ஏன் இந்த தீராக் கோபம்

-முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்

அன்னையென உன்னையே
அனுதினமும் நினைத்து நாங்கள்
உயிரச்சம் ஏதுமின்றி
உன்மடி தவழுகின்றோம்

உன்னையே கதியெனவே
உளமார நினைக்கின்றோம்
அமைதியான உன் மனத்தை
ஆர்ப்பரிக்கச் செய்தவர் யார்?

வாக்குக்காக நாக்கினையே
மாற்றிக் கொள்ளும் அரசியலோ?
காசுக்காக கடவுளையே
கூவி விற்கும் காவிகளோ?

பெற்றவரைத் தெருவில்விட்டு
பெருமை கொள்ளும் சந்ததியோ?
மதியிருந்தும் பெண்ணினத்தின்
மானத்தினை மிதிப்பவரோ?

உடலிருந்தும் ஓய்ந்திருக்கும்
உழைக்காத பேதைகளோ?
கண்ணிருந்தும் கலாச்சாரம்
காப்பாற்றா மேதைகளோ?

விலையில்லாக் கல்விக்கு
விலைவைக்கும் வித்தகரோ?
குருவிபோல் சேர்த்த பணம்
குறிவைக்கும் நிதிநிறுவனமோ?

உயிர்கொல்லும் திரைச்சீலையிலே
ஒளிந்திருக்கும் போலிமருத்துவரோ?
காலாவதி பொருளை விற்று
காவு வாங்கும் கயவர்களோ?

தாய்ப்பாலையும் கலப்படமாக்கும்
தரங்கெட்ட துரோகிகளோ?
லஞ்சமென்னும் பேயுடனே
தஞ்சமான வஞ்சகரோ?

இளைஞர்களை சீரழிக்கும்
இன்டர்நெட்டின் இலவசமோ?
பருவமெய்தா மழலையையும்
பாழ்படுத்தும் மிருகங்களோ?

பெற்றமகள் என்றபின்னும்
இச்சைகொள்ளும் ஆணினமோ?
கணவனையே கொல்லுகின்ற
கள்ளக்காதல் பெண்ணினமோ?

மதுவென்னும் விஷமருந்தி
மதியிழக்கும் மாந்தர்களோ?
உறவென்னும் முறையில் வந்து
உயிரெடுக்கும் வரதட்சணையோ?

கந்துவட்டி என்று சொல்லி
குடலுருவும் கொள்ளையரோ?
சேவையென்ற போர்வையிலே
தேவைகொள்ளும் மானிடரோ?

உயிர்காப்போம் என்றுரைத்து
உறுப்பு விற்கும் இல்லங்களோ?
மதத்தினையும் மலிவாக்கும்
மதவாதத் தலைவர்களோ?

கலையென்ற சொல்மறந்து
கொலைசெய்யும் திரைப்படமோ?
குற்றமற்றக் குழந்தைகளை
குண்டு வைக்கும் தீவிரவாதமோ?

நீ கொள்ளும் இக்கோபம்
நியாயமாக இருந்தபோதும்
பாவிகளைக் கொல்லாமல்
அப்பாவிகளைச் சிதைக்கிறாயே

தீயவரை நாடிச்சென்று
அவர்தம்மைக் கவர்ந்துவந்து
சீறும் உன் கோபத்தை
சினத்துடனே காட்டிவிடு

இதுபோல் ஓர் சீற்றம்
இனி வேண்டாம் எங்களிடம்
தாய்போலே என்றும் எம்மைக்
காத்திடுவாய் கடல்மாதா!

எழுதியவர் : ரத்னமாலா புரூஸ் (30-Nov-15, 12:24 pm)
பார்வை : 161

மேலே