ஒரு மௌனத்தின் அலறல்
இடிமழையும் கடும்புயலும்
எனதுமனம் நிதம்கண்டும்
இழிவுநிலை சென்றதில்லை
இடைவந்த அவப்பெயர்கள்
இதயத்தை பிழிந்தாலும்
எள்ளளவும் கலக்கமில்லை
அடிவாங்கும் பழுத்தமரம்
அதனாலே எனதுநெஞ்சில்
அணுவேணும் ஐயமில்லை
அரைக்காசு பெறுவதற்காய்
அவைகூட்டி எனைஏசும்
அற்பற்க்கு நான் அடிமையில்லை
விடியாத இரவுகளை
விழிமீது தேக்கிவைத்த
விதியினைநான் வென்றுசாவேன்
விழுந்தாலும் பூமியில்நான்
விதையாகத்தான் வீழ்வேன்
விருட்சமென எழுந்துவாழ்வேன்
பகைகூடி எதிர்த்தாலும்
பகட்டாக பொய்யுரைக்கும்
பகல்வேடம் எனக்குவேண்டா
பிறர்வாழ எனதின்பம்
பின்வைத்து உழைக்கின்ற
பண்பிற்கு தோல்வியுண்டோ?
அகத்துள்ளே அழுக்கற்ற
அறம்கோடி நான்வைத்தும்
அவப்பெயரே வாழ்வில்கண்டேன்
அதர்மங்கள் என்னெதிரே
அரசாட்சி செயக்கண்டும்
அநீதிவழி போகமாட்டேன்
விடியாத இரவுகளை
விழிமீது தேக்கிவைத்த
விதியினைநான் வென்றுசாவேன்
விழுந்தாலும் பூமியில்நான்
விதையாகத்தான் வீழ்வேன்
விருட்சமென எழுந்துவாழ்வேன்
பணம்-காசு உள்ளபக்கம்
பல்லிளiக்கும் பூமியிது
பண்பிற்கு மதிப்பேது?
பழிசேரும் நாள்வந்தால்
பனித்துளiயும் அளவாகும்
பந்தத்தில் நான்கண்டசூடு
குணமென்ன? கொள்கையென்ன?
குலமென்ன எனவறிந்து
கொண்டாடுவார்கள் இல்லை
குற்றங்கள் செய்தேனும்
பொருள் சேர்க்கும்கூட்டத்தில்
பணந்தான் வாழ்வினெல்லை
விடியாத இரவுகளை
விழிமீது தேக்கிவைத்த
விதியினைநான் வென்றுசாவேன்
விழுந்தாலும் பூமியில்நான்
விதையாகத்தான் வீழ்வேன்
விருட்சமென எழுந்துவாழ்வேன்
படிதவறி நான்வீழ்ந்தேன்
பற்றி எழஏதுமில்லை
பக்கத்தில் யாருமில்லை.
பலகாலம் பழகிவந்த
பாழ்நட்பும் விலகிசென்று
பகர்ந்ததுவே பணத்தின் எல்லை
அடிக்கின்ற காற்றினிலே
அகன்றோடும் குப்பையெலாம்
அசையாத அன்புநிற்கும்
அகல்கொடுக்கும் வெளிச்சங்கள்
அடுத்தவர்க்கு உதவிநிற்கும்
அதன்கீழோ இருட்டுமிஞ்சும்
விடியாத இரவுகளை
விழிமீது தேக்கிவைத்த
விதியினைநான் வென்றுசாவேன்
விழுந்தாலும் பூமியில்நான்
விதையாகத்தான் வீழ்வேன்
விருட்சமென எழுந்துவாழ்வேன்
பணத்தாலே எனையளந்து
பார்த்திட்ட பாழ்உலகே
புதைவதற்குள் உனைவெல்வேன்.
பாசமும் நற்பண்புகளும்
பணத்தின் முன் தலைவாணங்கா.
பறையடித்து உரக்கசொல்வேன்.
விடியாத இரவுகளை
விழிமீது தேக்கிவைத்த
விதியினைநான் வென்றுசாவேன்
விழுந்தாலும் பூமியில்நான்
விதையாகத்தான் வீழ்வேன்
விருட்சமென எழுந்துவாழ்வேன்