுவதற்கா
பிள்ளை என்னைப் பெற்றிட்டாய்?

அம்மா என்றழைக்கும்
அந்த நாள் நினைத்து நீயும்
கனவுக் கோட்டை கட்டி வைத்து
பொழுதினையும் கழித்திருப்பாய்

நானும் வந்த வேளையிலே
தூங்கித்தான் போனாயோ
பாவி நானும் ஏன் பிறந்தேன்
அப்பாவி உன்னைக் கொன்றிடவோ?

இருட்டினில் இருக்கும் போதும்
பயமின்றி நானிருந்தேன்
வெளிச்சத்தில் வந்த பின்னும்
பயமாய் இருக்குதம்மா

கண்ணீரைத் துடைத்து விட
கைகள் இல்லையம்மா
நூலில்லா காற்றாடி
நானாகி விட்டேனம்மா

ஆதவன் மறைந்து விட்டு
அந்தி நிலவு வந்தாலும்
அடுத்த நாளே ஆதவனும்
உதித்திடுவான் கிழக்கினிலே

கிழக்குமில்லை மேற்குமில்லை
எத்திசையில் உதித்திடுவாய்
வரும் திசையில் காத்திருப்பேன்
உயிரை உன்னில் சேர்த்திருப்பேன்!

எழுதியவர் : Dr ரத்னமாலா புரூஸ் (15-Nov-15, 5:02 pm)
பார்வை : 159

மேலே