மீண்டு ம் வந்தோம்
எங்களின் நீ(ள்)ர் பரப்பைத்
தேடி வந்தோம்.._
வேறென்ன செய்தோம்....?
தடைகளை எங்கள் வழியில்
உருவாக்கியது யார்???
நீந்துவன காய்ப்பன , பூப்பன
மணம் வீசுவன , ...
எனும் எத்தனை வகைமை
உங்களுக்கு அளித்திட
ஆதாரமாய் இருந்தோம்..!!
எங்களைச் சேதாரம் செய்தது யார் ??
உங்கள் வசதிக்கேற்ப எங்கள்
அழகு வடிவத்தை
குளமென்றும் நதியென்றும்
குட்டையென்றும் ஏரியென்றும்
ஆறு என்றும் கிணறு என்றும்
ஓடையென்றும்.....
சுருக்கி சிதைத்தது நீங்கள்தானே..?
எங்களின் நெஞ்சாழத்தைச சிதைத்து
கான்கிரீட் கவசமும்
அப்பார்ட்மெண்ட் ஆடையும்
' ஐ டி பார்க்' அங்கவஸ்திரமும்
வணிகவளாக போர்வையும்
மாமாடி ' மால்' மாலையும்
.....அணிவித்து எங்களின்
இயற்கை அழகை ஏன் மறைத்தீர்கள் ?
எங்களின் ஆன்மாவை
ஏன் அழித்து ஆனந்தம்
அடைந்தீர்கள் ??
ஆடி , அசைந்து வளர்ந்த
எங்கள் தொட்டில் காண வந்தோம்..
தவழ்ந்து ,நடந்து , எழுந்து
உருவான எங்கள் ஆடுகள
ஸ்பரிசம் நுகர வந்தோம்...
வேறென்ன செய்தோம்..???
வந்த வழியில்
தடைகள் தந்தன வலிகள்....
நொந்த நொடிகளில்
தடை உடைத்து வந்த
எங்களை
பெரு மழை ஊழி வெள்ளம்
என்றெல்லாம்
பொங்கி கூவுகின்றீர்...!!!
நாமாக இருந்த நாட்களில்
எங்கள் மடிகளில்
எப்படி எல்லாம் இருந்தீர்கள்...
_ கோவணம் கட்டிய , கட்டா
குறும்புக்கூட்டம் குதித்தாடி....
யவ்வன குமரிகள் வெட்க நீராடி...
நீத்தார் நினைவுகளை மூழ்கடித்து..
பூவாடையை ஆடி18 ல் போர்த்தி...
இப்படி எல்லாம் இருந்த நம்மை
நாமே இழந்துப் போக செய்தவை
இறந்துப் போகட்டும்..
இனியாவது நாம்
அன்று போல் ஒன்றாய் இருப்போம்.
....எங்களின் நீ(ள்)ர் பரப்பைத்
தேடி வந்தோம்.._
வேறென்ன செய்தோம்....?
தடைகளை எங்கள் வழியில்
உருவாக்கியது யார்???