நோகாமல் வந்ததிந்த நோய் --- ஒருபா பஃது
நோய்க்குச் சவாலாகி நோயினால் பாதித்து
வாய்க்கு ளுணவையும் வந்துநா னூட்டிடவும்
பாய்க்குள் முடங்கியும் பார்த்திட்டே னோர்நாளில்
தீய்க்குள் மனமெங்கும் தீ . (1)
தீபமாய் எண்ணியும் தீபங்க ளேற்றிட்டேன் ;
சாபமாய் வந்ததுவோ சாகடிக்க வந்ததுவோ
நோகாமல் புற்றுநோயும் நோகடிக்க வந்ததுவோ
வேகமாய்ப் பற்றியது வே. ( 2 )
வேண்டுகின்ற தெய்வங்கள் வேண்டுவனச் செய்திடுமா ?
ஆண்டவனால் கூட அழிக்க முடியாதா ?
யாண்டுமுனை வேண்டுகின்றேன் யாரிடந்தான் சொல்லிடுவேன் ?
மாண்புடையத் தாய்மையே மாண்பு . (3 )
மாண்பின் மகளாக மண்ணில் பிறந்துவிட்டேன்
காண்பீ ரெனதுள்ளக் கண்ணீர் கடலினையும்
தாய்க்குக் குழந்தையெனத் தாலாட்டும் நாள்மாறி
சேய்க்கு மகளானாள் சேர்ந்து . ( 4 )
சேவைசெய்ய நானிருக்கச் செத்துப் பிழைக்கின்றாள்
பாவையிவள் என்செய்வாள் பாவியாய்ப் புற்றுநோயும்
தேவையின்றிச் சூழ தெரியாது நான்மறைக்க
சாவைவிட்டு நீங்கிடுவாய்ச் சான்று . ( 5 )
சான்றாகக் காட்டுகின்றேன் சாகா வரம்பெறுவாள்
ஆன்றோர்கள் சொன்னமொழி அத்தனையும் நோக்கிடினில்
ஈன்றிட்ட அன்னைக்கு ஈடில்லா வாழ்வுவரும் .
ஊன்றாக நிற்பேன் உவந்து . ( 6 )
உவந்தே உயிராக உன்றனைக் காப்பேன்
கவர்ந்து விடாமலும் கள்வன் கடவுள்
திருக்கால் தொழுதுத் தினந்தினம் வேண்ட
கருவாய்ச் சுமந்தவள் கண் . ( 7 )
கண்ணிலும் வைத்துநான் காத்திடுவேன் தாயுனைப்
புண்களும் வந்திடாது பூஜிப்பேன் நானுனை
விண்ணிலும் நீயொரு விந்தை ; எனக்காக
மண்ணிலே வந்தாய்யம் மா . ( 8 )
மாரியென அன்பினை மக்களுக்குத் தந்திட்டாய்
ஊரினிலு முள்ளத்தி லுன்னதமாய் நின்றிட்டாய் .
பாரினிலே நீதந்தப் பாசமெல்லா மென்னிடம்
சாரியாக வந்திடும் சான்று . ( 9 )
சாட்சியினால் நீயென்னைச் சான்றாகக் காட்டிநிற்பாய் .
காட்சியினை நெஞ்சத்தில் கற்பனையா யோடுதம்மா .
சாகாத வாழ்விற்கு சத்தியமாய் வேண்டுகின்றேன் .
நோகாமல் வந்ததிந்த நோய் . ( 10 )