அவளும் முகமதியப் பெண்தான்

..........................................................................................................................................................................................

இந்து வீட்டில்...
வாடகைக்குக் குடியிருக்கும்
முகமதியன் நான்..

பெண்ணிருக்கும் வீடு..!

ஆளே கிடைக்கலியா? என்றும்
நெருப்புக்குப் பக்கத்தில் பஞ்சென்றும்
இழுத்துட்டு ஓடினா பரவாயில்ல; கெடுத்துட்டுப் போனா...
என்பது போன்ற நாராசங்களும்...
தந்தை முதற்கொண்டு நிந்தை செய்ய...

காலத்தே சுளையாய்க் கிடைக்கும் பணத்துக்காக
எடுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல்...

அன்னை நம்பினாள் என்னை..
ஆற்றுப் படுத்தினாள் பெண்ணை..

முகமதியப் பெண்தான் அவளும்...
வீட்டுக்காரரின் மகள்..
மதியொத்த முகம் கொண்டவள் முகமதியப் பெண்தானே..!

இவள் சேட்டைகளின் சொரூபம்..
பூவில் செய்த சூறாவளி..!

“ நீ எங்களைப் போல் வெஜிடபிளா, நான்-வெஜிடபிளா..? ”
அப்பாவியாக அன்னை கேட்க..
மரக்கறிக்கு மாறினேன்...

“அண்ணனைச் சாப்பிடக் கூப்பிடம்மா...”
அன்னையின் குரல்..!
“அவன் நோன்பாம்மா... ...”
ஏறி இறங்கும் இவள் குரல்..!
அடிப்பாவி.. இப்போது என்ன நோன்பு..?
வெட்கம் மறந்து பந்திக்கு முந்தும்போது..
கக்கென்று ஒலிக்கும் சிரிப்பு..!

அடுத்தடுத்து கிள்ளி விட்டேன் ஒரு தரம்..
அன்னை கேட்டாள்...
“ கன்னத்தையே ஏன் கிள்ற? ”
கைகால் வெலவெலத்தது..
“ ஒரு தரம் கன்னத்தில் கிள்ளு, மறு தரம் தலையில் குட்டு..
அடுத்து முதுகில் அடி.. எத்தனை இல்லை..? ”

கையெடுத்து வணங்கினேன்..!


தொழுகையில் அமரும்போதுதான்
இளவீணை வீணை மீட்டும்..

“ ஈடில்லாத போதகர் எம் நபிகள் நாயகர்..
உருவமற்ற இறைவனுக்கு உண்....
கோபால கிருஷ்ணா.. கோபியர் கொஞ்சும் ரமணா... ”
தந்தை வரவறிந்து தத்தையின் பாடல் மதம் மாறும்..!

“ வாஷிங் மெஷின்தான் துவைக்கப் போகுது..
துணியிருந்தால் போடு... ...”
தயங்கி நிமிர்வதற்குள்...
அடாவடியாய் அறை நுழைந்து
அத்தனையும் துவைக்கப் போடுவாள்..
எதையணிந்து வெளியில் செல்ல?

தோழியிடம் புர்க்கா வாங்கி வந்து
எனக்கு மாட்டுவாள்..
மருதோன்றி இடுவாள்..
புடலையைப் பாம்பாக்கி பயமுறுத்துவாள்...
உறக்கத்தில் மீசை மேல் ஆனி ஃபிரெஞ்ச்..
கவனிக்காவிட்டால் தலையோடு பெண்களின் கிளிப்..
தன்நகம் தீர்ந்ததும் என் நகம் கடிப்பாள்- யோசிக்கிறாளாம்..!
நோயுற்றால் தாயினும் சாலப் பொழிவாள்..!

திரண்டிருந்த பூங்கொத்துக்கு
திருமணப் பேச்சு துவங்கியது..
வதந்திகள் வளர்ந்ததால்
வெளியேற விரும்பினேன்...

“ உன் நிழலையும் தீண்ட நினைத்ததில்லை ... போகிறேன்..”

அவள் கடிந்தாள்..
“ அட, கிறுக்கு குடாக்கு..
அவர் கையோடு சேர்த்து வைக்க
நீயில்லாமல் எப்படி?
தப்பாய்ப் பேசினால் தலையிலடி..!
தாயின் சாப்பாட்டில் சாரமில்லையோ? ...”

தங்கை சொல் மந்திரம்...!
நின்றேன்.. சீனத்துச் சுவரென..!
அவள் பிரசவத்துக்கு ரத்தம் கொடுத்தேன்..
இன்று
என் மனைவியின் மடியில்
அவள் குழந்தை..!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (9-Dec-15, 1:13 pm)
பார்வை : 143

மேலே