​என்னுடைய வாழ்க்கைப் பயணம் - அனுபவச்சாரல்கள் 24 ​

​வாழ்க்கை என்பதே ஒரு நீண்ட நெடும் பயணம் . நமக்கு பருவங்கள் மாறுவது போன்றே , வயதும் உயர்வது போல , காலநிலைகளும் , சுற்றியுள்ள சூழ்நிலைகளும் , சுற்றங்கள் உற்றங்களின் நிலையும் , பருவக் காலங்களும் வெப்பம் , குளிர் , முன் பனிக்காலம் ​, பின்பனிக்காலம் , மழைக்காலம் , சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாறுவதும் கண்கூடாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது .

இதனிடையே நாம் வாழ்வில் சந்திக்கும் உறவுகள் , நண்பர்கள் , அறியாத நெஞ்சங்கள் , முகவரி தெரியா முகங்கள் , ஊர் கடந்து , தேசம் கடந்து , கண்டங்கள் கடந்து பெறுகின்ற தொடர்புகள் , நவீன காலத்தில் மிக அதிகமாகி கொண்டே போகிறது. ஆனாலும் அனைவரும் நம் நினைவில் உள்ளவர்களா ....நெஞ்சில் நிறைந்தவர்களா ....உள்ளத்தில் உறைந்தவர்களா .....மனதில் நிலைப்பவர்களா என வேறுபடுத்தி பகுத்தறிவுடன் பார்த்தால் மிகைபடுத்தாமல் , நம் அளவுகோலுக்கு உட்பட்ட உள்ளங்கள் ....இப்படி பல பல மனிதர்களின் தொடர்புகள் , நட்புகள் , உறவுகளில் மிக சிலரே நம்முடன் நிலைத்து இருப்பர் .

ஒவ்வொருவரும் ஒருவித மனநிலையுடன் , குணாதிசயங்களுடன் , மாறுபட்ட எண்ணங்களுடன் நம்முடன் பழகுவர் . ஆனால் நமக்கு ஒருவரைப் பற்றி அறிந்துக் கொள்ள சில காலம் எடுக்கும் . சில நேரங்களில் நடைபெறும் அனுபவங்களை கொண்டு தான் அறிய முடியும் . பலர் நமக்கு உதவியாக இருப்பர் .....சிலர் உபத்திரவங்களாக இருப்பர் . அது காலத்தின் கட்டாயம் . இது போன்ற இயற்கை நிகழ்வுகள் நடப்பது இயல்பே. நாம் அனைவரையும் ஒன்றே என்று கருதவும் முடியாது ...செயல்படவும் முடியாது. ஒருவரிடம் பழகி அவரை எடை போட்டு அறிவதற்குள் காலம் கடந்துவிடும். அதனால்தான் சில நேரங்களில் சிலருடன் மனகசப்புகள் தோன்றுகின்றன நம்மையும் அறியாமலே.

இத்தனை பீடிகை எதற்கு எனில் எனக்கும் அதுபோன்ற நிகழ்வுகள் , அனுபவங்கள் நடந்தேறின என்பதற்காக கூற வந்தேன் . அதுமட்டுமல்ல சிலர் தங்களின் காரியம் வெற்றி பெறுவதற்காகவே , முடித்து கொள்வதற்காகவே நம்முடன் பழகுவர் . நாம் அதனை அறியோம் . பின்பு வருந்துவோம். அனைவரின் வாழ்விலும் நடப்பவை தான் . நாம் அனைத்தையும் கடந்து நம் வழியில் நடைபோடுவது என்பது மிக அரிதான காரியமே. இந்த காலத்தில் நம்மீது அன்பு செலுத்துவோரைவிட , பொறாமை கொள்பவர்களும் , பொல்லாப்பு கூறுபவர்களும் , வீண்பழி சுமத்துவோரும்தான் நம்மை சுற்றி இருப்பர் . அடுத்த தலைமுறையிலாவது இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன் .

மனிதனை தற்போது பிரிப்பது அரசியல் சூழ்நிலை , சாதிமதம் , சமுதாய அந்தஸ்து , நெஞ்சில் உருவாகும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை , காழ்ப்புணர்ச்சி போன்றவைகளே . இதுபோன்ற அடிப்படை காரணிகளால் காதல் திருமணங்கள் சில தடை ஏற்படுவதும் , சில கொலை , தற்கொலைகளில் முடிவதும் காரணம் ஆகும் . முதலில் சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் . சமதர்மம் நிலைக்க வேண்டும் . அடுத்தவரும் நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்ற வேண்டும் . ஒற்றுமை ஓங்கிட வேண்டும் . கற்றவர் பெருக வேண்டும். குற்றங்கள் குறைய வேண்டும் . குறைகள் தீர்க்கப்பட வேண்டும் . அப்பொழுதான் சமூகமும் மேம்படும் என்பது எனது கருத்து .

பருவநிலை மாற்றம் வருவதுபோல மக்கள் மனதிலும் மாற்றம் நிகழ வேண்டும் . இதை நான் எழுதி கொண்டிருக்கும்போது உண்மையிலேயே இயற்கை தன்னுடைய பருவநிலையை மாற்றி பேரிடராக தமிழகத்தை தாக்கியது. மிக பெரிய அளவில் மழை கொட்டி தீர்த்தது . பல இடங்களில் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். ஆனாலும் ஒரு ஆறுதல் ....பலர் மனம் கனிந்து , சாதி சமய அரசியல் வேறுபாடுகளை களைந்து எறிந்துவிட்டு , தாமாகவே உதவிட முன்வந்துள்ளது ஒரு மாற்றத்திற்கான அடித்தளம் மனதில் வேரூன்ற ஆரம்பித்து உள்ளதை காட்டுகிறது .

அனைத்து மக்களும் தம் அல்லல்களில் இருந்து விடுபட்டு விரைவில் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நெஞ்சார விரும்புகிறேன் .

மீண்டும் சந்திக்கிறேன் .....

பழனி குமார்
௦3 .12 .2015

எழுதியவர் : பழனி குமார் (4-Dec-15, 8:40 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 257

மேலே