உளிச் சிற்பிகள்

உளிகளின் ஓசையில்
உயிர் பிறக்கும் சிற்பங்கள்..!
உளி பிடிக்கும்
சிற்பியின் வாழ்வில்
மகிழ்ச்சிகளோ சொற்பங்கள்...!
வயதும் கண்களும்
சுருக்கம் விழுந்து
ஓய்ந்து போனாலும்
உளியைத் தொட்ட பின்
கடவுளின் ஒளியெல்லாம்
ஒட்டு மொத்தமாய்
இவர்களுக்குள்
கூடுவிட்டுக் கூடு பாய்வது
யாருக்கும் புரியாத
தெய்வீக மர்மங்கள்...!
ஒட்டுப்போட்ட
மூக்குக் கண்ணாடிக்குள்
கண்களிருந்தாலும்
உளியைத் தொட்டபின்
மனதெல்லாம் கண்களாகிறது...
சிற்பங்கள் மட்டுமே
சிந்தனைகளாகிறது...!
மனதுடன் கண்களும்
வலது கை, இடது கையென
ஒருங்கிணைந்த
நாற்கர நாட்டிய மண்டபத்தில்
இவர்களின்
உளிச் சத்த சந்தத்தில்
கற்களும் எழுந்தாடும்
கனவுச்சிற்பங்கள் எழுந்துவந்து
கைதட்டி ரசிக்கும்..
மூளைக் கருவறைக்குள்
சிற்பங்கள் பிறந்தாலும்
மூலக் கருவறைக்கு வெளியேதான்
நின்று தொழவேண்டியிருக்கிறது
அவர்கள் கைபடைத்த
மூலவர் சிலையை...!
தாழ்வொன்றும் இல்லை.
தினம் ஓராயிரம் பேர் வழிபடும்
சிலைக்குத் தெரியும்...
அதன் இரத்த நாளங்களில்லா
செதில்கள்
இவர்களின் வேர்வை நீரில்
புனிதமாக்கப் பட்டிருப்பது...!
லெனினியமில்லை
மார்க்கசியம் இல்லை.
தெய்வச் சிந்தனையோடு
உழைக்கும்
உன்னதங்கள் கடந்த பாதை
இவர்களின் காலநிலை மாறாத
கவலைக்குரிய
நேர்கோட்டுப் பாதை...!