காற்று கதைக்கிறது
நான் பொய்களை
விரும்புவதெயில்லை..
தூரத்து விண்மீன்
கூட்டத்தில் நீ மிதக்கிறாய்
என்பது எனது நிஜமல்ல..
நிஜங்களைப் பற்றிய
தத்துவங்களில்
உனது
புருவங்கள் குறியீடு....
மார்புகளின் வரிகளில்
ஓவியக் காட்டின்
கோட்டோவியம்...
சலனங்கள் இல்லாத
குளத்தில் போல...
சரிந்து விழும் கூந்தல்
தூக்கும் அழகில்
பொய்யற்ற முகமூடிகள்
நிஜமாகின்றன...
சருகுகளின் ஓசைக்குள்
பொன்னிற பாதங்களின்
வெண்ணிற இரவுகள்
பதிந்து பதிந்து விடிகிறது...
நாகப் பூச்சுகளின்
நளினக் கோடுகளில்
நெளி நெளியாய்
காற்று கதைக்கிறது...
பின் கழுத்து
மச்சத்தில்,
ஆயிரத்தில் ஒருத்தியாய்
அடையாளம் சொல்கிறாய்...
நான் அர்த்தங்கள் மறந்த
அற்றைத் திங்களில்
உன் முயல்களுடன்
தனித்திருக்கிறேன்,
பொய்களற்ற
பொதிகை மலையாய்...
கவிஜி