மீண்டும் மீண்டும்போட்டிக் கவிதை
பாவாடை தாவணியை பார்த்து ரசிக்க வேண்டும்
பூவாடை பின்னலிலே பூச்சூட்டி பார்க்க வேண்டும்
பார்ப்பவர் நெஞ்சத்தில் பாசம் பொங்க வேண்டும்
சேர்ந்தவர் சொந்தமும் சேமம் பெற வேண்டும் .
அழகுதமிழில் அம்மா அப்பா அப்படியே வேண்டும்
வழக்கான மம்மிடாடி வழக்கொழிந்து போக வேண்டும்
பாவைக்கூத் துவேண்டும் பழம்புகழ் நாடகம் வேண்டும்
சாவைநோக் கிச்செல்லும் கரகமும் சிறக்க வேண்டும்
மீசை வச்ச பாரதி மீண்டுமிங்கே பிறக்க வேண்டும்
ஆசையெல்லாம் நிறைவேற அக்கினிப்போர் மூட்ட வேண்டும்
சீண்டும் கரை வேட்டியரை சீறியுதைக் கவேண்டும்
செண்டுமணம் போலே சுதந்திரம் எங்கும் வேண்டும்
குஞ்சலம் கட்டிய கூந்தல் வேண்டும் மீண்டும்
மஞ்சள் பூசிய மங்கல முகம்காண வேண்டும்
சஞ்சலம் தீர்த்திடும் சரிகமப் பதநி வேண்டும்
கொஞ்சுதமிழில் கொஞ்சி கொஞ்சிவர வேண்டும்
தமிழிங்கே வேண்டும் தலை தூக்க வேண்டும்
தமிழென்று ஏய்ப்போர் தலை சாய வேண்டும்
சங்கத் தமிழ் வேண்டும் சரித்திரம் வேண்டும்
பங்கமினி இல்லை யென்ற பவ்யநிலை வேண்டும்
மீண்டும் கிராமத்து முற்றம் போக வேண்டும்
தீண்டும் தென்றல் காற்றில் தூங்க வேண்டும்
ஆண்டுவோர் அரை ஏக்கர் கழனி வேண்டும்
வாண்டுகள் சகிதம் விவசாயம் செய்ய வேண்டும்.