நண்பனுக்கு

அன்பு நண்பா!...
அயல் தேசத்திலிருந்து
ஐந்தாண்டுகளுக்குப்
பின்பு திரும்பும்
உனைக்காண
விமானநிலையத்தில்
காத்திருக்கும்
இக்கணத்தில் மனக்கண்ணில்
விரிகின்றன கல்லூரி
நாட்கள்...!
நினைவிருக்கிறதா?!...
ஒற்றை கிளாசில் பருகிய
டீயும்...
சிகரெட்டுடன்
பகிர்ந்துக்கொண்ட
சீக்ரெட்டுகளும்...
அரட்டையில் அதிர்ந்த
திரையரங்கமும்...
உணவுடன் பகிர்ந்துக்
கொண்ட உணர்வுகளும்...
வகுப்பறையில் செய்த
சில்மிஷங்களால் பெற்ற
தண்டனைகளும்...!
இன்னும் பிறவும்!
என்னதான்
தொலைப்பேசி,இணையமென
வந்துவிட்டாலும் முகம்
பார்த்து
பேசும் முகமன்
ஸ்பரிசங்களை அவற்றால்
தர இயலாதல்லவா?!
அந்தவொரு
கணத்திற்காகவே
காத்திருக்கிறேன்...
இவ்விரவிலும் இங்கு!..
இடையிடையே
எழுகின்றன...
உன் நிகழ்கால பாவனை
குறித்த வினாக்களும்...
எள்ளளவிலும்
பசுமரத்தாணியாய்
பதிந்துவிட்ட பழைய
நினைவுகளை நீ
மறந்திருக்க மாட்டாய்...!
மனம் புதைந்த சுக
ராகங்களாய் அந்நியோண்ய
நொடிகளை மறத்தலும்
அரிதல்லவா?!
பணமது புதிதெனினும்
மனமது பழையதுதானே?!
ஆகவே,
உன் மனத்தை பணம்
வென்றிருக்காது என்றே
தோன்றுகிறது!...
உனக்குத் தெரியுமா?
என் வாழ்வின் வசந்தகாலம்
நீ கண்ணீருடன்
விடைப்பெற்ற தினமே
பறிபோய்விட்ட செய்தி!...
இன்று
என் கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டையாகவும்...
மகிழ்ச்சியூட்டும் நல்
மதுரமாகவும்
நீள்கின்றன...
அத்தினங்கள்!...
எதேச்சையாய் பழைய
புத்தகங்கள் உறங்கி
கொண்டிருக்கும்
அலமாரியை திறக்கும்
பொழுதுகளில்
மனம் மீண்டும்
கல்லூரியினுள்ளே அடி
வைத்ததாய் எண்ணி
நிகழ்கால
சோகங்களும்,கண்ணீரும்
நீற்றுச் சாம்பலாவதை நீ
அறிவாயா?!
இன்றைய வலிகளுக்கு
என்னிடம் இருக்கும் ஒரே
நிவாரணி உன்னுடன்
தொலைத்த நாட்களே!...
பூங்காவில் சிதறிய
புன்னகை... சுடிதாரை
சுற்றிய நிமிடங்கள்...
பையிலிருப்பது
பணமேயானாலும்
பகிர்ந்துதவிய நாட்களை
நீயும் மறந்திருக்க
வாய்ப்பில்லை...!
என்னைப் போலவே நீயும்
அவற்றை
அடிக்கடி
முணுமுணுக்கும்
ஓய்வு நேரப்பாடலாய்...
மியூசியத்தில்
குழந்தைப் பார்க்கும்
முகம் வியந்த
காட்சியாய்...
இன்றுவரை புதுப்பித்து
இளமையுடன்
வைத்திருப்பாயானால்!!!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

எழுதியவர் : Daniel Naveenraj (22-Dec-15, 7:35 pm)
Tanglish : nanbanukku
பார்வை : 227

மேலே