யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே! யாவரும் கேளிர் என்பது நம் பாட்டனின் வாய்மொழி ...
வாய் மொழி மட்டும் அல்ல, நம் பின்பற்றிய ஒழுக்க நெறிகளிலும் ஒன்றாகவே கலந்து இருந்தது அவ்வார்த்தைகள்... வந்தோரை வாழ வைப்பது நம் மரியாதைக்கு உவந்த காரியமெனப் போற்றப்பட்டது... ...
இன்று நிலைமை என்னவோ வேறு தான் ...அதிகம் அடிக்கப்பட்டோம் ... அதிகம் புறக்கணிக்கப்பட்டோம்... அதிகம் ஏமாற்றப்பட்டோம் ... இனத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ , மொழியின் பெயராலோ இன்னும் ஒரு படி மேலே போய் கடவுளின் பெயரால் யார் அதிகம் விசுவாசம் கொண்டவர்கள் என்ற ரீதியில் ஒரே இன மக்கள் ஒருவரை ஒருவர் அடித்து விழுங்குவது வாடிக்கையாகிவிட்டது....
நாம் அனைவரும் அறிந்ததே, இனத்தின் பெயரால் மக்கள் கொல்லப்படுவது இந்த உலக வரலாற்றிற்கு ஒன்றும் புதிதல்ல ... நாஜிக்குள் தொலைந்த யூதர்கள் போல் , சிங்கள-இந்திய இராணுவத்திற்குள் அழிந்து போன தமிழர்கள் போல் லட்சம் மக்கள் வீண் வன்முறையால் அழிந்து கொண்டேதான் இருக்கிறார்கள் ..
மக்கள் இன்றைய சூழ்நிலையில் இருவாரியாகத்தான் பிரிக்கப்படுகிறார்கள் அகதிகள் அல்லாதோர் மற்றும் அகதிகள் ஆக்கப்பட்டோர் ... இப்படிதான் இவ்வுலகம் மனிதம் என்பதை மறந்து வீழ்ச்சி என்னும் வெற்றிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது..
ரோகிங்கா இஸ்லாமியர்கள்
முதலில் தமிழர்கள் அனுப்பபட்டார்கள் .. இன்று இஸ்லாமியர்கள் துரத்தப்படுகிறார்கள் .. அமைதியால் எதையும் வெல்ல முடியும் என்று வாழ்ந்து சவால்களை சமாளிக்கும் ஆங் சான் சூகியின் தாய் திருநாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான ரோகிங்கா (வங்கம்) , ரோஹிங்கியா (ஆங்கிலம்) இஸ்லாமியர்கள் வாழிடம் தேடி சிங்கப்பூருக்கும், மலேசியாவிற்கும், தாய்லாந்திற்கும் , இந்தோனேசியாவிற்கும் உயிரிடனோ இல்லை பிணமாகவோ தஞ்சம் புகுகிறார்கள் ... பேசும் மொழியும் வணங்கும் தெய்வமும் வாழ்வதற்கு தடையாக இருக்கும் என்பதை யார்தான் அறிவார்கள்...
1948 சுதந்திரத்திற்கு முன்பு வரை மியன்மாரில் இந்திய மக்களும் வங்க மக்களும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.. பின்னாட்களில் இந்தியர்கள் பலர் அங்கே செல்வாக்கு மிக்க தொழில்கள் செய்துவந்தார்கள் ... சுதந்திரத்திற்கு பின்னர் 1962-ன் ராணுவ ஆட்சியின் கீழ் இந்திய மக்களுக்கும், இந்திய மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டது என சட்டம் இயற்றப்படவும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் இழந்து இந்தியாவிற்கு திரும்பினார்கள் ..
மியன்மாரின் தென்கிழக்கு மாகாணமான ரக்கேன் மக்களில் பெரும்பாலானோர் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் ... இவர்களின் பூர்வீகம் வங்கம் என்பதால் அவர்களுக்கு இன்றைய நிலையில் மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது .. குடியுரிமை இல்லை, குடியுரிமை இல்லை என்றால் அங்கே அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் மறுக்கப்படுகின்றன .. அடிப்படை கல்வி குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை .. வேலை வாய்ப்பு என்ற நிலை கனவில் மட்டும் தான் ..
இந்நிலையில் மக்கள் கடல் வழியே நாட்டைவிட்டு தப்பிக்கக முயல்கிறார்கள் .முடிவில் ஏனைய மக்கள் இறக்கவும் நேரிடுகிறது .. இது போன்ற தப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் போது இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு பெண்களும், குழந்தைகளும் கடத்தப்படுவது சாதரணமாக நிகழ்கிறது ..மலேசிய மற்றும் இந்தோனேசிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட பிரேதங்கள் ரோஹிங்கிய மக்கள்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .. இப்பிரேதங்களுக்கு இடையில் ஒரே ஒரு மனிதரை உயிருடன் மீட்ட சம்பவமும் அரங்கேறியது ...
பர்மிய மக்கள் இவர்களை வெறுப்பதற்கு காரணம் "வங்க மக்கள் புத்தத்தை மதிப்பதில்லை" என்பதே .. பதினோரு லட்சம் மக்கள் வாழ வழியின்றி தங்களுக்கான எதிர்காலம் இன்றி சொந்த நாட்டில் முகாம்களிலும் , வெளி நாடுகளில் அகதிகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு ஆங் சான் சூ கி இது வரை இம்மக்களுக்காக குரலும் கொடுக்கவில்லை என்பது தான் அதிக வருத்தம் தருவதாக இருக்கிறது ...
சிரிய அகதிகள்
ஒரு உள் நாட்டுக்கலவரம் என்ன செய்துவிட முடியும் .. அதிகப்பட்சமாக ஒரு வருடம் நீடிக்கும் ..ஆனால் சிரியாவில் 4 ஆண்டுகள் முடிந்தும் நடந்து கொண்டே இருக்கிறது இந்த உள்நாட்டுப்போர் ... மக்களின் நன்மைக்காக என்ற பெயரில் நடத்தப்பட்டாலும் அது நன்மைக்கான போராட்டம் அல்ல .... அதிபரை எதிர்த்து தொடங்கப்பட்ட சிறிய கலவரம் ஏழு லட்சம் மக்களை போராட்டங்கள் இல்லாத பகுதிகளுக்கு இடம் பெயர வைத்தது .. மூன்று லட்சம் மக்களை கொன்று வீழ்த்தியது .. சிரிய மக்கள் உயிரைக் காத்துக்கொள்ள பக்கத்தில் இருக்கும் துருக்கி , லெபனான், எகிப்து ,ஈராக் மற்றும் ஜோர்டான் செல்கிறார்கள்... போர் , கூச்சல் , குழப்பம் என்ற வார்த்தையை கேட்க விரும்பாத மக்கள் இன்னும் தூரமாய் ஜெர்மனிக்கும் க்ரீன்லான்திற்கும் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள்..
அதிபர் பஷர் அல்- அஷாத் ஆட்சிய எதிர்த்து டரா என்ற இடத்தில் தொடங்கியது இந்த கலவரம் .. கலவரத்தை ஒடுக்க அதிபர் தலைமையிலான ராணுவம் மக்களை சிறைபடுத்தியது .. இதனை எதிர்த்து தொடங்கிய போராட்டங்களில் ஏனைய மக்கள் உயிரிழக்க நேரிட்டது ... இந்த போராட்டத்தை கையில் கொண்டு இன ரீதியிலான போராட்டங்கள் அரங்கேறின . அல் - அஷாத் பிறப்பால் ஒரு அலாவி குடும்பத்தை சார்ந்த ஷியா முஸ்லிம் .. சிரியாவில் வாழும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சன்னி முஸ்லிம்கள் .. .விகிதாசார அடிப்படையில் பெரும்பான்மை மக்கள் சன்னி மக்கள் ஆவார்கள் ...இந்த பாகுபாடு போராட்டத்தின் பெரும்பங்கை ஏற்றுக்கொள்கிறது .. இவர்களுடன், சிரியாவில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்த குர்த் மக்களும் ஆதரவு தர ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கின ,...
இந்த போராட்டம் போதாதா, எல்லோர் தலையிலும் நெருப்பு வைக்க... இனக் கலவரங்கள் மூண்டன .. ஜிஹாத் உள்ளே நுழைந்தது.. தனி இஸ்லாமிய நாட்டிற்கான போராட்டங்கள் தீவிரம் அடைந்தன .... சிரியாவின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் சிதிலமடைந்து வீணாகியது .. அறிவில் சிறந்து விளங்கும் சிரிய நாட்டின் அடையாளங்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்டார்கள் ... கடந்த மாதம் கண்ட "அய்லான் குர்தியின்" உடலில் இருந்து வெளியேறியது அவனின் உயிர் மட்டும் அல்ல, இந்த ஒட்டு மொத்த மக்களின் மனிதாபிமானமும் தான் ..
சிரியாவில் அரபிகள் , குர்திகள் (சன்னி) , துர்கோ மக்கள் , அலாவிகள், நுசைரிகள் , இமாமி ஷியாக்கள் , இஷ்மாயிலி ஷியாக்கள், கபர்தா மக்கள் , அர்மேனியன் கிறித்துவர்கள் என இனத்தால் வேறுபட்டு இருந்தாலும் நியமான தேவைகளுக்கு போராட்டங்கள் செய்யாமல் நானா நீயா என போட்டி போட்டுக் கொண்டு அழிந்து கொண்டே இருக்கிறார்கள் ... ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் தான் போர்.. ஆனால் அதில் எத்தனை பெண்கள் தொலைந்தார்கள், எத்தனை குழந்தைகள் இறந்தார்கள் என்பதெல்லாம் கணக்கில் இல்லாதவை ...
இலக்கில்லாத பயணம் எதை நோக்கி முடியும் ???? அமைதியில்லா வாழ்வு எதற்கான தீர்வு ??? உலகில் அமைதி நிலவ இன்னும் எத்தனை அய்லானை பலி தர வேண்டும் ??? துப்பாகிகளும் ஆயுதங்களும் மட்டும் போதுமா நாம் வாழ ??
கேள்விகள் மட்டும் உண்டு ... பதில்கள் இல்லை .... எந்த ஒரு நிகழ்வும் நம் குடும்பத்தில் இருப்பரையோ நம்மையோ பாதிக்காத வரை அந்த நிகழ்வின் ஆழம் புரிவதே இல்லை பலருக்கும் ...
(அக்டோபர் மாத கொலுசு மின்னிதழில் வெளியான என் கட்டுரை )