முதுமை
கடை வாயில் இருந்து
சதா ஓழுகும் நீர்தாரை!
வெடித்து, காய்ப்பேறிப்போன
திமில்கள்.
பாரத்தை பகிர்ந்து கொள்ள
முடியாத
ஒற்றை மாடு அது!
காகித கானத்திற்கு
தேய்ந்துபோன லாடங்கள்;
இப்போது மாற்றுவது வீண் செலவு
அணிந்திருக்கும் கழுத்து மணி கூட
வீண் ஆடம்பரம் தான்.
பாரம் இழுக்கும் போது
நடுவழியில் அடிக்கடி
படுத்துக் கொள்ள நேரிடுகிறது.
முன்போல்
இப்போதெல்லாம்
தேரிஏற முடிவதில்லை!
மேல் மூச்சு, கீழ் மூச்சு
வாங்குகிறது.
வழிஓரங்களில்
உறைந்து நிற்கும் நீர் துளி,
பிரி அறுந்து தொங்கும்
மூக்கணாம் கயிறு.
மாட்டை உசுப்ப
வால் சுருட்டப்பட்ட போது
துண்டாடப்பட்ட வால் நுனி,
மொய்த்து பின்தொடரும்
ஈக்களை துரத்தமுடியா
கையறு நிலை.
விலை உயர்வால்
கட்டுப்படியாகாத தீவனம்,
படுத்துக் கொண்டால்
எழுவதில் சிரமம்.
குட்டி ஆட்டோக்களின்
போட்டா போட்டி வேறு.
இப்படி,
காரணங்களை
அடுக்கிக் கொண்டே போகலாம்.....
மாடு இப்போது
இறுதியாக யாத்திரை போகிறது
பழநியை அடுத்துள்ள
பொள்ளாச்சிக்கு........
~கவுதமன்~