கனடியத் தமிழனின் அடையாளத்தில் ஜின்னாவின் காட்சிப் பிழைகள்
காட்சிப் பிழைகள்
Friday 18th of December 2015 01:29:08 PM
ஒரு குவளையில்
நீ குடித்து விட்டு போன
மிச்ச தண்ணீர் இருக்கிறது
நான் எடுத்து குடித்து விடுவேனோ என
அவ்வளவு கவலை
அந்த குவளைக்கு...
உனது மௌனம் என்னை
முழுமையாக மூழ்கடித்து விட்டது
அதில் நான்
தத்தளிக்கிறேனா நீந்துகிறேனா என்பது
நீ சொல்லும் பதிலில்தான் இருக்கிறது...
நான் உட்கார்ந்து கொண்டிருந்தாலும்
ஓடிக் கொண்டேதான் இருக்கிறது
உன் நினைவுகள் எனக்குள்...
உனக்காக சிந்தும் கண்ணீர் துளிகளில்
ஒருபோதும் உப்பு இருப்பதே இல்லை...
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
ஒரே ஒரு கேள்விதான் எழுகிறது
நீ பிறந்தது எனக்கு
வரமா சாபமா?...
நான் ரத்தத்தால்
உன் பெயரை எழுதுகிறேன்
நீ சிவப்பு ரோஜாவை சூடி கொள்கிறாய்
அப்போது கூட இரண்டும் ஒரே நிறமில்லை...
நீ கடலாக இருக்கிறாய்
நான் அலைகளுக்கு பயந்து
ஆற்றில் குதிக்கிறேன்
அதிலும்
சேருமிடம் நீயென தெரியாத அப்பாவியாக...
நான் அந்த பக்கம்
நீ இந்த பக்கம் என
தண்டவாளமாக இருக்கிறோம் நாம்
நம்மை மிதித்துக் கொண்டே
ரயிலில் வருகிறது காதல்...
ஒவ்வொரு பரிசு பொருளிலும்
நீ நிராகரித்த நிமிடங்கள்
நிம்மதியாக தூங்குகிறது நீக்கப்படாமல்...
நீ போகும்போது
பூ பூத்ததாக சொல்லப் படும் பாலைவனத்திலும்
நான் போகும்போது மணலாகத்தான் இருக்கிறது...
உனது கன்னக்குழியில்
எனக்கான ஆறடி அப்படியே தெரிகிறது..
நீ நிலவாக இருக்கிறாய்
நான் நீராக இருக்கிறேன்
எனக்குள்
தவழ்கிறாய் நீ
தவிக்கிறேன் நான்...
இப்போது அடிக்கடி
பச்சை மரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நீ தந்த வலிகளை மறக்க...
நீ மிதித்து விட்டுப் போனாலும்
உன் பாதச் சுவடு பத்திரமாய் இருக்கிறது
என் மனதுக்குள்...
---நம் எழுத்துத் தள நம் அபிமானக் கவிஞர் ஜின்னாவின்
கவிதை
இது படத்திலுள்ள வழி காட்டி ---அ --கனடிய தமிழனின்
அடையாளம் என்ற பெரிய வலை இதழில் படத்துடன் பதிவு செய்திருகிறார்கள் . அங்கிருந்து இங்கே பதிவு
செய்திருக்கிறேன் அது இங்கே அவர்கள் லிங்க் முகவிரியுடன்
பதிவாகிறது . தளம் லிங்கை அனுமதிக்க வில்லை .நீக்கியிருக்கிறேன்
இதில் வெட்ட வெவெளிச்சமான தவறு எழுதிய கவிஞர்
ஜின்னாவின் பெயர் குறிப்பிடப் படவில்லை . ஏன் ?
நம் எழுத்துத் தளம் மூலம் வழி காட்டி எனும் கனடியத்
தமிழர்களின் அடையாளமான வலை இதழில்
அதிகாரப் பூரவமாக விளக்கம் கேட்க வழி வகை இருக்கிறதா ?
இம்மாதிரி எழுதிய கவிஞனுக்கு கிரெடிட் கொடுக்காமல் பல
வலைத் தளங்களிலும் வலைப்பூக்களிலும் பதிவாவதை
எப்படித் தடுக்கலாம் ?
திருத்தாதவர்கள் திருந்தாதவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வலைச் சட்டம் இருக்கிறதா ?
உருப்படியான உபயோகமான பரிந்துரை இருந்தால் சொல்லவும் .
யாதும் ஊரே யாவரும் கேளிர்
பிறிதொரு தமிழன் கவி திருடி வெளியிடல் மோசம் காணீர் !
இதயத்தில் உண்மை கொள்வீர் இலக்கியம் வளர்ப்பீர் !
---------அன்புடன், கவின் சாரலன்