மது ஒழிப்பு

மது ஒழிப்பு
பாவலர் கருமலைத்தமிழாழன்


கடித்திட்டால் உயிர்போகும் என்ற றிந்தே
கடிக்கக்கை பாம்பின்வாய் நீட்டல் போல
வெடித்துவிடும் தீவைத்தால் என்ற றிந்தே
வெடிகுண்டைக் கைவைத்தே தீவைத் தல்போல்
நொடிப்பொழுதும் இவைகளினை எண்ணி டாமல்
நேருமெந்த விளைவினையும் நினைத்தி டாமல்
குடிகெடுக்கும் குடியென்ற சொல்லைப் பார்த்தும்
குடிப்பதற்கே நுழைகின்றார் கடையின் உள்ளே !

என்னசுகம் என்னசுகம் எனவி யந்தே
எடுக்கின்றார் கைகளிலே மதுவின் கோப்பை
என்னவென்று சொல்லுமுன்பே மயங்கி வீழ்ந்தே
எடுக்கின்றார் வாந்தியினை பார்ப்போர் வெறுக்க
என்னசுகம் என்றவரே உணரு முன்பே
எல்லாமும் கெட்டுடலும் நோயில் வீழத்
தின்னசுகம் ஏதுமில்லை ; பொருளி ழந்தே
திகழ்ந்தபெயர் போனதொன்றே கண்ட பலனாம் !

அன்புபோகும் தாலிநகை அடகு போகும்
அருங்குழந்தை கல்வியொடு வளர்ப்பு போகும்
அன்றாட கூலியெல்லாம் வீணாய்ப் போகும்
அருங்குடும்பம் வாழ்வெல்லாம் பாழாய்ப் போகும்
இன்றுபள்ளி சிறுவரொடு பெண்க ளெல்லாம்
இக்கொடிய பழக்கத்தில் விட்டி லானார்
இன்னுமிந்த விடமதுவை ஒழிக்கா விட்டால்
இந்தநாடு சுடுகாடாய் மாறிப் போகும் !
.

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (23-Dec-15, 10:06 am)
பார்வை : 1044

மேலே