4ஆதாமின் அப்துல்லா –பொள்ளாச்சி அபி

கோயமுத்தூரின் இதயம் போல இருந்த அந்தப்பகுதியை,பிரிட்டிஷார் என்ன பெயரிட்டு பதிவேடுகளில் பதிவு செய்திருந்தார்களோ தெரியவில்லை.ஆனால், ‘பட்டுநூல்கார சந்து’ என்றுதான் அங்கு வாழும் மக்களிடையே பெயர் புழங்கிக் கொண்டிருந்தது.சில ஓட்டுவீடுகளும், குடிசைகளுமாக நீண்டிருந்தது அந்த வீதி.கந்தலும்,கஞ்சி மொடமொடப்பும்,பட்டுச் சொக்காய் வேட்டியுமாக,அந்த வீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தாலே,அவர்கள் எந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் என சுலபமாக அடையாளம் தெரிந்துவிடும்.

அதில் ஒரு வீடு.., பரம்பரையாக வந்தது என்று பழமை காட்டிக் கொண்டிருந்த சிவப்பு ஓடுகள், நாட்பட்ட பாசத்தினால் பெரும்பாலும் பச்சையைப் பூசிக் கொண்டிருந்தது.இரண்டு குடித்தனங்கள் இருக்கும்வகையில் ஒரேகூரையின் கீழ் தடுக்கப் பட்டிருந்த அந்தப் பெரிய வீட்டின் ஒரு பக்கமிருந்த திண்ணையில்,விட்டத்தைப் பார்த்தபடி,படுத்துக் கொண்டிருந்தார் சிலார் சாயபு.இடது கையும்,காலும் பக்கவாதத்தால் தமது உயிர்ப்பை இழந்து சில வருடங்கள் ஆகியிருந்தன.

இன்னும் சற்று நேரத்தில்,தன் வாழ்வைக் கவ்விப்பிடித்த இயலாமையே போல்; இரவின் கருக்கல் வந்துவிடும் என்று எண்ணமிட்டபடியே கிடந்த சிலார் சாயபு,எழுபது வயதைக் கடந்துவிட்டார். ஆனால்,அவரது உடல் நூற்றாண்டு கண்டதைப் போல உருக்குலைந்து கிடந்தது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து,தனது பேச்சு,வழக்கம் போலில்லாமல், வெறும் ஒலிக் குறிப்புகளாக மாறிவிட்டதை சிலார் சாயபுவும் உணர்ந்தேதான் இருந்தார்.வலது கையின் விரல்களை நீட்டினால் தட்டுப்படும் தூரத்தில்,ஒரு சிறிய மூங்கில் கழியும் அவரருகே வைக்கப் பட்டிருந்தது.இயற்கை உபாதை தன்னை அவசரப்படுத்தும் போதெல்லாம்,அந்த மூங்கில் கழியை எடுத்து தரையில் தட்டுவார்.வீட்டிற்குள் எந்த மூலையில் இருந்தாலும் மகள் பாத்திமாதான், ஓடிவந்து கழிப்பிடத்துக்கு அழைத்துப் போவாள்.

பாத்திமாவை நினைத்தபோது, சிலார் சாயபுவின் மனதில் பெரும் துயரம் கவிழ்ந்தது. ‘இருபது வயதையும் அவள் எட்டிவிட்டாள்.அவளுக்கு ஒரு நிக்கா செய்துவைக்க கையாலாகாமல் போயிற்று. இந்தப் பாழும் பக்கவாத நோய் மட்டும் வராமல் இருந்திருந்தால், இந்நேரம் தனது கடமையை முடித்திருப்பேனே..’

‘தந்தை இப்படி படுத்திருக்கிறாரே.., தமது தங்கைக்கு நாமாவது மணம் செய்து வைப்போம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல்,பாத்திமாவின் அண்ணன்கள் ஜமேஷாவும்,மதார்ஷாவும் காலம் கடத்தி வருவதை,அவரால் சகிக்க முடியவில்லை. “உடன் பிறந்த தங்கைக்கு நிக்கா செய்ய ஏற்பாடு செய்யுங்களடா..!” என்று வாய்விட்டு அவர் சொன்னபோதெல்லாம்,எதுவுமே புரியாதவர்களைப் போல மலங்க மலங்க விழித்தபடி சிறிதுநேரம் நின்றிருந்துவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றுவிடுவதே வழக்கமாய் வைத்திருந்தார்கள்.

அவர்களது மனைவிமார்கள், தனது ஒலிக்குறிப்புகளுக்கு அர்த்தம் சொல்ல முயன்றாலும், ஒற்றை முறைப்பில் அடக்கிவிடுவதையும் சிலார் சாயபு அறிந்தே இருக்கிறார். 'பாவம்.. அவர்கள் என்ன செய்வார்கள்..பெண்களாயிற்றே..?'

மூத்தவன்,இளையவன் இருவரும் வாலிபத்தை எட்டியதும்,யார் யாரிடமோ சிபாரிசு பிடித்து,ஒரு பஞ்சாலையில் அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கவும்,நல்ல குடும்பமாகத் தேடித் தேடி,பெண் பார்த்து,இவர்களுக்கு நிக்கா செய்துவைக்கவும்,தான் பட்ட பாடுகளென்ன கொஞ்ச,நஞ்சமா..? நல்லவேளை,மூத்த மகள் கைருன்னிசாவிற்கு,எனக்கு கையும்,காலும் நன்றாக இருக்கும் போதே,நிக்கா பண்ணிவைத்துவிட்டேன்.அவளும் அவ்வப்போது வந்து,இவர்களிடம் தங்கையின் மணம் குறித்துப் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள்.

ஆனால்,அதைப் பற்றியெல்லாம் எந்த மனஉறுத்தலுமில்லாமல், இவர்களால் எப்படி இருக்கமுடிகிறது.?’ அவருக்குள் கொப்பளித்த கோபத்தை யார் மீது காட்டுவது என்று தெரியவில்லை.கைக்கருகே கிடந்த மூங்கில் குச்சியை எடுத்து,ஆத்திரத்துடன் தரையில் வேகமாக ஓங்கி இருமுறை தட்டினார்.

எதிர்த் திண்ணையில், சொற்ப வருமானத்திற்காக தான் படித்திருந்த மார்க்கக் கல்வியை அண்டை அயலாரின் குழந்தைகளுக்கு போதித்துக் கொண்டிருந்த பாத்திமா,உடனடியாக அதனை நிறுத்திவிட்டு,சிலார் சாயபுவிடம் ஓடிவந்தாள். ‘ஓ..கழிப்பிடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும்’ என நினைத்து,அவள் தன்னருகே வந்துவிட்டாள். இப்போது எனக்கு அப்படியெதுவும் அவசரமில்லை என்று சொல்லிவிடலாமா.., வேண்டாம்..,தனது சைகையை மதித்து,வேகமாக வந்த அவளது அக்கறையை உதாசீனப்படுத்தக் கூடாது.தேவையே இல்லையெனினும், பாத்திமாவின் கையைப் பற்றி மெதுவாய் எழுந்து,அவளின் துணையுடன்,வீட்டின் பின்புறமிருந்த கழிப்பிடத்திற்கு சென்று வந்து,சற்றுநேரம் அமர்ந்திருப்பதாக சைகையைக் காட்டினார் சிலார் சாயபு.சரியென்றபடியே பாத்திமா,தனது பாடத்தைத் தொடரச் சென்றுவிட்டாள்.

வேலை முடிந்து,அப்படியே மாலைநேரத் தொழுகையையும் முடித்துக் கொண்டு சகோதரர்கள் இருவரும்,வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த சிலார் சாயபுவிற்கு இரத்தம் கொதித்தது.உடனடியாக எழுந்து அவர்களை இழுத்துவைத்து,நாலு உதை கொடுக்கலாம் என்றுகூட இருந்தது.

ஆனால்,கிழித்துப் போட்ட கந்தலைப் போலக் கிடக்கும் இந்த வலுவிழந்த உடலை வைத்துக் கொண்டு என்ன செய்யமுடியும்..? தனது கையாலாகாத்தனத்தின் மீது அவருக்கே இப்போது எரிச்சலாக வந்தது. வீட்டின் வாசப்படியை ஜமேஷாவும்,மதார்ஷாவும் நெருங்கி விட்டனர். “ம்..க்கும்...”என்று அவரது குரல் திடீரெனக் கனைத்தது.வழக்கத்திற்கு மாறான சப்தம் கேட்டு சகோதரர்கள் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

அவர்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருந்த சிலார் சாயபு,தனது உடலின் சக்தியையெல்லாம் திரட்டி.. “தூ..”என்று அவர்களுக்கு நேராகக் காறித் துப்பினார்.அவர்களின் முகத்திற்கு நேராகவும்,கிப்லாவிற்கு எதிராகவும் தனது எச்சில் தெறிப்பதைக் குறித்து அவர் எந்தக் கவலையும் பட்டுக் கொள்ளவில்லை.

எதிர்பாராத வகையில்,ஏதோவொரு ஆயுதத்தால் தாக்குண்டதுபோல, அவர்கள் இருவரும் சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றுவிட்டனர். வாப்பாவின் இந்த செய்கைக்கு என்ன எதிர்வினையாற்றுவது..? என்றே அவர்களுக்குப் புரியவில்லை. அவர்களின் முகத்தில் கலவையான உணர்ச்சிகள் ஊடாடிப் பரவியநிலையில்,கால்களில் சுடுநீர் பட்டதைப் போல வேகமாகச் சென்று தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கொண்டார்கள்.

அவர்களின் தத்தளிப்பு நிலையைக் கண்ட சிலார் சாயபுவிற்கு, எதிரிகளை சரியான ஆயுதத்தால் அடித்து வீழ்த்திவிட்டதாய் ஒரு நிம்மதி மனதுக்குள் நிறைந்து கொண்டிருந்தது.அவருடைய வாய் மெதுவாய் ஒருபக்கக் கோணலுடன் மந்தகாசச் சிரிப்பாய் விரிந்தது.அப்படியே படுத்துக் கொண்டார்.

---- தொடரும்

தோழர்களின் புரிதலுக்காக -- எந்தவொரு மனிதரின் முகத்திற்கு எதிராகவும், கிப்லா [ புனித மெக்கா] இருக்கும் திசை நோக்கியும் துப்புவது,இஸ்லாம் மதத்தில் பாவச் செயல்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (18-Dec-15, 9:56 pm)
பார்வை : 112

மேலே