தனி ஆவர்த்தனம்
என்முன் அமைதியான நதி போல
காலம் ததும்பிக் கொண்டிருக்கிறது
உருவமற்ற அதன் புலன்கள்
என்னுள்
சலனத்தை ஏற்படுத்துகின்றன
சிறிது சிறிதென மிகவும் சிறிது சிறிதென
அலைகளின் சுழிப்பினைப்படிகளென வைத்து
அதன் ஆழங்களுக்குள் இறங்குகிறேன்
இதற்கு முன்னரும் முயற்சித்திருக்கிறேன், பலமுறை.
அப்போதெல்லாம் எச்சரித்து
என் ஓட்டத்தை நிறுத்தியிருக்கிறது, காலம்
"என்னுள் எதையும் தேடாதே
எனக்குள் புதையாதே
என்னில் தேங்காதே
என்னிடம்
கடந்த நிகழ் எதிர்
என்றெதுவும் கைவசமில்லை
எல்லாம்
நீங்களிசைத்த மாயைகள்
என்னிடம் எதுவுமில்லை
நான் ஏதுமற்றவன்
முடிந்தால் வாழ்மையைப்
படகெனச் செய்து என்னைக் கடந்து செல்
இதுவே உனக்கு
நான் தரும் உத்திரவாதம்"
ஆனால்
இம்முறை தீர்மானித்திருந்தேன்
உறுதியாக
காலத்தின் படிகளுக்குள்
இறங்கி ஏறுவதென
சுழிகளில் மறுகிப் படர்ந்ததன்
ஆழங்களுக்குள் சென்றேன்
என்
இன்றும் இனியும்
இனியில்லை
இப்போது வரை
தண்ணீர் மீனென
நீந்திக் கொண்டிருக்கிறேன்
கரையேறின்
எனக்கினி சுவாசமில்லை
எனக்கான வாழ்க்கை கரையிலமர்ந்து
அமைதியாக
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது