பெற்றிட்ட பேறு
![](https://eluthu.com/images/loading.gif)
பெற்றிட்ட பேறு..!
கூரைவீட்டு
மோட்டு வளையில்
கூடு கட்டி
முட்டையிட்டு
குஞ்சு பொரித்து...
முற்றமெங்கும்
சுற்றித் திரிந்து
கொட்டிவைத்த
தானிய மணிகளை
விட்டு விரைந்து...
எட்டிப் பறந்து
எங்கோ கிடக்கும்
எள் முனையொடித்து
உண்டு முடித்தப் பின்
வீடு வந்து கொஞ்சு
மொழியில் கூவிக்
கூடி களிப்பெய்திடும்
சிட்டுக் குருவியினம்...!
அரிசி முனையணைய
அழகிய அலகும்...
மணத்தக்காளி பழ
மனங்கவர்கண்களும்...
சுண்டைக் காய்யென
சுழலும் தலையுடன்...
பிளந்த மாம்பிஞ்சென
உயரிய உடலோடு
நொடியும் நில்லாதுலவி
அங்குமிங்குமாய்
அலைந்து திரியும்
அழகோ அழகு..!
குருவி -
குஞ்சை எடுத்து
பிஞ்சுக் கையிடை
வைத்து அதன்
நெஞ்சு துடிப்பதை
கண்டு நெகிழ்ந்தது
பிள்ளைப் பருவம்
பெற்றிட்ட பேறு..!
மதியந்தன்னில்
அறையில் தொங்கும்
கண்ணாடி காட்டும்
தன் பிம்பம் கண்டு
அலகால் மெல்ல
குலாவிய போது
கொத்திடும் சத்தம்
சந்தமாகச் சொன்ன
சங்கதிப் பலபல..!
குளியலாடிடும்
குருவிகள் கூட்டம்..!
அருவியிலாடிடும்
இசைகளின் தோட்டம்..!