உலகம் தொழுகிறது
நிலாப் பிறையும்
நெற்கதிரும்
நின்று குனியும்
ருகூவு
ஆடு மாடு
விலங்கினங்களும்
உன்னை வணங்கி
மேய்ந்தபடி
குனிந்தன
ஸுஜுது
இருபுறம்
முகம் திருப்பி
சலாம் கூறின
சூரியகாந்தி பூக்கள்
காலை
எழுந்து
மாலையில்
மண்ணில்
தலைவைத்து
ஸஜ்தா...
தொழுகிறான்
சூரியன்
ஓங்கி உயர்ந்த
மரத்தையும்
வணங்க வைத்துவிட்டாய்
காற்றை அனுப்பி
காபாவை
தாங்கிய
பூமியும் சுற்றுகிறது
இடமிருந்து
வலமாக
கோல்கள்
உன்
கால்களை
சுற்றுகின்றன
உன் திசை பார்த்து
திரும்பியபடி
மண்ணில்
புதைகின்றன
பிணங்கள்
நிகரற்றவனே
நிலாவை பிளந்த
நபியின்
நினைவுகளை
எங்கள்
நெஞ்சத்தில்
தைப்பாயாக
இப்போதும்
உன்னைப் பற்றி
கவிதை எழுதுகிறாய்
இந்த கையை
அசைத்து
--------------------------கா.காஜாமைதீன்