வண்ணநிழல் காவியம்

அடீ
படபடவென்று
மூடித் திறக்காதே
உன் புறாவிழிகளை

சிந்தி விடப்போகிறது ..
இமைச்சிறகில்
சிக்கியிருக்கும்
என் இதயம்
*
உன் உதட்டின்
ஊமை அழகில்
மௌனங்கள்
இசைக்கும்

உன் சிரிப்பின்
சிலிர்ப்புகளில்
ஸ்வரங்கள்
மௌனிக்கும்

உன்
நளினங்களில்
நாணங்கள்
திகைக்கும்

உன்
நாணங்களில்
என் மனம் கிடந்து
தவிக்கும்

*
உனது
அலைவரிசையில் தானே
என் ஜீவன்
பாடும்


எனது
நாள் மலர்கள்
உன் நினைவுகளில்
விழிக்கும்

எனது
வைகறைகள்
உன் கண்ணால்
விடியும்

என் உணர்வின்
பூமரங்கள்
உன் நடைவிரிப்பில்
பூச்சொரியும்

என் மனதின்
கற்பனைகள்
உன்னைச் சுற்றியே
வட்டமிடும்
*
உனக்கான என்
அந்தப்புரம்
மாயைகளால்
வேயப்பட்ட
நிஜம்...!

'நிஜம்' ஆகிய
உன்னை தொடர்வதோ
நானல்ல
என் உயிரின்
வண்ண நிழல் i

*
தேவ தேவி ...!
உனக்கென்று
பொன்னூஞ்சல்
என் தோள்களில்
உனக்கான
பூங்காவியம்
என் தாள்களில் ..! (1992)

("காதலின் பொன்வீதியில்" நூலிலிருந்து)

எழுதியவர் : கவித்தாசபாபதி (22-Nov-15, 2:29 pm)
பார்வை : 66

மேலே