6ஆதாமின் அப்துல்லா - பொள்ளாச்சி அபி
பாத்திமா, பக்தூருக்கு வந்து சில வாரங்கள் ஓடியிருந்தது. ஊரின் அமைதியும்,பரவலாய்க் கிடந்த பசுமையும்,பயிர்களிலிருந்து கிளம்பி எப்போதும் காற்றில் நிரம்பியுள்ள வாசனைகளும், பவானி ஆற்றின் சலசலப்பும் பாத்திமாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.முஸ்தபாவின் அண்ணன் மகள் என்பது அந்த ஊரைப் பொறுத்தவரை பாத்திமாவின் அந்தஸ்தை மிகவும் உயர்த்தியிருந்தது.சித்தப்பா முஸ்தபாவும்,சித்தி உசேன் பீவியும் காட்டிய அன்பிலும் ஆதரவிலும் வறண்டுபோய்க் கிடந்த பாத்திமாவின் உள்ளத்தில் புது மகிழ்ச்சியையும்,உடலுக்கு தெம்பையும் ஊட்டிக் கொண்டிருந்தது. சொல்லப்போனால்,தனது வயதுக்கே உரித்தான இளமையும்,ஒளியும் இப்போதுதான் தன்னிடம் ஏற்பட்டிருப்பதாக பாத்திமாவே நம்பினாள்.
முஸ்தபாவின் மகன் பாஷாவும்,அவனது மனைவி ஜீனத்தும் தனது உடன் பிறந்த அண்ணன்கள், அண்ணிகள் போலில்லாமல், உண்மையிலேயே பாசத்தைப் பொழிந்தனர். வசதியான குடும்பம் என்று இல்லாவிட்டாலும்,அங்கு அமைதியும் மகிழ்ச்சியும் எப்போதும் தவழ்ந்ததில்,அந்த வீடு அல்லாவால் ஆசீர்வதிக்கப் பட்டதாயிருப்பதாக,ஆண்டவனுக்கு தினமும் நன்றி சொல்லி வந்தாள் பாத்திமா.
முஸ்தபாவின் வீட்டு வேலியோரம் வளர்ந்திருந்த அந்தப் பெரிய வேப்பமரம்,வாசல் எங்கும் குளிர்ந்த நிழலைப் பரப்பிக்கொண்டிருந்ததுடன்,வேப்பம் பூக்களையும், பரவலாக இரைத்திருந்தது.
மதிய உணவிற்குப் பின், வெள்ளையும்,பச்சையுமாக வாசலில் சிதறிக் கிடக்கும் வேப்பம் பூவிலிருந்து வந்து கொண்டிருந்த நுண்ணிய மணத்தை நுகர்ந்தபடி, வேப்பமர நிழலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு அமர்ந்தபடியோ,படுத்துக் கொண்டோ நேரத்தைக் கழிப்பது அல்லது சிறியதாக ஒரு தூக்கம் போடுவது முஸ்தபாவின் அன்றாடப் பழக்கமாயிருந்தது. சிலசமயம் உசேன் பீவியும் அவரோடு அமர்ந்து,ஊர்க்கதையைப் பேசிக் கொண்டிருப்பாள்.
அன்றைக்கும் அப்படித்தான்,கட்டிலில் அமர்ந்து ஏதோ கணக்கு வழக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் முஸ்தபா. “என்ன பாய்..ஏதாவது முக்கியமான வேலையா இருக்கீங்களா.., உள்ளே வரலாமா..?” என்று கேட்டபடியே நுழைந்து கொண்டிருந்தார் யாகூப்.
“ஆமாமா..வெள்ளைக்கார துரைமாரோட கணக்கு வழக்கெல்லாம் என்னையத்தான் பாக்கச் சொல்லியிருக்காங்க.. அதான் எத்தனை கப்பலு தேக்குமரமும், டீத்தூளும்,பருத்தியும் போயிருக்குன்னு கணக்குப் பாத்துகிட்டு இருக்கறேன்..” என்று முஸ்தபா கிண்டலாக சொல்ல, யாகூப் தனது மிதமான தொப்பை குலுங்க சிரித்தார்.
“என்ன..இந்நேரத்துலே வீட்டுக்கு வந்திருக்கே..அதிசயமா இருக்கு..,ஏதாவது முக்கியமான காரியமா..?”
“முக்கியமெல்லாம் ஒண்ணுமில்லே பாய்..,நாளைக்கு காலையிலே கோயமுத்தூருக்கு ஒரு ஜோலியாப் போறேன்.அப்படியே கொஞ்சம் மளிகை சாமானெல்லாம் வாங்கிட்டு வந்துடுங்கன்னா நம்ம பீவி. நம்ம கையிலே இப்போதைக்கு தொகையா எதுவுமில்லே.வாழை மண்டிக்காரன் ரெண்டு,மூணு நாள் கழிச்சு பணம் தர்றேன்னு தள்ளிப்போட்டுட்டான்.அதான் உங்களைப் பாத்து சொல்லிட்டுப் போலாமின்னு வந்தேன்.மக்ரீப் தொழுகைக்கு வரும்போது கொஞ்சம் போல் பணம் கொண்டு வாங்க பாய்..!”
“இன்ஷா அல்லா..அப்படியே ஆகட்டும்..” என்றவர் வீட்டு வாசல்படியைப் பார்த்து,“யாகூப் பாய்க்கு குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா..”, என்று குரல் கொடுத்தார்.
“இருக்கட்டும் பாய்..எனக்கு ஒண்ணும் வேணாம்..நான் கிளம்புறேன்..”
கண் சிமிட்டியபடியே யாகூப்பிடம் தணிந்த குரலில், “அட உட்காருப்பா..இப்ப உனக்கு ஏதாவது கொண்டு வரச் சொன்னாத்தான், எனக்கும் சேத்து வரும்..,நான் தனியாக் கேட்டன்னா..இந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்லை..,வயசாகிட்டே போகுது. திங்குறது,குடிக்கிறது மொதக் கொண்டு,எல்லாம் அளவா வெச்சிக்கலாம்னு ஏதாவது நெனப்பிருக்கா தெரியலையே..,ன்னு நம்ம பீவீ சத்தம் போடுவா..” என்றபடியே சிரித்தார் முஸ்தபா,
‘ஓ..அதானா விஷயம்..,பாவம் இந்த மனுசனின் ஆசையைக் கெடுப்பானேன்..,என்று தனக்குள் எண்ணிக் கொண்ட யாகூப்,இனி இந்த நேரத்திற்கு இவரைப் பார்க்கவருவதை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளத்தான் வேண்டும்..’ என்றும் நினைத்துக் கொண்டார்.முஸ்தபாவின் உடல்நலத்தில் தனக்கு மட்டும் அக்கறையில்லையா என்ன.?
சில நிமிடங்கள் கழிந்திருந்தது.
வீட்டுக்குள்ளேயிருந்து,தனது சேலை முந்தனையால் இடப்பட்டிருந்த முக்காட்டை இழுத்துச் சரிசெய்தபடியே,இறங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை,இப்போதுதான் பார்க்கிறார் யாகூப்.
ஆவி பறக்கும் இரண்டு பித்தளைத் தம்ளர்களை, ஈயத்தட்டில் ஏந்தியபடி, மெதுவாய் அவர்களின் அருகே வந்து கொண்டிருந்தவளின் முகம், மேதமையுடன் கூடிய பிரகாசமாய் இருப்பதாகப் பட்டது. பதட்டமில்லாமல் வந்த அவளுடைய நடையில் இருந்த நிதானம்,எதனையும் அவள் யோசித்து தீர்க்கமாகத்தான் முடிவை எடுப்பாள் என்று காட்டிக் கொண்டிருந்தது.வைத்த கண் திருப்பாமல்,வயது வந்த ஒரு பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வுமில்லாமல்,பார்த்துக் கொண்டிருந்த யாகூப்பிற்கு, ஏனோ சிறுவயதிலேயே இறந்துபோன தனது மூத்த மகள் மதீனாவின் நினைவு மனசுக்குள் வந்து போனது. அவளைப் போலவே சிவந்த நிறமும்,எடுப்பான முக அழகும்..,, இன்றைக்கு அவள் உயிரோடிருந்தால் இவளைப் போலத்தான் இருப்பாள்..,’
“ அஸ்ஸலாமு அலைக்கும்.., எடுத்துக்கங்க..” கருப்பட்டிக் காபியின் மணம்,யாகூப்பின் நாசியைத் தாக்கிய விநாடியில் வந்த அவளுடைய குரலைக் கேட்டுத்தான் நனவிற்கு வந்தார்.
தம்ளரை எடுத்துக் கொண்டு,கண்களில் மின்னும் நன்றியோடு அவளைப் பார்த்தபோது,அதனை அங்கீகரிக்கும் சிறு புன்னகையுடன் அவள் திரும்பிச் சென்றாள்.
அவள் தலை மறைந்ததும், “பாய்..பாய்..,இதுதான் பாத்திமாவா..?” யாகூப்பின் குரலில் ஒலித்த அவசரத்தைக் கண்டு,ஆச்சரியம் கொண்ட முஸ்தபா,“ஆமா,அன்னைக்கே சொன்னேனே..,நீ இப்பத்தான் பாக்குறே போல..,”
“ஏம்..பாய் இந்தப் பொண்ணைக் கட்டித் தர்றேன்னா..போட்டி போட்டுகிட்டு மாப்பிளைங்க வருவாங்களே..?”
“வாஸ்தவம்தான்..,தாய் தகப்பனில்லாத பொண்ணு..,கட்டிக் குடுக்குற இடத்திலே நல்லபடியா வாழணுமேன்னு கவலையா இருக்கு யாகூப். நல்லா ஓதிப் படிசசுருக்கா..,அதுக்கேத்த மாதிரி இடமாப் பாக்கோணும். சும்மா ஒப்புக்கு தள்ளிவிட்ட மாதிரி, கிடைக்குற இடத்துலே கட்டிக் குடுத்துட்டு நாளைக்கு கண்ணைக் கசக்கிட்டு நிக்கிற நெலமை வந்துச்சுன்னா.. அந்தப் பாவம் நம்மளைத்தான் சேரும்..!, முஸ்தபாவின் குரலில்; ஒரு தந்தையின் அக்கறையும்,கவனமும் தெரிந்தது.
யாகூப், “பேசாம நம்ம ஹஜரத் நாகூர் மீரானுக்கே கட்டிக் குடுத்துட்டா என்ன..? உறவுன்னு சொல்லிக்க நம்மளை விட்டா இப்ப அவருக்கும் யாரும் இல்லே.பாக்கவும்,பழகவும் நல்ல மனுசனாத்தானே இருக்காரு.நல்ல ஈமானோட,மரியாதை தெரிஞ்சவராவும் இருக்காரு.பொண்ணைக் கட்டிக் குடுத்தா, நம்ம கண்ணு முன்னாலேயே நல்லாப் பொழச்சிக்குமே பாய்..!”
முஸ்தபாவின் மனதிற்குள் ஒரு மின்னல் வந்துவிட்டுப் போனாற் போலிருந்தது. ‘யாகூப் சொன்னது எல்லாமே உண்மைதான்.நாகூர் மீரானுக்கு, பாத்திமாவைக் கட்டிக் கொடுத்துவிட்டால்,பெண்ணின் நலமான வாழ்க்கையைக் குறித்து,எவ்வத அச்சமும்,கவலையும் கொள்ளத் தேவையில்லை. இஸ்லாத்தின் மீதும்,இறைவனின் மீதும் பெரும் ஈடுபாடும்,பக்தியும் கொண்ட நாகூர் மீரான், பாத்திமாவின் மதிப்பை நிச்சயம் தெரிந்து கொள்வார். அவளின் மனம் கோணாமல் நிறைவான வாழ்க்கையை அளித்துவிடுவார்.எனக்கு பெரும் நம்பிக்கையாகத்தான் இருக்கிறது..’ மனதுக்குள் ஓடிய யோசனையைத் தொடர்ந்து திடீரென அவருக்கு ஒரு சந்தேகமும் வந்துவிட்டது.அதனை யாகூப்பிடம் கேட்கவும் செய்தார். “நீ சொல்றெதல்லாம் சரிதான் யாகூப்..,ஆனா.., வயசு வித்தியாசம் அதிகமாயிருக்குமோன்னு தோணுது.இப்படியொரு ஆளை நிக்கா பண்ணிக்க பாத்திமாவுக்கு சம்மதம் இருக்குமான்னு தெரியலை. அதே மாதிரி,இவ்ளோ சின்ன வயசுப் பொண்ணக் கட்டிக்கிறதுக்கு, ஹஜ்ரத்தும் சம்மதிப்பாரான்னு தெரியலையே..?”
“உங்களுக்கு அப்படி தோணுதுன்னா,முதல்லே நாம ஹஜ்ரத்துகிட்டே பேசிப்பார்ப்போம்.நம்ம நெலமையைப் பத்தியும்,பாத்திமாவைப் பத்தியும் சொல்லுவோம்.முதல்லே நாகூர் மீரான் சம்மதிச்சுட்டாருன்னா அப்புறமா பாத்திமாகிட்டே பேசுவோம். ஆனா,முதல்லேயே ஹஜரத்துகிட்டே சொல்லிடணும், பாத்திமாவுக்கு இஷ்டமில்லேன்னாலும்,நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாதுன்னு சொல்லிக்கலாம் பாய்..அவரு புரிஞ்சுக்குவாரு..நீங்க கவலைப் படாம அடுத்த வேலையைப் பாக்கலாம் பாய்..” யாகூப்,ஏதோவொரு மிகப் பெரிய போரினை முன்னின்று நடத்தப் போவது போலவும், அதற்கான வியூகங்களை கவனமாக வகுப்பது போலவும் தோரணையாகப் பேசினார். ஆனாலும்,யாகூப் சொன்னதுதான் சரியெனவும் பட்டது முஸ்தபாவிற்கு.
“யாகூப்.., நாகூர் மீரான்கிட்டே பேசும்போது,நான் முடிஞ்சவரை பக்குவமாத்தான் பேசுவேன்.நீயும் கவனமாப் பேசணும்..,” முஸ்தபா வைத்த வேண்டுகோளின் பொருள் யாகூப்பிற்கு புரியவில்லை.
“என்ன பாய்,திடீர்னு இப்படிச் சொல்றீங்க..,”
“அட..நீ எதுவும் தப்பா எடுத்துக்காதே..,ஹஜ்ரத்துக்கு இருக்க இடம் கொடுத்து,நேரத்துக்கு சோறு போட்டு பாத்துக்கறதாலே, அவரு தலையிலே கட்டிவெச்சுட..,நாம கட்டாயப் படுத்தறமோன்னு அவருக்கு எந்த இடத்துலேயும் தோணிறக் கூடாதே.., அதனாலத்தான் எச்சரிக்கை வேணும்னு சொன்னேன்.”
“சரிதான்..சரிதான் பாய்..” யாகூப்பிற்கு இப்போது சந்தேகம் தீர்ந்தது.
யாகூப் கிளம்பி விட்டார். ‘இந்த ஏற்பாட்டை, மனைவி உசேன் பீவியிடம் இப்போதே சொல்லலாமா..? வேண்டாம் பிறகு சொல்லிக் கொள்ளலாம்..’எண்ணத்தை தள்ளிப் போட்டார் முஸ்தபா.
--------------------------- தொடரும்