உப்புமா

காலையில் சாப்பிடுவதற்கு
உப்புமா செய்யட்டுமாவென
ஆலைச் சங்கொலியாய்
அலறினாளென் மனைவி;
உப்பு சப்பு இல்லாத
உதவாக்கரை உணவதன்
பெயரைச் சொல்லிய அந்த
கணப் பொழுதில்

நெய்யோடு முந்திரியும்
தேங்காய் பற்களும்
கோங்கரா சட்டினியும்
சாம்பாரும் சேர்த்து
சிரித்த முகத்துடன்
சேர்ந்துண்ண அழைக்கும்
சித்தி லீலாவின்
சிவந்த வதனமும்

கண்டு பிடித்தவனைக் கண்டால்
மொத்து மொத்தென மொத்தனும்
என முக நூலில் முனைவர்
வினோத் கண்ணன் பதிவும்

விழுப்புரம் ரயில் நிலையத்தில்
டபராவைக் கரண்டியால்
தட்டி அழைக்கும் ஓசையில்
'கப்பு' 'கப்பு' என விழுங்கிடும்
சக பயணிகளின் காட்டேரிப்
பசியில் காலியாகி விடும்
கண்ணறாவிக் காட்சியும்
நிழலாடும் பொழுதினில்

என்ன பதிலையே காணோம்
என்று கேட்டு நின்றவளுக்கு
வேண்டாம் என்றால் “தப்புமா”
என இரட்டுற மொழிந்தேன்!
..


.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (24-Nov-15, 12:11 pm)
Tanglish : uppumaa
பார்வை : 431

மேலே