ஏழு கருவிகள்

“A Swiss Army Knife For Your Discussions” என்று ஒரு புத்தகம் படித்தேன். பல்வேறு சிறு கருவிகளை உள்ளடக்கிய Swiss Army Knifeபோல, நமது விவாதங்களின்போது பயன்படுத்தக்கூடிய ஏழுவிதமான கருவிகளை இந்தச் சிறு நூல் விவரிக்கிறது.

முதலில், அந்த ஏழு கருவிகளின் பட்டியல்:

உடன்படுதல்
மறுத்தல்
உடன்பட்டு, பின் மறுத்தல்
நிரூபித்தல்
இரண்டில் ஒன்று
குற்றம் சொல்லுதல்
தன் கருத்தில் உறுதியாக நிற்றல்

Swiss Army Knifeல் கத்தியும் இருக்கும், திருப்புளியும் இருக்கும், இன்னும் பலவிதமான சிறு கருவிகள் இருக்கும், நாம் அப்போது செய்யவிருக்கும் வேலைக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறோம், தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளையும் சேர்த்துப் பயன்படுத்தி வேலையை முடிக்கிறோம். பின்னர் அந்தக் கருவிகளைப் பழையபடி மடித்துவைத்துவிடுகிறோம்.

அதுபோல, ஒரு விவாதத்தின்போது இந்த ஏழு கருவிகளில் ஏதேனும் ஒன்றைதான் நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, கைக்கு அடக்கமாக வைத்துக்கொள்ளலாம், விவாத சூழ்நிலையைப் பொருத்து, அதற்கு இந்தக் கருவிகளில் எது சரியாகப் பயன்படும் என்று யோசித்துத் தேர்ந்தெடுக்கலாம், பயன்படுத்தலாம், மறுபடி மடித்துவைத்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

இதற்கு ஓர் எளிய உதாரணமாக, ‘இன்னிக்கு சினிமாவுக்குப் போலாமா?’ என்று ஒரு நண்பர் கேட்கிறார். அதற்கு இந்த ஏழு கருவிகளையும் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

முதலில், உடன்படுகிறோம், ‘எனக்கும் போரடிக்குது, வா, டிக்கெட் புக் பண்ணலாம்.’

இது ஓர் உத்தி, சில சமயங்களில் பயன்படும், வேறு சில சமயங்களில் பயன்படாது, இரண்டாவது உத்தி(மறுத்தல்)யைக் கையில் எடுக்கவேண்டியிருக்கும், ‘தலை வலிக்குதுய்யா, நான் வரலை!’

ஒரு விஷயம், இங்கே ‘மறுப்பு’ என்பது நீங்கள் எடுத்துவிட்ட தீர்மானம் அல்ல, அவர் சொன்னதை மறுக்கிறீர்கள், ஆனால் மீண்டும் அதனை மறுத்து அவர் தன் கருத்தை நிறுவ வாய்ப்பு இருக்கிறது, மனத்தைத் திறந்துவைத்திருக்கிறீர்கள்.

‘சினிமாவுக்குப் போலாமா?’

‘வேணாம்ய்யா, தலை வலிக்குது!’ (மறுத்தல்)

‘அட, வாய்யா, வழியில ஒரு காஃபி சாப்பிட்டா எல்லாம் சரியாப் போய்டும்!’

‘ஓகே, வர்றேன்!’ (உடன்படல்)

மூன்றாவது உத்தி இதற்கு முற்றிலும் எதிரானது, முதலில் உடன்படுதல், அப்புறம் மறுத்தல். ஆங்கிலத்தில் இதனை ‘Agreed, But’ என்று செல்லமாகச் சொல்வார்கள்.

‘சினிமாவுக்குப் போலாமா?’

‘போலாம், ஆனா என்னை டிக்கெட் எடுக்கச் சொன்னா வரமாட்டேன்.’

இதுதான் மூன்றாவது உத்தி, உடன்படுதல், பின் மறுத்தல், இதன்மூலம் இருதரப்பு வாதங்களையும் கிளறச் செய்வதற்கான ஆரோக்கியமான சூழல் அமைகிறது.

நான்காவது உத்தி, ‘நிரூபித்தல்’, நாமே ஒரு வாதத்தை முன்வைத்து, அதுதான் சரி என்று ஆதாரபூர்வமாக நிறுவுதல்.

‘சினிமாவுக்குப் போலாமா?’

‘வேணாம்ய்யா, அடிக்கடி சினிமா பார்த்தா மனசு கெட்டுப்போகும்ன்னு குசலாம்பாள் பல்கலைக்கழகத்துல செஞ்ச ஆராய்ச்சி சொல்லுது, இதோ அந்த ரிப்போர்ட்டை நீயே பாரு!’

இது வெறும் மறுப்பு அல்ல, மாற்றுக் கருத்தை நிரூபித்தல். இதன்மூலம் விவாதத்தை நம்முடைய கருத்தின் திசையில் நிறைவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துகிறோம், எதிர்க் கருத்துக்கான வாசலை மூடப்பார்க்கிறோம். (ஆனால் பல நேரங்களில் அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தே தீரும் என்பது வேறு கதை!)

ஐந்தாவது உத்தி, இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து அந்த இரண்டில் எது சரி என்று நாம் நினைக்கிறோம் என்பதைச் சொல்லுதல், அதாவது, ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்துகொள்ளுதல்.

‘சினிமாவுக்குப் போலாம்ய்யா.’

‘வேணாம்ய்யா, ஷாப்பிங் போலாம்.’

’எனக்கு சினிமாவுக்குப் போறதுதான் சரின்னு தோணுது.’

இதைச் சொல்வதன்மூலம் அந்த விவாதத்தில் நம்முடைய வாக்கு எந்தக் கட்சிக்கு என்று சொல்லிவிடுகிறோம், மெஜாரிட்டி வாக்குகளைப் பெற்ற கட்சிதான் ஜெயிக்கும் என்பதற்கான சூழலை ஏற்படுத்துகிறோம்.

ஆறாவது உத்தி, அடுத்தவர்களுடைய வாதத்தைக் குற்றம் சொல்வது.

‘சினிமாவுக்குப் போலாம்ய்யா.’

‘நீ இப்படிதான் எப்பப்பார் சினிமாவுக்குக் கூட்டிகிட்டுப் போய் என் பர்ஸுக்கு வேட்டு வெச்சுடுவே.’

இதுவும் மறுப்புதான், ஆனால் குறை சொல்லும் மறுப்பு, இங்கே எதிர்க் கருத்தை முன்வைப்பது முக்கியம் அல்ல. எதிராளி குறைபட்டவன் என்று நிரூபித்துவிட்டால் போதும்!

நிறைவாக, ஏழாவது உத்தி, தன் கருத்தில் உறுதியாக நிற்றல், அதை வெளிப்படையாகச் சொல்லி, அதன்மூலம் விவாதத்தை முடித்துவைத்தல்.

‘நீங்க சொன்னதையெல்லாம் யோசிச்சுப் பார்த்தேன், எனக்கு வீட்ல படுத்துட்டுக் காமிக்ஸ் படிக்கறதுதான் சரின்னு படுது.’

இதற்கும் மற்ற உத்திகளுக்கும் முக்கியமான வித்தியாசம், இனி விவாதம் இல்லை, நிரூபிக்கவேண்டியதில்லை, எதிராளி சொல்வது தவறு என்று குற்றம் சாட்டவேண்டியதில்லை, ’இதுதான் என் தீர்மானம், அதை மாற்றிக்கொள்ளமாட்டேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறோம்.

எந்த ஒரு விவாதத்திலும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த ஏழு கருவிகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தினால் தெளிவும் கிடைக்கும், நம் பக்கம் வெற்றியும் கிடைக்கும் என்று “A Swiss Army Knife For Your Discussions” வாதிடுகிறது.

அது சரி, இந்தப் புத்தகம் யார் எழுதியது? எங்கே கிடைக்கும்? என்ன விலை? ;)

சும்மா டூப் விட்டேன், அப்படி ஒரு புத்தகமே இல்லை ;) ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் ‘Love & Love Only’ என்று ஒரு டுபாக்கூர் புத்தகத்தை வைத்துக் கதை நகரும், அதுபோல நானும் குன்ஸாக ஒரு தலைப்பைக் கற்பனை செய்து இந்தக் கட்டுரையை எழுதினேன்.

அப்போ அந்த ஏழு கருவிகள்? அதுவும் கற்பனையா?

ம்ஹூம், இல்லை. நிஜமாகவே இந்த ஏழு கருவிகளைப்பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது, மேற்கத்திய மேலாண்மைப் புத்தகங்களில் அல்ல, பல நூறு வருடங்களுக்குமுன் எழுதப்பட்ட ‘நன்னூல்’ என்கிற தமிழ் இலக்கணப் புத்தகத்தில்!

அந்த சூத்திரம்:

எழுவகை மதமே, உடன்படல், மறுத்தல்,

பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவே,

தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே,

இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே,

பிறர்நூல் குற்றம் காட்டல், ஏனைப்

பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே!

என்ன? ‘ஏழு வகை மதம்’ என்றெல்லாம் வருகிறதே என்று யோசிக்கிறீர்களா? இங்கே ‘மதம்’ என்றால் இந்து, முஸ்லிம் அல்ல, ‘கொள்கை’ என்று அர்த்தம், நூலில் வரும் கருத்துகளை எப்படி முன்வைப்பது என்பதற்கு ஏழுவிதமான கொள்கைகளை, உத்திகளை விவரிக்கிறார் நன்னூலை எழுதிய பவணந்தி முனிவர்.

அதே கருவிகள், நம்முடைய தினசரி விவாதங்களுக்கும் பயன்படும், Swiss Army Knifeபோல!

***

என். சொக்கன் …

14 03 2013

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (16-Dec-15, 11:19 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 61

மேலே