ஒரு கவிதை இறந்து கிடந்தது

என் படுக்கையில்
ஒரு கவிதை
இறந்து கிடந்தது...
இது கொலையா? தற்கொலையா?
ஏதும் அறியாமல்
விழி பிதுங்கி நின்றேன்...
கண்ணீர் வரவில்லை
மன அழுத்தம் மட்டும்
அகலமானது...
அதன் உறவினர்களுக்கு
நடந்ததை சொல்ல
ஏற்பாடுகள் செய்தேன்...
தற்கொலையாக இருந்தால்
என்ன காரணமாக இருக்குமென
மூளை கசக்கி யோசித்தேன்...
ஒருவேளை
கொலையாக இருந்தால்...
அந்த இரக்கமில்லாதவனை
நிச்சயம் தண்டிக்க வேண்டும்...
பிறகுதான் ஞாபகம் வந்தது
நேற்றிரவு பிழைகள் உள்ளதென
கிழித்தெறிந்த கவிதை இதுவென்று...