மலடியின் கருவறை

திங்கள் பத்து சுமக்காத நான்
தினமும் மனதில் சுமக்கின்றேன்..
எனை வாழவைத்து சாகடித்தனோ இறைவன்
இன்னும் உனை பார்க்கவில்லை..

இருளடைந்து போயிடுமோ
என்னோடு வளர்ந்த கருவறை..
பூ ஒன்று பூக்காதவரையில்
புண்ணியமற்ற அது பிணவறை..

தொட்டில் தேவை இல்லையென்று
என் நெஞ்சாங்கூட்டில் தூங்கவைப்பேன்..
காற்றும் உன் தூக்கம் கெடுக்குமென்று
என் மூச்சு கொடுத்து வளர்த்திடுவேன்..

நடந்தால் பாதம் நோகுமென
தங்கமே உன்னை தூக்கிடுவேன்..
ஆசை நெஞ்சோடு நானிருக்கேன்
அல்லிமலரே நீ எங்கிருக்க..

மாசற்ற கணவனவன் வெறுத்து
ஒருவார்த்தை பேசவில்லை..
பெருமை அவனுக்கு சேர்க்காமல்
பேருக்கு நான் பொண்டாட்டி..

ஏதேதோ கதை கூறி
ஊர் வாயை மூடிவிட்டேன்..
உள்ளம் தினம் கேட்டழுதே
என்ன கூறி நான் சிரிப்பேன்..

புண்ணியமும் செய்துவிட்டேன் கோவில்
உண்டியையும் நிரப்பி விட்டேன்..
பாவம் ஏதும் நான் அறியேன்
பாவி மகளே உனை காணோம்..

இடமறிந்தால் வந்துடுவேன் மகனேநானும்
இயற்கைக்கு மாறாக உன்னைத்தேடி..
என்செய்வேன் நானோ இறைக்கு ஓர் கைப்பாவை..
அதனால்
மனதில் மட்டும் சுமக்கிறேன் உனக்கான கருவறை..

எழுதியவர் : தீபாகுமரேசன் (9-Dec-15, 6:03 pm)
பார்வை : 894

மேலே