நெடுதூர பயணம்
மனைவிக்காக வாங்கிய மல்லிகையின் வாசம் குறைந்து கொண்டே வருகிறது
பூக்காரன் ஏமாற்றி விட்டான் போலும்
நிமிடத்துக்கு ஒருமுறை கேட்கும் அவளது அழைப்பொலியும் இப்போது இல்லை
ஒருவேளை உறங்கியிருப்பாள்
இன்று சென்னையில் என்ன கடை அடைப்பா?
சாலையில் யாருமே இல்லை
இரு செவிகளையும் அடைக்கும் அடர் பனி
மார்கழி மாதம் கூட இல்லையே
கவசம் இல்லை என்றாலும் கைக்குட்டையாவது கொண்டு வந்திருக்கலாம்
பழைய வண்டியாக இருந்தாலும் பரவாயில்லை
நல்ல வேகம், சக்கரம் உரசியதால் வந்த சத்தம் கூட இப்போது இல்லை
இவ்வளவு தூரம் பயணித்தும் வீட்டிற்கு வந்தபாடில்லையே
பாதை மாறி வந்துவிட்டேனா?
வீட்டிற்கு சென்றவுடன் முதலில் தலை துவட்ட வேண்டும்
நனைந்து விட்டது
பத்து நிமிடத்திற்கு முன்பு என்னை வேடிக்கை பார்த்தவர்கள் யார்?
திடீரென ஒரே கும்மிருட்டு ஒன்றும் விளங்கவில்லை
ஆனாலும் மிதக்கிறேன்
ஒரு நொடி பொறுங்கள்......, ஆம் இபோது புரிந்துவிட்டது
அய்யோ!!! நான் இறந்து கொண்டிருக்கிறேன்
யாருக்கேனும் நான் பேசுவது கேட்கிறதா?
கேட்டால், அழைப்பொலியை ஏற்க முடியாமைக்கு நான் வருந்தியதாக
என் மனைவியிடம் மட்டும் சொல்லி விடுங்கள்
இந்நேரம் பதறியிருப்பாள்.
கடைசியாக ஒரு காட்சி மட்டும் நினைவிருக்கிறது
நான் விழுந்த இடத்திற்கு எதிரில் இருந்த அரசாங்க வாசகம் அது
"தலைக் கவசம் உயிர் கவசம்"