மகிழ்ச்சியின் முயற்சி

மகிழ்சியின் முயற்சி

வாசலில் தண்ணீர் தெளித்து
வாசம் எழுவதை முகர்ந்து
அள்ளிய கையினில் கோல
புள்ளிகள் பலவும் இட்டு
அழித்து மீண்டும் வைத்து
சுழித்துக் கோடுகள் சேர்த்து
அழகெனக் காணும் அந்தக்
காட்சியே மகிழ்ச்சியின் முயற்சி

சொல்லிடும் பாடம் தன்னை
சொல்லத் தவித்திடும் பிள்ளை
எளிதில் செய்திட மனனம்
நளின நடனமும் பாடியும்
ஆடியும் சொல்லிக் கொடுத்துப்
போதும் போதும் எனுமளவில்
பிள்ளை பிடித்ததைச் செய்ய
பிறந்திடும் மகிழ்ச்சியின் முயற்சி

ஆக்கப் பணியொன்று செய்ய
ஆர்வம் பலவாறு இருந்தும்
ஊக்கப் பணமும் அனுமதியும்
தேக்கிடும் அலுவலர்/கணவர்
மூக்கினில் விரலை வைக்கும்
போக்கினில் முடிக்கும் போழ்தில்
முகிழ்த்திடும் மகிழ்ச்சியின் முயற்சி

சோற்றுக்கு வழியது செய்ய
சோதிடம் பொய்க்க உழுது
சேற்றினில் காலை ஊன்றி
நாற்றினை நடவு செய்து
வேர்வை வருத்தம் பாரா
உழைப்பின் பயனை அறுக்க
விளைந்திடும் மகிழ்ச்சியின் முயற்சி

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (17-Nov-15, 2:41 pm)
பார்வை : 102

மேலே