இறைவனின் ஏக்கம்

மனிதா ! உன் வாழ்கையில் தான் எத்தனை சிக்கல்?
சிலர் பலரை படுத்தும் பாடு
அந்த சிலர் படும் பாடு! இறைவனாய் இருந்தும்
எனக்கு மிஞ்சுவது ஆதங்கமே !

வாழ்க்கைக்கு வேண்டிய அறிவு கொடுத்தும்
நீ மகிழ்ச்சியாக வாழ்கிறாயா ?
உன்னை பிரச்சனைகளில் சிக்க வைத்தது நானா?
அறிவினால் எதுவும் முடியுமே !

கடல் நீரை ஆவியாக்கி மழையைக் கொடுத்தும்
உனக்கு குடிநீர் எப்போதும் கிடைக்கின்றனவா?
பாதியளவு வீணாக போவதற்கு நானா காரணம்!
மழைநீர் சேகரித்து வைத்தால் குடிநீருக்கு உதவுமே!

நீ கேட்காமலே மழலைகளை படைக்கும் ஆற்றல் கொடுத்தும்
சிலர் வளர்ப்பதில் அக்கறை காட்டாது நானா காரணம்?
உன் வாரிசு உனது பரம்பரையின் பேர் சொல்லுமே!

அதிர்ஷ்டம் மூலம் சிலருக்கு அதிக பணம் கொடுத்தும்
ஏழைகளுக்கு கொடுக்க மனம் வராததற்கு நானா காரணம்?
தானம், தர்மம் செய்தால் உன் தலை காக்கப்படுமே !

பணக்காரர்களுக்கு பல வசதிகளைக் கொடுத்தும்
அவர்களின் நிம்மதி குறைவிற்கு நானா காரணம் ?
அன்பான குணம் நிம்மதியான வாழ்க்கைத் தருமே!

பல வகையில் உறவுகளை கொடுத்தும்
ஒட்டி உறவாடாதற்கு நானா காரணம் ?
உறவுகள் பலப்பட்டால் கவலைகள் இருக்குமா?

உணவிற்குத் பசுமை விளைநிலங்களை கொடுத்தும்
அதில் கட்டிடங்கள் எழுந்தது நானா காரணம் ?
நிலங்கள் பொன் முட்டையிடுபவை போன்றல்லவா?

காலம் தவறாது நதிகளில் நீர் அதிகம் கொடுத்தும்
அதை பங்கிட்டுக் கொடுக்காதது நானா காரணம்?
அகன்ற மனது இருந்தால் பல குறைகள் தீருமே!

வேண்டிய அளவு கல்வி வசதிகள் கொடுத்தும்
வியாபாரமாக மாற்றி அதை கெடுத்து வருவது நானா?
கல்வியில் ஏழை , பணக்கார பாகுபாடு கிடையாதே !

அரசியல் விழிப்புணர்வு பல வகையில் கொடுத்தும்
ஊழல், லஞ்சத்திற்கு துணை போனது நானா?
ஆட்சியில் சுத்தமிருந்தால் நல்வாழ்வு கிடைக்குமே!

சட்டம் ஒழுங்கு ஏற்படுத்திக் கொடுத்தும்
தவறாக பயன்படுத்தி ஏழைகளை வதைக்குவது நானா?
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் தானே!

நல்ல மக்கள் பலரை பூமிக்குக் கொடுத்தும்
நன்மைகள் பெறாமல் போனதற்கு நானா காரணம்?
நல்லோரைப் பின்பற்றினால் நன்மைகள் கிடைக்குமே!

உனக்கு மிக மிஞ்சிய கற்பனைத் திறன் கொடுத்தும்
சின்னத்திரையில் மூழ்கச் சொன்னது நானா?
தவறானவைகளைப் பார்ப்பது தவறான சிந்தனை வருமே!

இளைஞர்களுக்கு என் போல் ஆற்றல் திறமைகள் கொடுத்தும்
அவர்களை பயன்படுத்தாதது நானா காரணம் ?
இளம் கன்று வீரமுடன் இருக்குமே !

படிக்க நல்ல புத்தகங்கள் பல கொடுத்தும்
படித்தது படி நடக்காததற்கு நானா காரணம் ?
படித்ததின் அடையாளம் அதுபடி நடப்பது தானே!

உனக்கு ஆரோக்கியம் நன்கு கொடுத்தாலும்
கெட்ட பழக்கங்களால் கெடுத்துக் கொண்டது நானா காரணம்?
சுத்தம், சுகாதாரம் பேணிக்காப்பது நன்மை தருமே!

நானும் விவசாயியும் ஒன்று
நான் பலருக்கு படியளக்கிறேன்
அவரோ மக்களுக்குப் படியளக்கிறார்.

என்னிடம் ஒவ்வொன்றையும் கேட்டா நீ செய்கிறாய்?
வெற்றியடைந்தால் நீ அனுபவிப்பாய் !
அந்நேரம் நான் இருப்பதை உதவியதை மறப்பாய்?

தோல்வியடைந்தால் நீ புலம்புவாய் ?
என்னைத் தேடி வருவாய் ! வசை பாடுவாய் !
அந்நேரம் நீ பார்க்கும் இடமெங்கும் என்னை பார்ப்பாய் !

மனிதா! உன் சுயநலம் எனக்குத் தெரியாததா?
நீ மக்களை ஏமாற்றினால் என்னை ஏமாற்றுவது போல.
மக்களிடமிருந்தும் சட்டத்திலிருந்தும் தப்பலாம்.

தவறு செய்பவர் யாரும் தப்ப முடியாது?
நான் நினைத்த படி நீ ஆடும் பொம்மை
உன் ஆயுள் என் கையில் ! இதை மறவாதே !

இருப்பதைக் கொண்டு சுகமாய் வாழ் !
இல்லாதவர்களுக்கு இருப்பதை கொஞ்சம் கொடு.
உன்னை என்றும் மகிழ்ச்சி நிம்மதி நான் தருவேன்.

எழுதியவர் : கங்காதரன் அய்யா அவர்கள் (9-Dec-15, 2:54 pm)
Tanglish : iraivanin aekkam
பார்வை : 144

மேலே