அன்பிற்கு விலையுண்டோ
"இப்படி ஒரு பகிர்தல் நமக்குள் நடக்குமென நான் நினைக்கவில்லை. மரத்துப் போன மனதை, மயிலிறகால் வருடினாற் போன்ற இந்த மென்மையான அன்பிற்கு, எதைக் கொண்டு நிறைப்பேன்?.
“நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று முதன்முதலில் மோகனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்த போது, மனதிற்குள் மழை அடித்தாலும், என் நிலை அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது. ஆனால், அவன் மேல் நான் கொண்டிருந்த அளவற்ற அன்பும், நேசமும் என் தயக்கத்தை நெட்டித் தள்ளியது.
அதன்பின், இருவருக்குமிடையே எத்தனையோ பகிர்தல்கள். குறுஞ்செய்தியாக, வார்த்தைகளாக, பரிசுகளாக, சின்னச்சின்னத் தொடுதலாக என்று எங்களின் அன்பின் பரிமாணம் விரிந்து ஒரு கட்டத்தில் முழுமையடைந்தது.
காதல் மயக்கத்தில் திளைத்திருந்த எனக்கு, மோகனுக்குத் திருமணப் பதிவு முடிந்த செய்தியை அறிந்த போது, தலையில் இடி இறங்கினாற் போன்ற உணர்வு.
அவனிடம் இதற்கு நியாயம் கேட்ட போது, “உன் நிலை என்ன? என் தகுதி என்ன? வேண்டுமானால் எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்?” என்று என் அன்பிற்கு அவன் விலை பேசிய போது துடித்துப் போனேன்.
அனாதை இல்லத்தில் என்னைத் தள்ளி விட்டு, பணமே பிரதானம் என்று ஆடம்பர வாழ்க்கையைத் தேடிப் போன அம்மா, காதலுக்கு விலை பேசிய மோகன் என்று எத்தனை நிராகரிப்புகள். எத்தனை அவமானங்கள். அத்தனைக்கும் காரணம் ‘பணம்’. அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும். என்னை நிராகரித்தவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். ஆனால், அந்தப் பணத்தை ஈட்டுவதற்கு என்ன செய்வது? என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
அந்தச் சமயத்தில், பணக்காரத் தம்பதியர் ஒருவருக்குக் குழந்தை இல்லாததால், குழந்தையைப் பெற்றுக் கொடுக்க வாடகைத்தாய் தேவைப்படுவதாகவும், அதற்கு ஈடாக மிகப் பெரிய தொகை அளிக்கப்படும் என்று என் தோழி கூறிய செய்தியைக் கேட்டதும், சற்றும் யோசிக்காமல் அதற்கு நான் தயார் என்ற போது அவள் அதிர்ந்து போனாள். அவள் எத்தனை அறிவுறுத்தியும் கேளாது, பிடிவாதமாக அதற்கு ஒப்புக் கொண்டேன்.
இதோ! என் வயிற்றில் வளரும் கருவிற்கு ஏழு மாதம் ஆகிறது. இன்னும் மூன்று மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொடுத்ததும், பணம் கைக்குக் கிடைத்து விடும். அதன் பின் அதைக் கொண்டு சொந்தத் தொழில் தொடங்கலாம் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, கடந்த பத்து நாட்களாக ஓர் இனம் புரியாத தவிப்பு.
என்னுடைய துயரங்களை, ஆற்றாமையை வார்த்தைகளாக எனக்கு நானே உதிர்க்கும் போது, அதற்குச் செவிசாய்ப்பது போல், என்னுள் அசையும் சிசுவின் மொழி, என்னை அசைத்துப் பார்க்கிறது. இந்தக் கள்ளமில்லா அன்பிற்கு எதைக் கொண்டு ஈடு செய்வேன்?
இப்படி ஒரு பகிர்தல் நமக்குள் நடக்குமென நான் நினைக்கவில்லை. அன்பிற்கு விலையுண்டோ?