யாரோடு யாரோ - கோபி சேகுவேரா

எல்லா தொடக்கத்திற்கும் ஓர் முடிவு உள்ளதென்பது உலகறிந்தது... சாதி, மத வேறுபாட்டிற்கு எப்போது முடிவு வரும் என்று கேட்டால்... யாரிடமும் பதிலில்லை என்பதே நிதர்சனமான உண்மை...
வித்யாவை விட்டு பிரிந்து, இரண்டு வருடங்கள் ஆன பிறகும்கூட... எதையும் மறக்கமுடியவில்லை... நானும் வித்யாவும் இந்த கோவை மாநகரில் அலைந்து திரியாத இடங்களேயில்லை... தினமும் சந்தித்து கதை பேசுவது... மணிக்கணக்கில் முகநூலில் அரட்டை அடிப்பது... புரியாத திரைப்படம் வந்தாலும் தவறாமல் பார்ப்பது... மாதம் ஒருமுறை பரிசளிப்பது... மாநகரத்து வீதிகளில் சளைக்காமல் வலம்வருவது... இப்படி எல்லா காதலர்கள் போலத்தான் காதல்வாசிகளாய் சுற்றித்திரிந்தோம்...
அப்போது வித்யா... அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு படித்துவந்தாள்... நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன்.. இருவரது வீடும் குனியமுத்தூரில் தான் இருக்கிறது.... ஆனால் இருவரும் வேவ்வேறு வீதி.. எங்கள் காதல் மலர்ந்த காலம் நேரமெல்லாம் தெரியவில்லை... ஆனால் இரண்டு வருடங்களாக உயிருக்கு உயிராய் காதலித்தோம்... கவிதை வடித்தோம்... நீயில்லை என்றால் வாழவே தனிமை என்றோம்... என் ஊனும் உயிரும் நீதானே என்றோம்... உன்னை சிறையெடுக்க வானையே துண்டாய் உடைப்பேன் என்றோம்... இரண்டு குழந்தைகள் போதுமென்றோம்... உன்னைப்போல் ஒன்று என்னைப்போல் ஒன்று வேண்டும் என்றோம்... பெயர்கூட தேர்ந்தெடுத்து வைத்தோம்... அவர்களுக்கும் காதல் திருமணம் தான் என்றோம்... ஆனால் இப்படியெல்லாம் தந்துவிடவில்லை இந்த அநியாய காதல்... வலிகளை தவிர...
காதலிக்க தொடங்கிய ஆறு மாதங்களில்... இருவரது வீட்டிலும் காதல் விவகாரம் தெரியாமல் இருந்தால்... அவர்கள் இன்னும் நன்றாக காதலிக்கவில்லை என்று தான் அர்த்தம்... நாங்கள் காதலித்து இரண்டு வருடம் கழித்து தான் எங்கள் வீட்டிற்கு தெரிந்தது... ஒருவேளை அப்போதுதான் நன்றாக காதலித்தோமா... தெரியவில்லை...
வித்யாவின் அப்பாவிற்கு எப்படியோ எங்களை பற்றி தெரியவர... என் அப்பாவிடம் எல்லாத்தையும் சொன்னதாக அம்மா சொன்னாள்... என்ன செய்தென்றே தெரியவில்லை.. ஒரே பதற்றமாக இருந்தது.. சரி எது நடந்தாலும் பரவாயில்லை அவளது அப்பாவிடம் வித்யாவை திருமணம் செய்வதாக கேட்போம் என்று முடிவெடுத்தேன்...
'நாங்கள் மேல் சாதி... நீ என்ன சாதி... உனக்கு என்னோட பொண்ண தரமுடியாது... அப்படியே குடுத்தாலும்.. என் சாதி சனம் என் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.. நீ நல்லாயிருப்ப... தயவு செய்து என் பொண்ண விட்டுட்டு போய்டு...' என்றார் அவளது அப்பா...
காதலிப்பது என்னவோ மென்மையான விடயம் தான்... ஆனால் சாதி, மத அழுக்குகள் நிறைந்த இந்தியாவில் காதலிப்பது தான் கொடுமை.. இதில் கண்ணுக்கு தெரியாத வன்மம் இருக்கிறது.... நமது நாட்டில் தான் பெண் உருவில்... குடும்ப கௌரவம்... குடும்ப மானம்.. சுயசாதி அந்தஸ்த்து இருப்பதாக இன்னும் நம்புகிறார்கள்... இது எவ்வளோ பெரிய மூடநம்பிக்கை... பெத்த பிள்ளைகளின் சந்தோஷத்தை விட... தான் சாதி கௌரவம் தான் முக்கியமென நினைக்கும்போது... மனிதம் மரணித்துப்போகிறது... 50வருட வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க கூடாதா என்ன??... இதிலொரு ஆதிக்க வெறி இருக்கிறது.... இந்த நாசமாபோன சாதி தான் வித்யாவை என்னிடமிருந்து பிரித்தது...
என்னால் அவளிடம் பேசகூட முடியவில்லை... அவளை வீட்டில் பூட்டி வைத்தார்கள்... எங்கள் காதலை பிரிக்க எல்லா முயற்சிகளையும் கையாண்டார்கள்.. இறுதியாக வித்யாவிற்கு அவசர அவசரமாக திருமண செய்தார்கள்... என் காதலியின் கழுத்தில் வேறொருவன் தாலி கட்டினான்.. கரம் பற்றினான்.. என் உயிரை அவனது மகிழுந்தில் ஏற்றி.. எங்களது கனவை உடைத்தெறிந்தான்...
மகிழுந்து புறப்படும்போது... வித்யா பார்த்த பார்வையில் கோடி காதலர்களின் ஏக்கம் இருந்தது... நான் கடைசியாக வித்யாவை பார்த்தது அப்போதுதான்.....
இரண்டு வருடம் கடந்து விட்டது... இன்னும் வித்யா என்னை நினைத்துக்கொண்டு இருப்பாளா?? என ஏங்கிக்கிடந்தேன்... அலைபேசி அடித்தது... எடுத்து பேசினேன்... 'திருமணத்திற்கு தான் நீங்க வரல.. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்காவது வாங்க' என்றாள் சாரா...
நானும் வித்யாவும் காதலித்த காலங்களில்... சாரா தான் வித்யாவின் உயிர் தோழி... எனக்கு அப்படி தான் பழக்கம்.. எங்களது காதல் பிரிவிற்கு சாரா மிகவும் வருந்தினாள்.. என்னை பார்க்கும்போது ஆறுதல் சொல்லுவாள்... இன்று காலை தான் சாராவிற்கு திருமண நடந்து முடிந்தது... எப்படியும் வித்யா அவளது உயிர் தோழியின் திருமணத்திற்கு வருவாள்.. எப்படி அவளை பார்ப்பது என்று தான் திருமணத்திற்கு நான் செல்லவில்லை..
காதலிச்ச பொண்ணு வேறு ஒருதரை திருமணம் செய்வது கூட பெரிய விடயமில்லை.. அவளை அவளது கணவனோடு எங்கயாவது பார்ப்பது இருக்கே.... அது ரண வேதனை... எனக்கு இதுவரை அப்படி நடக்கவில்லை.. இன்று நடக்கப்போகிறது.. மாலை சாராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லும் போது....
வரவேற்பு நிகழ்ச்சிக்கு கிளம்பிவிட்டேன்.. என் வித்யாவை பார்க்க... வழியெங்கும் கண்கள் வித்யாவை தேடின... ஏதோ ஓர் தயக்கம் கலந்த பயத்துடன் தவித்தபடி... எல்லா பக்கமும் பார்வை வீசி வித்யாவை தேடினேன்... பார்த்துவிட்டேன்... மேடையருகே நின்று கொண்டு பதற்றத்துடன் என்னை தேடிக்கொண்டிருந்தாள்.. ஒரு கணத்தில் இருவரின் கண்களும் சந்தித்தன... சட்டென்று பல கோடி மின்னல்கள் கண்களை பறித்ததை போலிருந்தது... அப்படியே பார்த்துக்கொண்டே நின்றோம்... அவள் கண்ணில் நீர் வழிய... என்னுயிர் ஒழுகுவதை போலிருந்தது...
வித்யா என்னருகில் வந்தாள்... சில வினாடிகள் கழித்து 'வினோத், நல்லா இருக்கீங்களா?' என்றாள்...
'ம்ம்ம்.. ஏதோ இருக்கேன்'
'உங்க மனைவி எங்க இருக்காங்க?'
'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல'
'எல்லாம் என் தப்புதான்'
'உங்க கணவர் எப்படி இருக்கார்... பையன் எப்படி இருக்கான்?'
'ம்ம்ம்... நல்லாயிருக்காங்க'
'பையன் பெயர் என்ன?'
வித்யாவால் பேச முடியாமல் குரல் தழுதழுத்தது... கண்கள் கலங்கின...
'அகமகிழன்' என்றாள்...
அப்படியே மனம் இறந்த காலத்திற்கு நழுவியது.... உடல் முழுவதும் ஏதோ தீயாய் பரவியது... உச்சி மண்டையில் ஏதோ அடித்ததை போலிருந்தது... நானும் அவளும் காதலிக்கும் போது 'என் பையனுக்கு இந்த பெயர் தான் வைக்கனும்' என்று வித்யாவிடம் நான் சொன்ன அதே பெயர்தான்...
அழுது புரண்டு கத்த வேண்டுமென தோன்றியது...
உடனே அவளது கணவர் 'நேரம் ஆகுது வித்யா... இன்னும் என்ன பேசிட்டு இருக்க' என்றார்... அவர் கையில் இருந்த அகமகிழன் என்னை பார்த்து புன்னகைத்தான்... வித்யாவிடம் தாவிக்கொண்டான்... 'சீக்கிரம் வா' என்று சொல்லிவிட்டு அவளது கணவர் சென்றுவிட்டார்...
எதுவுமே பேசாமல்... அகமகிழனுக்கு ஒரு முத்தமிட்டு.... சட்டென்று நடந்து சென்றாள்.... வாசலை கடந்தபோது.. என்னை திரும்பி பார்த்தாள்... கண்ணீர் மணிமணியாய் வழிந்தது.. முந்தானையில் துடைத்தவாறு சென்றாள்...
வித்யா போன பிறகு...
'நீயில்லை என்றால் வாழ்வே தனிமை' என்று என்றோ ஒரு நாள் நாங்கள் பேசிக்கொண்டது ஞாபகம் வந்தது... மனதில் அது மட்டும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தது...