உறவுகள்

................................................................................................................................................................................................

சூரியனின் உறுத்தாத வெளிச்சம் சுற்றி வர பயிர் பண்ணிக் கொண்டிருந்தது. அன்று திங்கட்கிழமை. அரசு விடுமுறை என்பதால் அவ்வளவாக வாகன நடமாட்டம் இல்லாத சாலை. என் மகளை அபாகஸ் பயிற்சிக்கு விட்டு விட்டு அந்த டூ வீலர் சர்வீஸ் சென்டருக்கு வந்தேன். என் பைக் டயருக்கு பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தார் கடைக்காரர். கொஞ்ச நேரமாகும் சார் என்றார். நான் அங்கிருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து கொண்டேன். என் வீட்டுக்குப் பக்கத்திலேயே பஞ்சர் ஒட்டும் கடை இருக்கிறது. எனினும் இந்தக் கடையை தேடி வந்ததும் இப்படி பெஞ்ச்சில் அமர்ந்து கொண்டதும் ஒரு காரணமாகத்தான்.

கடையிலிருந்து பார்த்தால் பச்சை பெயிண்ட் அடித்த அந்த வீடு தெரிந்தது. என் தங்கையின் வீடு. மணமாகி கணவருடன் அங்குதான் வசிக்கிறாள். ஒரு மகன்; பெயர் தினேஷ். என் வீடு பக்கத்து ஏரியாவில் இருந்தாலும் சில வருடங்களாக எங்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை.

வார்த்தைகள்.. வார்த்தைகள்.. நாவினால் சுடும் வார்த்தைகள்..! தீப்பொறி கூட பொத்தல்தான் போடும். வார்த்தைப் பொறிகள் உண்டாக்கும் சேதம் மனதை எரித்து, உறவுகளையும் எரித்து விடுகிறது...

எனக்கு அதிஷ்டம் இல்லையென்று நினைக்கிறேன். வீடு பூட்டியிருந்தது. தங்கை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். மாப்பிள்ளை ஒரு கூரியர் கம்பெனியில் பணி புரிகிறார்.. அவர் வேலைக்குப் போய் விடுவார். தங்கை முக்கியமான பண்டிகை தினம் என்பதால் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிலிருப்பாள் என்று எண்ணி வந்தேன். இவளும் வேலைக்குப் போய் விட்டாள் போலும்...

கன்னத்தில் கை வைத்தபடி அந்த வீட்டையே கவனித்துக் கொண்டிருந்தேன்.. பச்சை பெயிண்ட் அடித்த வீடு வெள்ளை வெளேர் சுண்ணாம்பு தாங்கி சிறு வயதில் நாங்கள் ஓடி விளையாடிய திருச்சி வரகநேரி வீடாக கற்பனையில் விரிந்தது...

அப்போது அப்பாவுக்கு உறையூரில் வேலை. வார இறுதியில் வீட்டுக்கு வருவார். என் அக்காவுக்கும் எனக்கும் ஏழு வயது வித்தியாசம். எனக்குப் பிறகு என் தங்கை.

வேண்டி வேண்டி என்னைப் பெற்றெடுத்தனர் பெற்றோர். இரண்டு வருடம் கழித்து “விபத்தாகப்” பிறந்தவள் தங்கை.

அக்கா பவானி பிறக்கிற போதே பொறுப்போடு பிறந்தவள். அம்மாவின் லேட்டஸ்ட் வெர்ஷனாக இருந்ததோடு அப்பாவின் இடத்தையும் அவள்தான் நிரப்பினாள். பேங்க் போவது, மின் கட்டணம் கட்டுவது, மளிகைச் சாமான் வாங்குவது, மல்லுக்கு நிற்பது, எங்கள் ஸ்கூல் ஃபீஸ் கட்டி ப்ராக்ரஸ் கார்டில் அப்பாவின் கையெழுத்தை இடுவது வரை அக்காதான்..

அக்கா இப்படி “தான்தோன்றியாக” இருந்ததால் வீட்டை இரண்டு படுத்துகிற தலையாய கடமையை நானும் என் தங்கை சௌமியாவும் முன்னெடுத்துச் செய்தோம்..!

அதிகாலையில் அம்மாவுக்கு பக்திப்பாடல் கேட்க வேண்டும். அதற்காக இரவிலேயே உள்ளம் உருகுதைய்யாவை டேப் ரிகார்டரில் செட் பண்ணியிருப்பார். எங்கள் கைங்கரியத்தால் பட்டன் அமுக்கியதும் “ராக்கோழி கூவையிலே..என் ராசாத்தி நீயுமில்லே” என்று டேப் ரிகார்டர் அலறும். அப்போது திட்ட ஆரம்பிக்கும் அம்மா இரவு சாப்பாட்டுக்காக செய்து வைத்திருக்கும் சாம்பார் ரசத்தை கண் மண் தெரியாமல் நாங்கள் ஓடி வந்து கொட்டி, அதிலேயே சறுக்கி, பின்தலை சாதத்தை கவ்வுகிற வரை எங்களைத் திட்டுவதை தொடர்ந்து கொண்டே இருப்பார்....

சின்ன வயதில் நாங்கள் படுத்துகிற பாடு தாங்காமல் அம்மா இப்படித்தான் பாடுவார்.. “பிள்ளை பெற்ற ராசா ரெண்டு பேயை வளர்த்தார்.. சந்திரனென்றும் சௌமியாவென்றும் பெயரைச் சூட்டினார்.. ”

நான் தங்கையை சௌமியாவென்று அழைத்ததாக ஞாபகமில்லை. அவள் என்னை அண்ணா என்றோ, ரவிச்சந்திரன் என்றோ அழைத்ததில்லை. நான் அவளை எலிவால் என்று கூப்பிடுவேன். அவள் என்னை காட்டுக்கட்டை என்பாள்.

மைதானம் போதாமல் நானும் அவளும் நண்பர்களை சேர்த்துக் கொண்டு நாலு தெரு சுற்றுவோம்.

சனிக்கிழமை வந்து விட்டால் இளங்காளியம்மன் வாய்க்காலில் குளிப்போம்.. வாய்க்காலை ஒட்டி காட்டுக்குள் போய் அங்கு வேலை செய்பவர்களுக்கு கூடமாட உதவினால், கொடுக்காபுளி, வெள்ளரி, ஈச்சம்பழம், மூக்கு சளிப் பழம், கொய்யா, பிரப்பம்பழம், நாவல் பழம், வாதாம், வாழை, கடலை, பேரிக்காய், சோளக்கதிர், கரும்பு, திராட்சை, மாங்காய், இளநீர், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு என்று விதவிதமாகச் சாப்பிடக் கொடுப்பார்கள்.. உடம்பு முழுக்க சேறும் சகதியும் அப்பிக் கொண்டு, காட்டைக் கடந்து ரோட்டுக்கு வந்து அப்பாவுக்காக காத்திருப்போம். அப்பாவுடன் சைக்கிளில் மதியத்துக்கு மேல் வீட்டுக்குப் போவோம்..

அப்பாவும் அட்டைப்பெட்டி நிறைய துணிமணிகள், நகை, பொம்மை, தின்பண்டம் என்று வாரி வந்திருப்பார்..!

ஞாயிறு முழுக்க அப்பாவுடன்தான்..!

ஞாயிறு தீருவதற்குள் அப்படீ ஒரு வேதனை எழும்பும் பாருங்கள்..

கல்லூரி வயதில் எங்கள் திருவிளையாடல் வேறு ரூபமெடுத்தது. நான் பேட்டை ரௌடியாகவும், தங்கை சண்டி ராணியாகவும் அறியப்பட்டோம்..

ஒரு முறை இப்படித்தான்... அழகிய இளவெயில் நேரம்..!

வழக்கம் போல் அப்பா வீட்டிலில்லை. வழக்கம் போல அம்மாவும் அக்காவும் பிசியாக இருந்தனர். வழக்கம் போல் நானும் தங்கையும் கொய்யாக் காயை தின்று கொண்டே வெட்டிப் பேச்சில் லயித்திருந்தோம். போலிசார் திருடனை காலாகாலத்தில் பிடிப்பதில்லை என்றாள் தங்கை..

“ நீயாயிருந்தா வெட்டி முறிச்சுடுவே.. ஒரு பேனை கூடப் பிடிக்க மாட்ட..! ” என்றேன் நான்.

இறுதியில் என் தலையில் ஒரு பேனை விட்டு அதை ஒரு மணி நேரத்திற்குள் தங்கை பிடித்து விட்டால் அவள் வின்னர்; இல்லாவிட்டால் நான் வின்னர் என்று ஒரு பந்தயம் உருவானது.

தங்கை தோற்றது விஷயமில்லை..! இன்னும் சொல்லப் போனால் வேண்டுமென்றே தோற்றாளோ என்று இன்று வரை எனக்குச் சந்தேகம்தான்..!

இரவில் அரிப்பு.. பகலில் அரிப்பு.. அரிப்போ அரிப்பு..! என் இமேஜை அரித்தே போட்டது அந்த ஒற்றைப் பேன்..!

சில நாட்களில் ஈறும் வைத்து குஞ்சும் குளுவாளுமாய் நிறைய பேன்கள்..! “இந்தா பார். அந்த பேன் கர்ப்பமான பொம்பள பேன்னு எனக்கு எப்படி தெரியும்? அது என்ன பொம்பள டிரஸ் போட்டுட்டா இருந்தது? அதோட கர்ப்ப காலத்து ஸ்கேன் ரிப்போர்ட்டும் என் கைல இல்ல.... போய் முட்டிக்கோ.. ” என்றாள் தங்கை.

கடையில் ஏதோ ஒரு பேன் மருந்து வாங்கி வந்து போட்டேன். அலர்ஜியாகி முகம் வீங்கி விட்டது.
அம்மா தலையிலடித்துக் கொண்டு இறக்குப்பேன் போட்டு வாரி விட்டாள்..

இப்போது நினைக்கையிலும் சிரிப்பு வருகிறது..

பிற்பாடு அப்பா திருச்சிக்கே வந்து விட்டார். அக்காவுக்குத் திருமணம் நிச்சயமானது. “ அப்பா வந்த நேரம் என்னை எதுக்கு வேற வீட்டுக்கு துரத்த பார்க்கறீங்க? நான் அப்பாவோட இருந்தாகணும்.. ” என்று அக்கா கலாட்டா பண்ணியது நேற்றுப் போல் இருக்கிறது...

அப்பா அக்காவை இறுக அணைத்துக் கொண்டு எப்படியெல்லாம் சமாதானப்படுத்தினார்..!

பிறகு தன் குடும்பம், தன் புக்ககம் என்று ஒன்றிப் போனாள் அக்கா. தன் குடும்பத்தோடு ரியாத்துக்கு குடி பெயர்ந்தாள்....

காலம் ஓடியது...

எலிவாலுக்கும் திருமணமாகியது. எனக்கும்தான்.

இப்போது கூட தங்கையை எலிவால் என்று அழைத்தால் தடுப்பது யார்? யாருமில்லைதான்.. ஆனாலும் மனதில் அந்தளவு குதூகலம் வரமாட்டேன் என்கிறதே.. அண்ணன் தங்கை உறவு வாய் வார்த்தையையும் ஒரு வாய் காப்பியையும் தாண்டி மேலே போனால் குறிப்பாக அண்ணனின் வீட்டில் சில பல வேறுபட்ட சைஸ்களில் சுனாமிகள் உருவாகி விடுகின்றன. ஓரிரு முறை இந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு மனம் தன்னால் சுருங்கி விடுகிறது..! இதனாலேயே இயல்பாக எழும் பாசத்தைக் கூட இயல்பாக வெளிப்படுத்த முடிவதில்லை..!

சில வருடங்களுக்கு முன்னால் தங்கை ஒரு லட்ச ரூபாய் கேட்டாள். உடனே கொண்டு போய் கொடுத்தேன்..

சில மாதங்கள் கழிந்தன. என் மனைவியும் ஜாடை மாடையாக இது பற்றி என்னிடம் கேட்டாள்.. கொடுத்ததை அவள் திருப்பித் தரவில்லை. நானும் கண்டு கொள்ளவில்லை..

எனக்கும் பணமுடை ஏற்பட்டது. அங்குமிங்கும் அலைந்த பின் தங்கையிடம் நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டேன்.. தங்கை தருகிறேன் என்றும் சொல்லவில்லை; தர முடியவில்லை என்றும் தெரிவிக்கவில்லை..

எனக்குப் பொருளாதார நெருக்கடி முற்றி, விழி பிதுங்கியது..

அன்றைக்கு சேட்டுக் கடைக்காரன் ஒரு விபரம் சொன்னான், தங்கையின் கணவன் ஒன்றரை லட்சத்துக்கு நகை வாங்கிப் போனதாக..!

எனக்கு சுரீரென்று கோபம் வந்தது. அங்கிருந்தபடியே தங்கைக்கு ஃபோன் அடித்தேன்.. “ உனக்கு ஒரு அவசரம்கிற போது நா ஓடி வந்து பணம் கொடுத்தேன்.. இன்னைக்கு நான் தவிக்கிறேன்.. நீ கிணத்துல போட்ட கல்லாட்டம் இருக்கே..! இதுல நகை வாங்கி மினுக்க மட்டும் தெரியுது..! பாசம்தான் இல்ல, நன்றி கூடவா இல்ல..? ”

“ ஐயோ, உண்மையில எங்க கிட்ட காசு இல்ல..! உனக்கு எப்படியும் பணம் ஏற்பாடு பண்ணத்தான் நான் அல்லாடிட்டு இருக்கேன்..!

பொய் சொல்லாதே என்று தொடங்கி கன்னாபின்னாவென்று திட்டி விட்டு ஃபோனை வைத்து விட்டேன்.. ரௌடித் திட்டு..! எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்..?

கொஞ்ச நாள் கழித்துதான் விபரம் தெரிந்தது. மாப்பிள்ளை நகை வாங்கியது அவருக்காக இல்லை, அவருடைய மேலதிகாரி பணம் கொடுத்து ஏற்கெனவே செலக்ட் செய்து வைத்திருந்த நகைகளை வாங்கி வரச் சொல்லியிருந்ததைத்தான் செய்திருக்கிறார் என்று.

என் பேச்சு தங்கைக்கும் அவள் கணவனுக்கும் இடையே கூட தகறாரை ஏற்படுத்தி விட்டதாக பிற்பாடு அறிந்தேன்.

அதன் பிறகு எவ்வளவு ஃபோன் செய்தும் அவள் எடுக்கவில்லை. நான் ஒருமுறை அவள் வீட்டுக்குப் போனேன். அவள் சடாரென்று மூட்டை பூச்சி மருந்தைக் கையிலெடுத்து மூடியைத் திறந்தாள்..! இரண்டு மாதத்தில் ஒரு லட்சம் ரூபாயோடு என் வீட்டுக்கு வந்தவள், வாசலில் நின்றபடியே பணத்தை முகத்தில் விட்டெறிந்தாள்....

இது என் மனைவியை அவமானப்படுத்தியது.

இரண்டு வீடுகளும் ஏகப்பட்ட கசப்புகளை சுமந்து, உறவு முறிந்து, தனித்தனியாகி...

வருடங்கள் ஓடி விட்டன.

அந்தக் காலத்திலும் நாங்கள் நாயாக, பேயாக சண்டை போடுவோம்தான். அவள் குடையெடுத்து அடிக்க ஓடிவர, நான் இட்லி கொப்பரை மூடியை கேடயமாக்குவேன்.. அப்போதெல்லாம் அம்மாவோ அக்காவோ இழுத்து வைத்து சமாதானம் செய்வார்கள்....

இன்றைக்கு அம்மா இல்லை; அக்கா தொடர்புக்கு அப்பால்...

தவறு முழுக்க என் மேல்தான்..! பண நெருக்கடி..! நாக்கு தடித்து விட்டது..

தங்கையும் என்னைப் போலவே மருகுகிறாளோ..?

அவள் தனியாக அகப்பட்டால் சமாதானப்படுத்தி விடலாம் என்றுதான் வந்தேன்.. ஊஹூம்..

தங்கை வீட்டுக் கதவு குலுங்கியதைப் போலிருந்தது.. பூட்டிய வீடாச்சே, ஏன் ஆடுகிறது?

நான் அவசரமாக நெருங்கிச் சென்று சாவித் துவாரத்தில் கண் வைத்தேன். தங்கை அந்தப் பக்கம் தெரிந்தாள்- ஈரக் கூந்தலும் தோளில் சில துணிமணிகளும்..! அடடா..!

“சௌமியா... நான் அண்ணன் வந்திருக்கேம்மா.. என்ன ஆச்சு? ” என்றேன்.

“ நல்ல நேரத்துல வந்தே.. நான் இன்னைக்கு லீவு போட்டு பாத்ரூமில் குளிச்சிட்டிருந்தேன். பையன் தினேஷ் காலை ஆறு மணிக்கே ஸ்கூல்ல டூர் கூட்டிட்டு போறாங்கன்னு கிளம்பிட்டான்.. அவர் வழக்கம் போல மறதியா வீட்டைப் பூட்டிட்டு போயிட்டார்.. இப்படி ஜன்னல் பக்கம் வாயேன்.. நான் சாவியை தூக்கிப் போடுறேன்.. கொஞ்சம் கதவைத் திற.. ”

திறந்தேன்.

அவள் அதற்கு மேல் பேசவில்லை.. ஆழ்ந்த மௌனமும் சங்கடமும்...

நான் எங்கோ பார்த்தபடி மெதுவாகப் பேசினேன்..

“ ச..ச.. சௌமியா, மெடிக்கர் வச்சிருக்கியா? என் மகள் ஒரு பேனை என் தலையில விட்டுட்டா... ” சும்மாவேனும் தலையைச் சொறிந்தபடி கேட்டேன்..

அவள் என்ன செய்கிறாள்?

திரும்பிப் பார்த்தபோது அவள் விசும்புவது தெரிந்தது. “சௌமியா.. சௌமியா ” சட்டென்று பதறி அவள் கையைப் பிடித்தேன்..

அடுத்த ஐந்தாவது நிமிடம் நான் சேரில் உட்கார்ந்திருக்க, அவள் என் மடியில் தலை வைத்து அழுது கொண்டிருந்தாள்.. கூடவே சிரிக்கவும் செய்தாள்..! “ போடா, காட்டுக்கட்டை.., காட்டுக்கட்டை..., காட்டுக்கட்டை... ” நறுக்கென்று என் உள்ளங்கை ஓரத்தைக் கடித்தாள்..!

கடியும், திட்டும்.... சுகமோ சுகம்..! ! ! !

..........................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (16-Dec-15, 12:27 pm)
Tanglish : uravukal
பார்வை : 374

மேலே