மகிழ்ச்சியின் முயற்சி
குருவி பறந்த பின்
கிளை ஆடுகிறது....
சொந்தம் கொண்டாட
தென்றல் ஓடுகிறது..
கிளையின் பூவுக்கோ
ஊஞ்சலாடும் மகிழ்ச்சி!
ஆலகால விருட்சம்
வெட்டப்படுகிறது
ஒட்டு மொத்த உயிர்களுக்கும்
சேர்த்த ஒப்பாரியாய்
ஓவென்ற இரைச்சலுடன்
சாய்ந்து விழுகிறது மரம்..
ஆலமரத்தில் அடைக்கலமிருந்த
ஆந்தை சொன்னதாம்
ஆலமரத்துக்கு என்னை விட
குறைவான ஆயுசு என்று
கொட்டும் மழையில்
குயில் நனையுமென்று
கவிஞன் வருந்தினான்
மழை முடிந்த மறுநாளில்
ஜூரம் மாத்திரை வாங்க
குயில் இல்லை
இவனே நின்றான் மருந்து கடையில்
பாறையில் விழுந்த விதை
என்பது உங்கள் விரக்தியின்
வாக்கியம்
காங்கிரிட்டில் முளைத்த மரம்
தான் முயற்சியின் வடிவம்