எங்கே எங்கள் பாரதி

எங்கே எங்கள் பாரதி...??
எங்கே.. எங்கே.. எங்கள் பாரதி - என்று
தேடித் திரிபவர் யாரடி
வீர தீரம் கொண்ட பேரெல்லாம் - இந்த
நாட்டினில் பாரதி தானடி..!!
அன்புசெயல் தொழில் என்றானடி
அவ்வழி நின்றானவன் தானடி
அன்பை பொழிபவர் நாமென்றால் - இங்கு
நீயும் நானுமொரு பாரதி..!!
சாதி இரண்டென்று ஓதினான்
மீதி சாதியனைத்தையும் சாடினான்
சாதியொழித்திங்கு வாழுவோர்
பாரதி தானன்றி வேறு யாரடி..!!
நாட்டினில் ஆயிரம் குற்றங்கள்
தீய்ந்து போனதிங்கு நம் சட்டங்கள்
பாட்டினில் சாட்டையை சுழற்று
நீயும் பாரதி என்பதை உணர்த்து..!!
கள்ளத்தன நரி கூட்டங்கள்
நல்லவராய் நடமாட்டங்கள்
தேடிக் கலைத்தவர் வேடங்கள்
பாவினில் நாவினில் சாடுங்கள்..!!
ஏன் தேடலில் எட்டய பாரதி - அவர்வழி
நின்றிட நாமெல்லாமே பாரதி
பற்ற வைத்தேன் நானொரு பாரதி
பற்றிக்கொண்டால் எல்லோரும் பாரதி..!!
=====================================================================
குறிப்பு
படம் - எட்டயபுரத்திலுள்ள மகாகவி பாரதியார் அவர்களின் இல்லம்.
கடந்த வருடம் பாரதியார் பிறந்த நாள் அன்று இந்த இல்லத்திற்கு
சென்று அவரைப் பற்றிய கவிதை ஒன்றினை வாசித்துவிட்டு வந்தேன்.
அழைப்பு விடுத்து அழைத்துச் சென்று அனைத்திந்திய தமிழ்
எழுத்தாளர் சங்கத்திற்கு என் நன்றி..!
இக்கவிதையை நேற்று பெரம்பூரில் நடை பெற்ற "இலக்கியச் சோலை"
சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் வாசித்தேன். தலைப்பினை
அளித்த ஆசிரியர் திரு தமிழினியன் அவர்களுக்கு என்
நன்றி..!
=====================================================================