சமகாலத்தவர்

பொன்னாடை பூச்செண்டுடன்
பணி ஓய்வும் கிட்டியபின் –
முகநூலில் வலையிட்டு
பால்ய நண்பர்களைத் தேடினேன் !
மலரும் நினைவுகளை
கவிதைகளாய் பதிந்தேன் !
ஊராட்சி பள்ளிதொட்டு
கந்தசாமி வாத்தியாரின்
பிரம்படியை நினைவு கூர்ந்தேன்!
இலந்தவடை ஜவ்வுமிட்டாய்
குச்சி ஐஸ் நெல்லிக்காயென
எச்சில் ஊறிய கதை படித்தேன்!
ஓணான் வேட்டை
கொம்பேறி கொழலேறி
மாஞ்சா பட்டம் என
சாகசங்களை விவரித்தேன் !
ஊமத்தம் இலையுடன்
கரி தேய்த்த சிலேட்டில்
கருப்புசாமி வாத்தியாரிட்ட
கணக்குத் தேர்வு மதிப்பெண்ணை
அழியாமல் காத்து வீடுவரை
சேர்த்த பெருமிதம் சொன்னேன் !
ரேஷன் கடை மண்ணெண்ணெய்
ஐநூத்தொண்ணு சோப்பு
சலூன்கடை தினத்தந்தி
இந்தி எதிர்ப்பு போராட்டமென
அந்தநாள் வாழ்வியல் பட்டியலிட்டேன் !
வாசித்தபின்
பெருவிரல் காட்டும்
லைக் போட்டு நகர்ந்தனர்..
பல்நாட்டு நிறுவனங்களில்
பணிபுரியும் பேரன் பேத்திகளின்
செல்பி புகைப்படத்தை பதிவேற்றம் செய்த
என் பால்யகால நண்பர்கள் !