பூக்காத விருட்சங்கள்

அடர் காட்டு வீடுகள்
படர்ந்த பாதங்கள்
நடந்து கொண்டிருந்தன...
ஓரமாய்
பென்னம் பெரிய நிழல்மரம்
பூத்துக் காய்த்து
பொலிவோடு நின்றது.

குட்டிக் குருவி
குந்தியிருந்து
தெவிட்டும் வரை
தேனை குடித்துக்கொண்டிருந்தது
வனப்பும் வாளிப்பும்
வார்த்துக் கிடந்த மரத்தில்
அமர்ந்து விட்டு
அள்ளித்தேனை
அருந்தி விட்டு
வாய்க்கு வந்த படி
வைது விட்டு
விலகிப் போகிறது
நிசப்த நொடிகளை
அந்த
குருவியின் சப்தம்
நிசப்தமாய் ஒலிக்கிறது

அருகிருந்த
காய்க்கா மரமோ
கண்ணீர் படிய
வடித்து நிற்கிறது பாலை
வருவோர் போவோர்
ஈனும் முன்னே
என்ன மலட்டு மரமோ
குசுகுசுத்துப் போவதையும்
கருத்தில் எடுக்காது
குறிகளை நிமிர்த்தி
குறி பார்த்து நிற்கிறது

-பிரியத்தமிழ் -

எழுதியவர் : -பிரியத்தமிழ்:உதயா (11-Dec-15, 5:15 pm)
பார்வை : 84

மேலே