மீண்டும் மீண்டும் -- கவிதை

உலக அதிசயங்களில்
முதன்மையானது தாஜ்மகால்

காதலின் நிறத்தை வெள்ளையாகவும்
வடிவத்தை கல்லறையாகவும் காட்டும்
அந்த வெள்ளைக் நுட்பம்
யமுனை ஆற்றங்கரையில்தான் நிற்கிறது
சாஜகானின் காதல் தெப்பம்
முகலாய தொழிற்நுட்பம்

உலகக் காதலர்களும்
தேனிலவு சோடிகளும்
ஊர்சுற்றிகளும் இளையோரும்
கட்டாயம் வருகிறார்கள்

காதலிகளின் மனைவிகளின்
கண்கள் விரிகின்றன பூவென

காதலர்களும் கணவர்களும்
விழிபிதுங்குகின்றனர்

ஆயினுமென்ன சிரிக்கின்றனர்
அணைக்கின்றனர்
ஒரு செல்பியும்
எடுத்துக் கொள்கின்றனர்

கைடுகள் வரலாற்றை
காதலை விற்பனைசரக்காய்
வாந்தியெடுக்கின்றனர்

கடைகள் மொய்க்கப்படுகின்றன
புகைப்படக்காரர்களோ
காமராவுக்குள் பிடித்த காதலை
விற்றுக் கொண்டிருக்கின்றனர்

காலம் காலமாய் கல்லறையாகவே
இருக்கும்
அந்த பளிங்கு மண்டபத்தின்

கருவறை கல்லறைகளை
விரல் துணியில்
ஈரம் தொட்டு துடைக்கிறார்
ஒரு முதியவர்

நீண்ட தாடியும்
சுருங்கிய தோலும்
வெளுத்த உடலும்

கல்லறையை தவிர்த்து பார்த்ததென்ன

படிந்திருக்கும் அழுக்கு
இடம் மாறிக் கொள்கிறது

உலக அதிசயம் தாஜ்மகாலின்
தூய்மை பாதுகாக்கப்படுகிறது

உலகமெங்குமிருந்து வருகிறார்கள்
காலர்கள் இளைஞர்கள்
கணவன் மனைவிகள்
ஊர்சுற்றிகள் ...
மீண்டும்.. மீண்டும்...

எழுதியவர் : இரா. அரிகரசுதன் (17-Nov-15, 2:28 pm)
சேர்த்தது : இரா அரிகரசுதன்
பார்வை : 69

மேலே