வின் ஞானம் - விஞ்ஞானம்

விஞ்ஞானம்
உடலை அலங்கரிக்கிறது
உயிரை மறந்து விடுகிறது...

அன்று ஆதாம் கடித்தது ஆப்பிள்
இன்று கடிப்பது அணுகுண்டு
ஆக மொத்தத்தில்
இரண்டுமே விலக்கப் பட்டதுதான்...

சோதனை குழாயில் கூட
குழந்தை பிறக்க வைத்து விட்டது - ஆனால்
குடிநீர் குழாயில்
தண்ணீரைக் கூட
தர முடியாமல் தடுமாறுகிறது...

விஞ்ஞானத்தால்
வாழ்கையே சுலபமாகி விட்டது
இல்லை
நாம்தான் சோம்பேறிகளாகி விட்டோம்...

விஞ்ஞான வளர்ச்சி
என்ன என்றோம்?
"எனது கோட்டை
ஓசோன் ஓட்டை"' என்றது

இதயமே இல்லாதவர்களாக
இருக்கிறோம் என்றோம்
''மாற்று இதய
மருத்துவம் உண்டு'' என்றது

இல்லறம் மட்டும்
இருட்டில் என்றோம்
''வெளிச்சம் தந்தேன்
வெளியே காட்டு'' என்றது

தெருக் கூத்து இன்று
வெறுத்தது என்றோம்
''திரைப் படம் இருக்கு
திரையை விலக்கு'' என்றது

ஒருவனுக்கு ஒருத்திதான்
உறவு என்றோம்
''உறவில் கூட
உலக மயமாக்கல்'' என்றது

அழகிப் போட்டிக்கு
அடக்கமாய் சென்றோம்
''முற்றும் துறந்தால்
முதல் பரிசு'' என்றது

இருப்பதை விட்டு
பறக்கலாம் என்றோம்
''மனிதனோடு சேர்ந்து
மானமும் பறக்கட்டும் '' என்றது

எளிதாய் வெல்ல
என்ன வழி என்றோம்
''துப்பாக்கி தூக்கு
சாம்பலாக்கு'' என்றது

மரண வாக்குமூலம்
தொல்லை என்றோம்
''கழுத்தில் சயனைடு
கவலையை விடு'' என்றது

விஞ்ஞான உலகம்
வேண்டும் என்றோம்
''அனுபவி ஆனால்
அற்ப ஆயுள்தான்'' என்றது

********************* ஜின்னா *********************

பின் குறிப்பு:
இந்த கவிதையை
போட்டிக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம்

பிற தோழர்/தோழமைகள் யாருக்காவது கொடுத்தால் மகிழ்வேன்..

எழுதியவர் : ஜின்னா (17-Nov-15, 11:50 pm)
பார்வை : 1090

மேலே