காட்சிப் பிழைகள் -3-கவிஜி

மூன்று முறையல்ல முதல்முறை
மறுதலித்தாலே போதும் நான் மரணிக்க.

அற்புத விளக்காக காத்திருக்கிறது
நீ தொட வேண்டிய என் வீட்டு விளக்கு.

நீ கொன்று விட்டு போன பின்னும்
நான் இருக்கிறேன்..!இது உன் உயிர்.

"என்ன வேணாலும் நினைச்சுக்கோ...
உன்ன இப்போ பிடிக்கல"
என்று சொல்லி நீ போனபோதுதான்
நிலவில் காற்றில்லை என்பது
ஞாபகம் வந்தது சம்பந்தமேயில்லாமல்....

நீ அலுவலகம் சென்றபிறகு
வந்து விட்ட பின்மதிய மழையில்
கொடியில் காயும் உன் ஆடைகளோடு
நானும் நனைகிறேன்...

எத்தனை முறைதான் கொல்வாய்?
ஒரு முறையாவது கொள் ளேன்...

நான் அன்புக்கு கை நீட்டுகிறேன்
மசூதியில் ஆலயத்தில்
கோவிலில் அப்புறம் உன்னிடத்தில்....

இதோ தப்ப போகும் நினைவில்
கடைசியாக எழுதப்படுகிறது உன் மறதி....

அடித்து எழுதிய
அனைத்தையும் கவிதையாக்க
பிள்ளையார் சுழியாக உன் பெயர்
எழுதினால் போதும்....

இத்தனை தவங்கள்
செய்திருக்க வேண்டியதில்லை
ஒரு வரம்... ஒரே வரம்
கொடுத்திருக்கலாம்...
'செத்துப் போ' என்று...

அன்னப் பறவை, மாடப் புறா
வெண்ணிற இரவு, தாமரைக் குளம் -உடன்
உன் தனிமை துயர்.
இனி உன் கதைகளில்
உனக்கு பதில் நான்...

உன் சமையலறையில் மட்டும்
கவிதை டப்பாக்கள்...

சட்டையில் கூட பூத்து விடுகிறாய்
இன்று நெற்றிப்பொட்டாய்...

நீ எடுத்தெறிந்து பேசியதெல்லாம்
என் கவிதைத் தொகுப்பின்
முன்னுரைகள் -குறைந்தபட்சம்
பிற சேர்க்கைகள்...

உன் மறதி ஞாயிறில் உன் வீட்டு
ஆடு நான் -மெல்ல அறு...

நீ வராத என் இறுதி யாத்திரையில்
பிணத்தைக் காணவில்லை கலாட்டா!

மெல்ல மெல்ல எனை உருதுக்
கவிஞனாக்கிய நீ ஓர் அதிகாலையில்
தோன்றிய கசல்...

கடைசியாக நீ நின்று குதூகலித்த
மலையை
மேகம் தழுவிக் கொண்டது.......

மிச்சக் கனவுக்குள்
சாத்தானைக் கடவுளாக்கும்
மாயங்களை
என் நனவிலி செய்கிறதா...!
உன் முடிவிலி செய்கிறதா....?

கவிஜி கவிதைகள்
அவள் கவிதைகளாகி விடுகிறது
எப்படிப் படித்தாலும் புரியப்
போவதில்லை
என்ற புரிதலோடு....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (14-Dec-15, 7:49 am)
பார்வை : 879

மேலே