தாயே நீதெய்வம் ---- இன்னிசை வெண்பாக்கள் ---- ஒரு பா பஃது
தாலாட்டுப் பாடுகின்ற தாய்மையைப் போற்றுகின்றேன்
பாலூட்டு முன்றன் பரவச அன்பினால்
காலாற வந்துக் கடவுளை வேண்டுகின்றேன்
கோலோச்சு மென்றன் குடி . ( 1 )
குடிபுகுந்தாய் என்னில்லம் குன்றாது நிற்க
விடிவெனக்கு நீதந்தாய் விந்தைதான் நாளும்
முடிந்தவரைக் காத்திடவும் முற்றிலுமாய்த் தந்துப்
படியெனவும் வந்திட்டாய்ப் பார் . ( 2 )
பார்மிசை வாழ்த்துகின்றேன் பார்த்தெனைப் புன்னகையால்
வார்த்தைகள் சொல்லுகின்றாய் வர்ணிக்க வார்த்தையில்லை
சேர்த்தெனை முத்தமிட்டாய் சேர்த்துவைத்த சொத்தாக
சீர்பெற வேண்டும்நீ சீர் . (3 )
சீர்பெற்று நானும் சிறந்திட என்னருகில்
பார்போற்ற என்னையும் பார்த்தவர்கள் கண்படவும்
ஊர்விட்டு வந்தெனை ஊரறியச் செய்திட்டாய்
யார்செய்தல் கூடிடுமோ யார் ? ( 4 )
யார்வந்து நின்றிடினும் யார்வந்து சொல்லிடினும்
கார்மேகம் போன்றென்னைக் காசினியில் மாற்றிட்டாய் .
மார்தட்டிச் சொல்லிடுவேன் மாதாவே நீதெய்வம்
சீர்பெற்று நின்றிடும் சீர் . ( 5 )
சீலத்தில் நல்லது சீர்த்தமிகு தாயன்பு
ஞாலத்தில் நன்னெறிகள் ஞானத்தா லோங்கிடவும்
காலத்தில் செய்திடுவாய் காரியங்கள் ; நன்மைகளால்
பாலத்தை நல்கும் பறந்து . ( 6 )
பறந்தோடிக் காத்தவள் பாசத்தைத் தந்தாள்
இறக்கின்ற காலம் இறைமையும் வந்து
பிறக்கின்ற போதே பிறழாது சொன்னான்
மறக்காது மக்களின் மாண்பு . ( 7 )
மாண்புள்ள சான்றோர்கள் மண்ணுலகில் தாயன்பைக்
காண்கின்ற பாதையைக் கண்ணெதிரே காட்டிவிட்டார்
வேண்டுகின்ற சொத்துகள் வேகமாய்ப் பற்றிடவே
ஆண்டவனும் நல்கிய அன்பு . ( 8 )
அன்புடை நெஞ்ச மரிதெனப் போற்றுகின்ற
உன்னத உள்ள முலகினை ஆண்டிடும்
நன்னெறி ஊட்டும் நலமதைக் காட்டிடும்
முன்னுரை காட்டும் முகர்ந்து . ( 9 )
முகர்ந்தே னழகு முகத்தில் மலர்ச்சி
அகமும் மலர அருகி லணைத்து
மகளெ னவிளித்து மண்ணின் நினைவாய்த்
தகப்பன் பெயர்சொல்லித் தா. ( 10 )